பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றடைந்தார். அந்நாட்டின் ஜியாங்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட பிரதமர் இன்று அதிகாலை சீனாவின் ஜியாங்க் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்புகம்பள வரவேற்புடனும் அந்நாட்டு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானநிலையத்தில் சிறுமி கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் மோடி வாங்கினார். அவரை நடன கலைஞர்கள் ஆடிப்பாடி வரவேற்றனர்.

6-ம் நூற்றாண்டில் புத்தமதத்தை பரப்பிய ஜியான் ஜாங் நினைவைப் போற்றும் வகையில் ஜியான் நகரில் உள்ள வைல்ட் கூஸ் பகோடா என்ற பாரம்பரிய வழிபாட்டு தலம் உள்ளிட்ட இடங்களை இந்திய பிரதமருக்கு சீன அதிபர் சுற்றிக்காட்டினார். பின்னர் அங்கிருந்து, தலைநகர் பெய்ஜிங் செல்லும் பிரதமர் மோடியை சீன பிரதமர் லி கெகியாங் வரவேற்று இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் பல ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.

சீனாவின் தொழில்நகரமான ஷாங்காய் செல்லும் மோடி அங்கு சீன தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்யுமாறு, வேண்டுகோள் விடுக்க உள்ளார். அதன் பின் மங்கோலியா செல்லும் பிரதமர் தென்கொரியாவுக்கும் செல்கிறார்.

Leave a Reply