நடப்பு கரீஃப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு 10 சதவீதம் சரிவடைந்தது நடப்பு கரீஃப் பருவத்தில் (ஜுன் – அக்டோபர்) நெல் சாகுபடி பரப்பளவு 10 சதவீதம் சரிவடைந்து 1.44 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது. இது 2011-ஆம் ஆண்டின் இதே பருவத்தில் 1.61 கோடி ஹெக்டேராக இருந்தது. பருவமழை தாமதமாக தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இனி வரும் வாரங்களில் மழை நிலவரம்

திருப்தி கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கும் என மத்திய வேளாண் அமைச்சகத்தின் செயலாளர் ஆஷிஷ் பகுகுணா தெரிவித்தார்.

நாடு முழுவதுமாக பருவமழை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. மழை பற்றாக் குறையால் பஞ்சாப், அரியானா மாநிலங்களும், குஜராத், கர்நாடகா மற்றும் மாகராஷ்டிரா மாநிலங்களில் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மழை தாமதமானதால் பல்வேறு பயிர்களுக்கான விதைப்பு பணிகளும் தாமதமடைந்துள்ளன. இது வேளாண் உற்பத்தியை பாதிக்கும் என பகுகுணா கூறினார்.

நடப்பு பருவத்தில் நெல் மட்டுமல்லாமல் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சாதாரண தானியங்கள் பயிரிடும் பரப்பளவும் குறைந்துள்ளது. பருப்பு சாகுபடி பரப்பளவு 58.50 லட்சம் ஹெக்டேரிலிருந்து 40.10 லட்சம் ஹெக்டேராக சரி வடைந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் பரப்பளவு 1.21 கோடி ஹெக்டேரிலிருந்து 1.09 கோடி ஹெக்டேராக உள்ளது. சாதாரண தானியங்கள் சாகுபடி பரப்பு 1.26 கோடி ஹெக்டேரிலிருந்து 95.40 லட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பருத்தி சாகுபடி பரப்பளவும் சரிந்துள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கரீஃப் பருவத்தில் பருத்தி பயிரிடும் பரப்பளவு மொத்தம் 92.40 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது தற்போது 83.70 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

எனினும் மற்றொரு முக்கிய பணப்பயிரான கரும்பு சாகுபடி பரப்பளவு ஓரளவு உயர்ந் துள்ளது. சென்ற ஆண்டு கரீஃப் பருவத்தில் 50.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. இது தற்போது 53 லட்சம் ஹெக்டேராக விரிவடைந்துள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தியும் சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply