பகவத் கீதையில் ஒரு சந்தேஹம் அந்த மஹாவித்வான் உள்ளே நுழைகிறார். அவர் உடம்பில் அகலக் கரை வைத்த பட்டு வேஷ்டியும், உத்தரீயமும். கைகளில் பளபளக்கும் தங்கத் தோடாக்கள். மார்பில் ரத்தினப் பதக்கம் பொறித்த கனமான தங்கச் சங்கிலி. கூடவே தங்கப் பூண் பதித்த நீண்டதொரு ருத்ராக்ஷ மாலை. அவரைப் பார்த்தாலே மெத்தப் படித்து, மிகப்பல கௌரவங்கள்

பெற்ற ஒரு மஹா வித்வான் எனச் சொல்லாமலே புரிந்துவிடும். பெரியவாளுக்கு தண்டனிட்டு நமஸ்காரங்களைச் செலுத்தியபின், சற்று மெதுவாகக் கிட்டே வந்து, வலது கையால் வாய் புதைத்து……]

"பெரியவாகிட்ட ஒரு விஞ்ஞாபனம். எனக்கு பகவத் கீதையில் ஒரு சந்தேஹம்" எனக் கூறி அமர்கிறார்.

பெரியவா உடனே அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து: "எல்லாரும் முதல்ல இந்த வித்வானுக்கு மூணு ப்ரதக்ஷிணம் பண்ணுங்கோ!" என ஆக்ஞை பிறப்பிக்கிறார்.

மடத்துச் சிப்பந்திகளுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே அதிர்ச்சி! வித்வானுக்கும் தான்!

"எதுக்கு இதெல்லாம், பெரிவா?" எனப் பதைபதைக்கிறார்.

"பகவத் கீதையின் ஒவ்வொரு வார்த்தையைப் படிச்சதுமே, அதுல எனக்கு ஆயிரம் சந்தேஹங்கள் தோணறது. உங்களுக்கோ ஒரே ஒரு சந்தேஹந்தான்! என்ன ஒரு வித்வத்! என்ன ஒரு அறிவு! அதனாலத்தான் இவாளையெல்லாம் உங்களைப் ப்ரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன்."

நடமாடும் தெய்வம் அமைதியாகப் புன்னகைத்தபடி பதிலிறுக்கிறது!

அவ்வளவுதான்! அந்த மஹா வித்வானின் கர்வம், ஆணவம் அனைத்தும் நொறுங்கிப் பொடிப்படி ஆகிறது. அவரால தனது குனிந்த தலையை நிமிர்த்தக்கூட முடியவில்லை.

"ம்ம்ம்.. என்ன சந்தேஹம்? சொல்லுங்கோ" தெய்வம் மேலும் அன்புடன் கேட்கிறது.

இவரும் தயங்கித் தயங்கிப் பணிவுடன் தனது சந்தேஹத்தைக் கேட்க, "அது"வும் பொறுமையாக அவருக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது!

"தன்யனானேன்!" புளகாங்கிதத்துடன், கர்வமெல்லாம் மறைந்து அந்த மஹா வித்வான் தெய்வத்திற்கு சாஸ்திரங்களில் சொல்லியபடி அஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்திருக்கிறார்.

அவருக்குத் தக்க மரியாதைகளையும், கௌரவத்தையும் அளித்து, தெய்வம் அருள் பாலிக்கிறது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.