நிலம் கையகப் படுத்துவதற்கான அவசரசட்டத்தை 3வது முறையாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. நிலம் கையகப் படுத்துவதற்கான அவசரசட்டம் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக பிறப்பிக்கப்பட்டது.

2வது முறையாக ஏப்ரல் 3-ந் தேதி அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட போதிலும் ராஜ்ய சபாவில் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் அவசரசட்டத்தை 3-வது முறையாக பிறப்பிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஒரு கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் அவசரசட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அரசியல்சட்டம் கூறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி கடந்தமாதம் 20-ந் தேதி தொடங்கியது. அதிலிருந்து 6 வாரங்களைக் கணக்கிட்டால், மே 31-ந் தேதிவரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் ஓர் அரசாணை மூலமாக அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கலாம். அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்பெறுவது அவசியம். பிரதமர் நரேந்திரமோடி தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 20-ந் தேதி நாடு திரும்புகிறார். அதன்பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தேவையான நடைமுறைகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அவசரசட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அதிகாரப் பூர்வமாக ஜனாதிபதி முடித்து வைக்கவேண்டும். அப்படி முடித்து வைக்குமாறு நேற்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஜனாதிபதிக்கு பரிந்துரைசெய்தது. இதனால் பிரதமர் மோடி, நாடு திரும்பியவுடன் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை மாதம் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. அப்போது நாடாளுமன்ற இருசபைகளின் கூட்டுகூட்டத்தை கூட்டி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Leave a Reply