தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம் நம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும் தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே எப்போதும் அக்கறைப்படுவதும், அதற்காக தனது முக்கியமான வேலைகளையும், கடமைகளையும் நிறுத்தி வைத்து விட்டு, அடுத்தவர்களின் ஏக்கங்களையும், தேவைகளையும் நிறை வேற்றுவதையே தனது கடமையாக எண்ணுவர்.

இப்படி தன்னால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவர்கள் நன்றி உணர்வு இல்லாமல் இவருக்கு உதவி எதையும் செய்வதில்லை என்பது மட்டும் அல்லாமல் இவருக்கு தொந்தரவு தருவார் மேலும் இவரது முன்னேற்றத்தையும் தடுப்பார் .

 இப்படி யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது. எனது 12 வருட ஜோதிட ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்த ஜோதிட ரகசியம் இது.இப்படிப்பட்டவர்களின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருக்கும்.  

இந்த பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது? 

ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது கொலை அல்லது தற்கொலை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஐத் தாண்டும்போது அது பித்ரு தோஷமாக வடிவெடுத்து,நமது பிறக்கும் நேரத்தில் ராகு கேதுக்கள் திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும்.அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும்.இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால்,அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.(1.திருமணம் நடைபெறாது. 2.குழந்தை பிறக்காது 3.எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது 4.பூர்வீகச் சொத்துப் பிரச்னையாகவே இருக்கும் 5.ஏதாவது ஒரு தீராத நோய் இருந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும் 6.குடும்பத்தில் வெள்ளிக்கிழமைகளில் திடீரென சண்டை வந்து கொண்டே இருக்கும்) என்ன அறப்பணிகள் செய்தாலும்,அதற்குரிய புண்ணியப்பலன்கள் அவர்களை சிறிதுகூட வந்து சேராது. ஏனெனில், இரண்டே இரண்டு காரணங்கள் அப்படி புண்ணியத்தை உரியவர்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடுகின்றன.

தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டுள்ள முன்னோர்களுக்கு உரிய சாந்திப்பரிகாரமான பித்ரு தோஷ நிவாரணம் செய்யாமல் இருப்பது!இதனால் பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

சரி எப்படி பித்ரு தோஷம் உருவாகிறது? 

ஒருவரின் அப்பாவின் அத்தைக்கு அவரது ஜாதகப்படி ஆயுள் 61 வயது என்று வைத்துக்கொள்வோம் ஆனால், அவர் தீராத வயிற்று வலியால் தனது 27 வயதில் தற்கொலை செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்;அப்படி அவர் தற்கொலை செய்து விட்டதால், அவர் எந்த இடத்தில் தற்கொலை செய்தாரோ அந்த இடத்தில் அவருடைய 27 ஆம் வயதில் இருந்து 61 ஆம் வயதுவரை ( அவருக்கு முறைப்படி ஆயுள் முடியும் வரை) அவரது ஆத்மா தரையிலிருந்து 20 சதுர அடிகளுக்கு சுற்றிக்கொண்டே இருக்கும்.தற்கொலை செய்துவிட்டதால், அவருக்கு நம்மைப் போலவே தினமும் பசிக்கும் தாகம் எடுக்கும் ஆனால் அவரால் சாப்பிட முடியாது நீர் அருந்த முடியாது.சாப்பிடாமலும், தாகத்தோடும் 52 வருடங்களுக்கு ஒரு ஆத்மா தவியாய் தவித்தால் என்னாகும்?

அந்த அத்தையின் 61 ஆம் வயதில் அவரது உயிரானது எமலோகத்துக்குச் செல்லும்.அங்கே இவரது பாவ புண்ணியக்கணக்கு பார்த்தால், இவர் 52 வருடங்களாக எந்த பாவமும் புண்ணியமும் செய்யாமலிருப்பது தெரியவரும்.உடனே, இவரை கொதிக்கும் அறையில் அல்லது குளிர்ந்த அறையில் காக்க வைத்து விடுவார்கள். இந்த அறையில் இவரைப் போலவே நமது முன்னோர்களில் ஐந்து தலைமுறை வரை யாரெல்லாம் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்டார்களோ அவர்களும் இருப்பார்கள்.அவர்களின் ஒட்டு மொத்தசாபமும் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்.அப்படி இருப்பது போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவர் மட்டும் பித்ரு தோஷத்துடன் பிறப்பார்.அதாவது, அந்த அப்பாவின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களின் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு பித்ருதோஷம் இருந்தே தீரும்.

பித்ரு தோஷத்தைத் தீர்க்கக் கூடிய திலா ஹோமம் செய்ய வேண்டும். காசி, கயா, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கொடுமுடி, ராமேஸ்வரம், விஜயாபதி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் சில நகரங்களில் முறையாக புரோகிதம் செய்பவர்களைக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு திலா ஹோமம் செய்தபின்னர், வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், வேறு எவர் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், ஓராண்டு வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும், இப்படி 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் பித்ருதோஷ நிவாரணம் முழுமையடையும். அது வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது.இப்படிச் செய்து முடிப்பத ன் மூலமாக, தற்கொலை செய்த நமது முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கும்.யார் பித்ரு தோஷ நிவாரணம் முறையாக செய்து முடிக்கிறார்களோ,அவர்களுக்கு நீண்டகால பிரச்னைகள் தீர்ந்துவிடும் அல்லது நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறும்.

 இப்படி பித்ரு தோஷ நிவாரணம் நான் செய்யப்போகிறேன் என்று பிறரிடம் சொல்வதால், அதைச் செய்து முடிப்பதில் பல தடங்கல்கள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவ்வளவு பொறாமை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு இருக்கிறது.

ஜோதிடமுனி, கை.வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.