அன்ன தானம் (மகேஸ்வர  தானம்) முன்னொரு காலத்தில் ஸ்வேது என்ற மன்னன் காசியை ஆண்டு வந்தான். அவன் காசியில் இருந்த ஒரு மன்னனின் பரம்பரையில் வந்தவன். அவனுடைய சகோதரரான சுதேவா என்பவர் பற்றிய செய்தி மகாபாரத அனுசாசன பர்வ காண்டத்தில் உள்ளது. ஸ்வேது நல்ல பண்புகளைக் கொண்டவர். தான தர்மங்களை நிறைய செய்தவர். யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு ஏதேனும்

கொடுத்து அனுப்புவார். ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என எதைக் கேட்டாலும் அவற்றை தருவார்.

அவர் கர்ணனை மிஞ்சியவர் தானத்தில். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தனது ராஜ்ய காலத்தில் அன்ன தானம் செய்யவே இல்லை. ஒருமுறை பசியோடு வந்தவர்களுக்கு கை நிறைய பொற் காசுகளைக் கொடுத்து அனுப்பினார். இன்னொரு முறை பசியோடு வந்தவர்களுக்கு ஆடைகள், ஆபரணங்களை தந்து அனுப்பினார். இப்படியாக பசி என்று வந்தாலும் சரி, உதவி என்று வந்தாலும் சரி ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என பலவற்றையும் கொடுத்தாலும், வந்தவர்களுக்கு ஒரு கை அன்னமிட்டு அனுப்பியது இல்லை. அவருடைய மனதில் இருந்த எண்ணம் என்ன என்றால், பசி என்று வந்தால் அவர்களுக்கு உணவைக் கொடுத்து விட்டால் அதோடு அவர்கள் பசி அந்த நேரத்தில் மட்டுமே அடங்கும். அதன் பின் அவர்கள் சென்று விடுவார்கள். அடுத்த நாள் மீண்டும் வேறு எங்கும் சென்று பிச்சை எடுப்பார்கள். ஆகவே பொருளாகக் கொடுத்தால் அதை விற்று சில நாட்களுக்கேனும் உணவு உண்ண வழி செய்து கொள்வார்கள் என்றே எண்ணினார். ஆனால் அவருக்குப் புரியவில்லை, பசி வேலையில் சோறு கிடைக்காவிடில் பொருளையா சாப்பிட முடியும்? அமைச்சர்கள் எத்தனையோ கூறியும் மன்னன் தன்னுடைய அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

காலபோக்கில் மன்னன் மரணம் அடைந்தான். அவன் செய்திருந்த தானங்களினால் சொர்க்க லோகத்துக்கு சென்றவன் பசியால் துடித்தான். அங்கு அவன் ஆத்மாவிற்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. பசியால் துடித்த ஆத்மா பிரும்மாவிடம் சென்று தான் வாழ்நாளில் செய்த தான தருமங்களைக் கூறி சொர்கலோகத்தில் உள்ள தனது நிலையைக் கூறி நியாயம் கேட்டது. பிரும்மா கூறினார் 'ஸ்வேது, நீ நிறைய தான தர்மங்களை செய்துள்ளாய். ஆனால் இந்த உலகிலேயே பெரும் தானமான அன்னதானத்தை நீ செய்யவில்லை. அதனால்தான் உனக்கு இந்த கதி வந்துள்ளது. நீ பூஉலகில் என்ன பொருட்களை தானம் செய்தாயோ, அந்தப் பொருட்கள்தான் உனக்கு இங்கும் கிடைக்கும். ஆகவே நீ செய்துள்ள புண்ணியத்தினால் உன் உடல் இன்னமும் கங்கை நதியில் மிதந்து கொண்டு இருக்கின்றது. அங்கு போய் உன் உடலை நீயே அறுத்து உண்ண வேண்டியதுதான். வேறு வழி இல்லை ' என்றார்.

தேவ ச்தூலத்தில், அதாவது உடலே இல்லாத ஒரு ஆத்மா பூமிக்குச் சென்று அங்குள்ள உடலை எப்படி உண்ண முடியும். பசி தாங்க முடியாமல் அவனை வருத்தியது. ஆகவே வேறு வழி இன்றி பூமிக்கு சென்றான். கங்கையும் பிரயாகையும் சேரும் இடத்தில் சென்று நதியில் மூழ்கி எழுந்தது. ஆனாலும் பசியும் அடங்கவில்லை, பசியைப் போக்கிக் கொள்ளும் வழி தெரியவில்லை. அந்த நதியில் குளித்தால் அனைத்து பாவங்களும் போகும் என்பதை அறிந்திருந்த ஆத்மா அதை செய்தும் பசி போகவில்லையே என வருத்தமுற்று, நதிக் கரையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கையில், நதிக் கரையில் சென்று கொண்டு இருந்த அகஸ்திய முனிவரைக் கண்டது. அகஸ்திய முனிவரிடம் ஓடோடிச் சென்ற ஆத்மா தனது நிலையைக் கூறி தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வழி கூறி உதவுமாறு அவரை வேண்டியது. அவரும் 'நீ பிரயாக நதிக்கரையில் அன்னதானம் செய்தால் உன் பசி அடங்கும்' என்றார். மரணம் அடைந்து தேவ சரீரத்தில் உள்ள தான் எப்படி அன்ன தானம் செய்வது என்ற கேள்வியை அது அகஸ்தியரிடம் எழுப்ப அவர் கூறினார், 'உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் அதை யாருக்காவது கொடுத்து அன்ன தானத்தை செய்யச் சொல்லி பசியைப் போக்கிக் கொள்' என்று மீண்டும் அறிவுறுத்தினார்.

மீண்டும் அதே பிரச்சனை, தேவ சரீரத்தில் உள்ளவனிடம் என்ன பொருள் இருக்க முடியும்? ஸ்தூல சரீரத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கயற்றிக் கொடுக்க முடியும். இப்போது எப்படி அதை செய்ய முடியும். உடலே இல்லாதவன் என்ன பொருளை வைத்திருக்க முடியும்? ஆனாலும் அவன் நம்பிக்கையை இழக்க விரும்பாமல் அகஸ்தியரிடம் தன்னுடையப் பசியைப் போக்கிக் கொள்ள தனக்கு எந்த விதத்திலாவது உதவுமாறு கேட்டு கதறினான்.

அகஸ்தியர் மனம் நெகிழ்ந்தது. ஒருகணம் யோசித்தார். அந்த மன்னன் வாழ்நாளில் பல தர்ம காரியங்களை செய்துள்ளான். யாரையும் துன்புறுத்தவில்லை. கொடுமைப் படுத்தவில்லை. அவன் செய்த ஒரே தவறு அன்ன தானம் செய்யவில்லையே தவிர அவன் செய்யாத தானமே இல்லை என்ற அளவிற்கு தானம் செய்துள்ளான். ஆகவே அவனுக்கு உதவுவது தன கடமை என்பதை உணர்ந்தார்.

'சரி அப்படி என்றால் உன் புண்ணியத்தில் ஒரு பகுதியைக் கொடு. நான் உனக்கு உதவுகிறேன்' என்றார். ஸ்வேதுவின் ஆத்மாவும் சற்றும் தயங்காமல் தனது புண்ணியத்தில் பாதியை அவரிடம் அங்கேயே கொடுப்பதாக சத்தியம் செய்து கொடுக்க, அகஸ்திய முனிவர் அந்த புண்ணியத்தை பெற்றுக் கொண்டு, தனது சக்தியினால் அதற்கு ஒரு உருவகம் கொடுத்தார். அதை ஒரு தங்க நகையாக்கி தன்னுடைய சீடரிடம் தந்தார்.

உடனே கடைவீதிக்குச் சென்று அதை விற்று, உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். அந்த சிஷ்யரும் தாமதிக்காமல் அந்த நகையை எடுத்துச் சென்று கடை வீதியில் விற்று விட்டு, அதற்க்கான பணத்தில் அரிசி, தானியங்கள், பருப்புக்களை வாங்கி உணவு தயாரித்துக் கொண்டு வந்து அகஸ்திய முனிவரிடம் கொடுக்க அவரும் அதை கங்கைக் கரையில் இருந்த அனைவருக்கும் அன்ன தானம் செய்யுமாறு கூறினார். அந்த அன்னதானத்தை செய்தவுடன் ஸ்வேதுவின் பசி உடனே ஒரு மின்னலைப் போல அகன்றது. அகஸ்திய முனிவருக்கு ஸ்வேதுவின் ஆத்மா நன்றி கூறி விட்டு, மீண்டும் மேலுலகம் சென்றுவிட்டது. அதன் பின் ஸ்வேதுவின் ஆத்மா பசி என்ற கொடுமையை அனுபவிக்கவே இல்லை.

நீதி: நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். நாம் இறந்தப் பின் பொருளும், பொன்னும் நம்முடன் மேலுலகத்துக்கு வருவதில்லை. தானங்கள் பெற்றுத் தரும் புண்ணியங்களே நம்முடன் வருகின்றன. தானங்கள் பல வகை உண்டு. பொதுவாக அனைத்தையும் விட மேலான தானமான வஸ்த்ர தானத்தை மஹா தானம் என்பார்கள். ஆனால் தானங்களிலேயே சிறந்த தானம் வஸ்த்ர தானத்தை விட மேலான அன்ன தானமே. அன்ன தானத்தை மஹா தானம் என்றல்ல, மகேஸ்வர (சிவபெருமான்) என்பார்கள். அதாவது மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அது பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.