வடநாட்டில் ரிஷிகேசத்தின் அருகில் உள்ள புராணப் பெருமை வாய்ந்தது திருநீலகண்ட மஹாதேவ் ஆலயம் . மலைக்கு மேல் சுமார் 1 600 மீடர் உயரத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு ஸ்வர்காஷ்டிரத்தில் இருந்து லஷ்மண் ஜூலாவிற்குச் சென்று அங்கிருந்து பஸ் அல்லது டாக்ஸி பிடித்துச் செல்ல வேண்டும் . லஷ்மண் ஜூலாவில் இருந்து இருபத்தி இரண்டு கிலோ தொலைவில் உள்ளது இந்த ஆலயம் .

வளைந்து வளைந்து மலை மீது செல்லும் பாதை மிக்க குறுகியதாக உள்ளது. இருபுறமும் இயற்கை அழகு சொட்டும் காடுகள் சூழ்ந்திருக்க, மேலிருந்து பாயும் கங்கை நதியின் அற்புத தோற்றமும் மனதை மயக்கும் . குறுக்கு வழியே நடந்து செல்லும் கரடு முரடான பாதையில் சென்றால் சுமார் பன்னிரண்டு கி.மீ உள்ள ஆலயத்தை அடையலாம். ஆலயத்திற்கு செல்வும் வழி நெடுகிலும் மலை மீது பல சிறு சிறு ஆலயங்கள் உள்ளன.

திருநீலகண்ட மஹாதேவ் ஆலயம் எழுந்த கதை

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்த பொழுது வெளி வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் தன் கைகளில் எடுத்துக் கொண்டு விழுங்கி விட விஷத்தின் கடுமையான வெட்பத்தினால் அவருடைய தொண்டை நீல நிறமாயிற்று. அந்த விஷத்தின் வெட்பத்தினால் அவதியுற்ற சிவபெருமான் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் குளுமைத் தரும் இடம் தேடி அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார். பங்கசா மற்றும் மதுமதி என்ற நதிகள் ஓடிக் கொண்டு இருந்த குளுமையான இடமான மணிகுட், விஷ்ணுகுட் மற்றும் பிரும்மகுட் என அழைக்கப்பட்ட மூன்று இடங்கள் சூழ்ந்திருந்த தனிமையான காட்டுப் பகுதியில் சென்று உறங்கத் துவங்கினார். விஷத்தினால் ஏற்பட்டிருந்த சூட்டைக் குறைக்க அந்த குளிர்ச்சியான இடம் துணை புரிந்தது.

இதற்கிடையில் தம்முடைய நன்மைக்காக விஷத்தை உண்டு விட்ட சிவபெருமானை காணாமல் பிரும்மா, விஷ்ணு முதல் அனைத்து தேவர்களும்; தேடலாயினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இப்படியாக நாற்பதாயிரம் வருடங்கள் ஓடி விட்ட நிலையில் கைலாயத்தில் இருந்த பார்வதி சிவபெருமான் உறங்கிக் கொண்டு இருந்த இடத்தை வந்தடைந்தாள் . எத்தனை உலுக்கியும் அவர் உறக்கம் கலையவில்லை. ஆகவே வருத்தம் அடைந்த பார்வதியும் அவர் கண் திறக்க வேண்டும் என பிரார்தனை செய்தபடி அங்கேயே தவம் இருந்தாள் .

அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த பிரும்மா மற்றும் விஷ்ணுவும் சிவபெருமான் கண் விழிக்க வேண்டும் என இரு இடத்தில் தவத்தில் அமர்ந்தனர் . இன்னும் இருபத்தி இரண்டாயிரம் வருடங்கள் ஓடின. ஆவர்கள் அனைவரின் பிரார்தனைக்கும் பலன் கிடைத்தது. சிவபெருமான் கண் விழித்தார். அனைவரும் மகிழ்சியுற்றனா, ஆனந்தக் கூத்தாடினர் .

அதன் பின் சிவபெருமானிடம் சென்ற அனைவரும் உலக நன்மைக்காக தாம் விழுங்கிய விஷத்தின் தாக்கத்தினால் அந்த இடத்தில் தம்மை மறந்து தூங்கிக் கொண்டு இருந்த ஆலமரத்தின் அடியிலேயே எழுந்தருளி அனைவருக்கும் அருள் புரியுமாறு கோரியதால் அவர் ஸ்வயம்பு உருவில் லிங்கமாக உரு எடுத்து மக்களுக்கு அருள் புரிந்து வரலானார். அந்த ஸ்வயம்பு லிங்கம் எழுந்த இடத்தில் பின்னர் ஆலயம் அமைந்தது. விஷத்தை உண்டு, "தொண்டை நீல நிறமாகி", அங்கு உறங்கி எழுந்தப் பின் லிங்க உருவம் எடுத்ததினால் அந்த ஆலயத்தின் பெயர் "திருநீலகண்டேஸ்வர்" என ஆயிற்று. லிங்க வடிவை எடுத்த அவருக்கு பிரும்மா , விஷ்ணு மற்றும் அனைத்து தேவர்களும் அங்கேயே பூஜை செய்து வழிபட்டனர். அவர்கள் அமர்ந்து தியானித்த இடங்களுடைய பெயரும் விஷ்ணுகுட் , பிரும்மகுட் , மணிகுட் என்று ஆயின. தேவர்களும் கடவுட்களும் சிவபெருமானை பூஜித்த இடம் என்பதினால் அது மிகவும் சக்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகின்றது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.