டெல்லி சட்ட சபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) இரண்டாவது வாரம் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை இன்னும் சிலதினங்களில் வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. டெல்லி தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் தேர்தல்பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பா.ஜ.க. சார்பில் பிரசாரத்தை தீவிரப்படுத்த 20பேர் கொண்ட குழுவை அமித்ஷா அமைத்துள்ளார். இந்த தடவை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

இதன் காரணமாக பிரதமர் நரேந்திரமோடியும் அதிக கூட்டங்களில் பேச சம்மதித்துள்ளார். அவர் 12 முதல் 14 பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட உள்ளார்.

டெல்லியில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. இந்த 14 மாவட்டங்களிலும் மோடி தேர்தல்பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். வருகிற சனிக் கிழமை (10–ந் தேதி) மோடி பிரசாரத்தை தொடங்க உள்ளார். மோடியின் முதல் பிரசாரகூட்டம் ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. இதில் மராட்டியம், அரியானா. ஜார்க்கண்ட் மாநில பாஜக முதல்–மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மீண்டும் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் நாடெங்கும் இந்ததேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் எந்தகட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் பாஜக. 46 இடங்களை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. எனவே இந்த தடவை பாஜக.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply