ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்!!!இன்று தியானத்தை பல்வேறு வழிமுறைகளில்,பல்வேறு விதங்களில் பலர் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.அனைத்துமே வெளி வித்தியாசங்களைக் கொண்டவை, இவைகளை தினமும் பின்பற்றி வந்தால், ஒரு கட்டத்தில் நாம் அனைவருமே ஒரே மாதிரியான தியான அனுபவங்களை ஒரு கட்டத்தில் எட்டிவிடுவோம். ஆனால் அந்த

அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது;அப்பேர்ப்பட்ட அனுபவங்களை அது தரும். இருப்பினும் பல தமிழ் சகோதர,சகோதரிகளுக்கு தினமும் ஏதாவது ஒரு தியானம், ப்ராணயாமம் செய்து வந்தாலும் அவர்களின் கர்மத்தடை அவர்களை ஆத்ம வாழ்க்கை எனப்படும் ஆன்மீக வாழ்வில் முன்னேற விடாமல் தடுக்கும் சக்தியுடையது. அவைகளை நமது பிறந்த ஜாதகப்படி கண்டறிந்து அதற்குரிய தேவதை அல்லது தெய்வத்தை தேடி கண்டறிந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நிமிடங்களில் வழிபட்டால், நமது ஆத்ம வாழ்க்கையில் முன்னேற்றத்தை உறுதிபடுத்திட நம்மால் முடியும்.

ஆனால்,நமது பிறந்த ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அதற்குரிய தெய்வத்தைக் கண்டறிந்து சொல்ல ஊருக்கு ஒரு திறமையான ஜோதிடரை எங்கே போய்த் தேடுவது?பணத்தைச் சம்பாதிக்கவே நேரம் போதவில்லை;வீட்டில் நமது குழந்தை என்ன படிக்கிறது? அது இன்று பள்ளி அல்லது தெருவில் என்னமாதிரியான பிரச்னையை எதிர்கொண்டது என்பதை கேட்டறியக்கூட நமக்கு நேரமில்லை;எனவே,கடவுள்களுள் முதன்மையான கடவுளான பைரவரை வழிபடுவதே சிறந்தது.

ஒரே ஒரு பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நமது கர்மவினைகளும் தீர்ந்துவிடத் துவங்கும், நமது தியானமும் கைகூடத் துவங்கும், அப்பேர்ப்பட்ட பைரவர் அட்டவீரட்டானங்களில் ஒன்றான வழுவூரில் கிருத்திவாஸர் என்ற பெயரில் சிவலிங்கமாகக் காட்சியளித்து வருகிறார். இந்த ஊரானது மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 8 கி.மீ.செல்ல வேண்டும்; 8 வது கி.மீ.தூரத்தில் வலப்புறம் திரும்பி அரைக் கி.மீ.தூரம் சென்றால் வழுவூர் வரும்.(முருகக்கடவுள் திருவிளையாடல்கள் நடத்திய இடங்களே அறுபடை வீடுகளாக இருக்கின்றன, “அதே போல பைரவப் பெருமான் திரு விளையாடல்கள் நடத்திய இடங்கள் அட்ட வீரட்டானங்கள் என்று எட்டு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன”. இந்த எட்டு கோவில்களில் பைரவப் பெருமான் சிவலிங்க வடிவில் அருள் பாலித்துவருகிறார் மிகுந்த பூர்வ புண்ணியமும், பைரவ தரிசனத்துக்கு ஏங்குவோரும் மட்டுமே இந்த அட்டவீரட்டானங்களுக்கு  சென்று வழிபாடு செய்ய இயலும்)

இந்த ஊருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளன்று வர வேண்டும், அந்த நாளில் வரும் இராகு காலத்தில் இவரை வழிபாடு செய்து, இந்தக் கோவிலில் மூலவருக்கு முன்பாக வடக்கு நோக்கி மஞ்சள் துண்டினை விரித்து அமர வேண்டும், இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து கைகளை மடக்கி, நெற்றியில் விபூதி பூசி ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;அல்லது நமது தியான முறையைப் பின்பற்ற வேண்டும். இப்படிக் கோவிலுக்குள் செய்வதில் சிரமம் இருப்பின் இந்த ஊரில் நமது அறையில் சிவனை நோக்கியவாறு ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால்,தியானம் கைகூடத்துவங்கும். இதன் மூலமாக தியான வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படத் துவங்கும்;

மேலும் இவர் சனியின் பாதிப்புக்களை நீக்குபவராகவும் இருக்கிறார்.நவக்கிரகங்களில் சனிபகவானுக்கு நவக்கிரகப்பதவியைத் தந்தவர் பைரவரே! சனியின் குருவாக பைரவர் இருப்பதால், பைரவ வழிபாடு செய்பவர்களை சனி ஒருபோதும் துன்புறுத்தமாட்டார்;

21.12.2012 முதல் டிசம்பர் 2014 வரை துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும், மீன ராசிக்கு அஷ்டமச்சனியும், கடக ராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியும், விருச்சிகராசிக்கு விரையச்சனியும், கன்னிராசிக்கு பாத / வாக்குச்சனியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவே, இந்த ராசிக்காரர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் வழுவூர் கிருத்திவாஸர் கோவிலின் ஈசான மூலையில் அமைந்திருக்கும் பைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;இங்கு ஒரே சன்னதியில் பைரவரும், சனிபகவானும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சன்னதிகள் தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே இருக்கின்றன. இந்த சன்னதிகளில் பின்வருமாறு பைரவர் வழிபாடு செய்தால், அவர்களுக்கு சனியின் தாக்கம் இராது என்பது அனுபவ உண்மை ஆகும்.

இங்கே எட்டு சனிக்கிழமைகளுக்கு மேற்கூறிய ராசிக்காரர்கள் வர வேண்டும். இங்கே எட்டு தீபங்களை நல்லெண்ணெயில் ஏற்ற வேண்டும் ஏற்றியப்பின்னர், பிறகு சிகப்பு அரளிமாலை, சந்தனாதித்தைலம்,அத்தர், புனுகு, ஜவ்வாது போன்றவைகளைக் கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அவ்வாறு அபிஷேகம் செய்யும் போது, பைரவரின் 108 போற்றி அல்லது பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது பைரவரின் மூலமந்திரத்தை அவர் முன்பாக நின்ற நிலையில் ஜபிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்து வந்தால், இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு சனியின் தாக்கம் இராது.
 முற்பிறவிக் கர்மவினைகள்
இந்த வழுவூரில்தான் ஐயப்பன் பிறந்தார்; இந்த வழுவூருக்கு ஒரே ஒருமுறை ஒருவர் வந்தாலே அவரது முற்பிறவிக் கர்மவினைகள் 70% நீங்கிவிட்டது என்றே அர்த்தம் ஆகும்.இந்த வழுவூரில் இருக்கும் நாளன்று முடிந்தவரையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து பைரவ துதி/மந்திரத்தை ஜபித்து வந்தால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

இப்படிக்கு ஜோதிட முனி,கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.