கடவுளை அடைவது, கடவுளை அடைவது' என்கிறோமே, அது என்ன சாத்தியமானதா? அப்படி ஒன்று உண்டோ? கடவுளை அடைவது என்றால் என்ன ? மரணமடைந்த அவனோடு ஐக்கியமாவதா?
இல்லை மனத்தாலே கடவுளை அடைவதே ஞானிகளால் சொல்லப்பட்ட மார்க்கம். தினசரி கோவிலுக்குப் போவதல்ல; அது

வெறும் சடங்கு; கடமை. சொல்லப்போனால், சமயங்களில் அது வேஷமாகவும் தோன்றுவதுண்டு. கடவுளை அடைய ஒரே வழி, தியானம்.

தியானம் என்பது என்ன ?

ஒரே பொருளை முழுக்க அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு, பற்றோடு,
பிரியத்தோடு ஆழமாகச் சிந்தித்தல். பல நேரங்களில், ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப நம் நினைவுக்கு வரும். நமக்கு தெரியாமல், ஆன்மா அந்த விஷயத்தில் ஐக்கியப்பட்டு விட்டதென்பதே அதன் பொருள்.

அது காதலாக இருக்கலாம்; பாசமாக இருக்கலாம்; ஆனால் அது இறை வழிபாடாக
இருந்தால், ஈடு இணையில்லாத ஞானம் கைகூடும். எது நமக்குப் பிரியமானதோ அதன் வடிவமாகவே நாம் ஆகிவிடுவோம். நமக்கு மஞ்சள் வர்ணம்தான் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், மஞ்சள் நிறத்தில் எதைப் கண்டாலும் நமக்குப் பிரியம் வரும்.

ஆன்மா, ஒன்றைக் குரங்குப் பிடியாகப் பிடிப்பதற்குப் பெயரே 'தியானம்' அப்படிப்பட்ட தியானத்தை ஒருவன் கைக்கொண்டு விட்டால், அவனுடைய நிலை முற்றிலும் வேறாகிவிடும். 'நான் யார்' என்ற கேள்விக்கே அங்கே இடம் இருக்காது.

நம்மைவிட உயர்ந்தவர்கள் என்னும் ஞானிகள், மேதைகள் பலர் உலகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் உள்ள பேதமே, அவர்கள் ஈசுவரனை
அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள். அதனால் ஈசுவரனும் தன்னைப்போல்
ஒருவனே என்று கண்டுகொண்டவர்கள். ஆகவேதான், இறைவனுக்குச் சமமாக
அவர்களை நாம் வணங்குகிறோம்.

வீணை வாசிப்பவன் ஒருவகை தியானம் செய்கிறான். அது ஒரு ஞானியின் தியானத்தைவிட உன்னதமானது. அவன் மனம் ராகத்தில் இருக்கிறது. வாய் அதையே முணுமுணுக்கிறது; கை அதையே விளையாடுகிறது. உடம்பின் ஆரோக்கியத்துக்கும் தியானம் உயர்ந்தது.

மகாகவி பாரதி ஒரு முறை …

'அச்சத்தினாலே நாடி தளர்கிறது;
கோபத்தினாலே நாடித்துடிப்பு அதிகமாகிறது.
பயத்தினாலே நாடி அடங்கி ஒடுங்குகிறது;
ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல் இயங்குகிறது;
இந்த வரைமுறையற்ற இயக்கத்தினாலே மரணம் சம்பவிக்கிறது.'
இதை வரைப்படுத்துவதே தியானம்.

ஆசை, அச்சம், மயக்கம் அனைத்திலிருந்தும் விடுதலை பெறவைப்பதே, தியானம்
ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே தியானம் என்றாலும், தெய்வத்தைப் பற்றி
நிற்பதே அனைத்திலும் உயர்ந்தது. ஆகவே தெய்வத்தை தியானியுங்கள்.
உங்கள் தேகமும், ஆன்மாவும் காப்பாற்றப்படும்.

நன்றி ; கவி ராஜன் சேலம்

கடவுளை அடைவது, கடவுளை அடைவது' என்கிறோமே, அது என்ன சாத்தியமானதா? அப்படி ஒன்று உண்டோ? கடவுளை அடைவது என்றால் என்ன ? மரணமடைந்த அவனோடு ஐக்கியமாவதா?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.