அயோத்தி ராம ஜன்ம பூமி பகுதியில் உள்ள 67 -ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களுக்கு வழங்கும் வகையில் மத்தியஅரசு சட்டம் இயற்ற முன்வரவேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொது செயலாளர் பிரவீன் பாய் தொகாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1994 ல் அப்போதைய குடியரசு தலைவர் சங்கர்-தயாள் சர்மா, உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார்.”அயோத்தியில் கோவில் இருந்ததாக ஹிந்துக்களும், அங்கு கோயில் எதுவும் இல்லை என்று முஸ்லிம்களும் வலியுறுத்துகின்றனர். எனவே, அயோத்தியில் அந்த இடத்தின் அடியில், கோயில் இருந்ததற்கான சான்றுகள் ஏதேனும் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெளிவான முடிவை உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்’ என்று சங்கர் தயாள் சர்மா எழுதிய கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.உச்ச நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தி, விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கேட்டிருந்தது.

மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்துக்கு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த இடம் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்படும். கோயில் இல்லையெனில் முஸ்லிம்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

இதன்பின் ராம ஜன்ம பூமி தொடர்பான அனைத்து வழக்குகளும் லக்னெü உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. அப்போது மத்திய அரசின் பதில் மனுவும் இந்த நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அந்த இடத்தில் கோயில் இருந்ததா, இல்லையா என்பது நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ய லக்னெü நீதிமன்றம் முடிவு செய்தது.

இதன்படி, ஜி.பி.ஆர். (கிரவுண்ட் பெனிட்ரேட்டிங் ராடார்) தொழில்நுட்பத்தின்படி ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்ட இடத்தின் மேல் மட்டத்தில் தூண்கள் இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, வெளிநாட்டு நிறுவனம் மூலம் விரிவான ஆய்வுகளை நடத்தியபோது தூண்களும், கோவில் சுவர்களும் இருப்பது கண்டறியப்பட்டது.இதன்பின் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ.) அகழாய்வு நடத்தியது.

முன்னதாக, ஹிந்து, முஸ்லிம் சமுதாயங்களைச் சேர்ந்த 2 கூடுதல் ஆட்சியர், 9  தொல்லியல் நிபுணர்கள் முன்னிலையில் இந்த அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது.இந்த அகழாய்வின் நிறைவாக, 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 அடுக்குள்ள கோவில் இருந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுவர்களும், 54 தூண்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் அந்த இடத்தில் கோவில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளும் ஏகமனதாக இதை ஏற்றுள்ளனர். கோவில் இருந்த இடமே ராம ஜன்ம பூமி ஆகும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில், ராம ஜன்ம பூமி பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.இதை பிரகடனப்படுத்துவதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற முன்வர வேண்டும்.ராம ஜன்ம பூமி ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலம் ஆகும்.

இந்த இடத்தை எந்த சூழ்நிலையிலும் பிரிவினை செய்யவோ, அயோத்தியில் எந்த இடத்திலும் புதிதாக மசூதி கட்டவோ அனுமதிக்கமாட்டோம். விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான வரை படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை வலியுறுத்தி ஸ்ரீ ஹனுமன் சக்தி ஜாக்ரண் சமிதி தொடர்ந்து பாடுபடும் என்றார் பிரவீன் பாய் தொகாடியா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.