ஊர் உலகம் அனைத்தும் ஒப்புக் கொண்ட உண்மையல்லவா, பாரதி தேச பக்திக் கவிஞன்தான் என்பது. அது சரி! சிலருக்கு இன்னும் அந்த சந்தேகம் இருக்கிறதே! அதைப் பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்களே! அதற்காக சில கருத்துக்கள் இங்கே.

மகாகவியின் "ஸ்வதேச கீதங்கள்" எனும் நூல் 1908இல் முதன் முதலாகப் பிரசுரம் ஆனது. 1909இல் அதன் இரண்டாம் பாகம் "ஜன்ம பூமி" எனும் பெயரில் வெளியானது. தென்னாப்பிரிக்கா வாழ் தமிழர்கள் 1914இல் "மாதா மணிவாசகம்" எனும் பெயரில் வெளியிட்டனர். 1919இல் பரலி சு.நெல்லையப்பர் "நாட்டுப் பாட்டு" என்ற தலைப்பில் வெளியிட்டார். இவை அனைத்தும் தேசபக்திப் பாடல்கள். இவை வெளிவந்த காலகட்டத்தைச் சற்றே நினைவு படுத்திப் பாருங்கள். "இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்" என்று ஆங்கில ஏகாதிபத்தியம் அடக்குமுறைகளைக் கையாண்ட காலகட்டத்தில், இந்த நாட்டைப் பற்றிப் பாட பாரதியைத் தூண்டிய சக்தி எது? தேசபக்தியா? நான்கு வரி எழுதி, நாற்பதாயிரம் ரூபாய் சன்மானம் பெறும் திரைப்படப் பாடல் ஆசையா?

இந்த நாட்டைத் தாயென்று வணங்குவோம் என்பது அவர் எழுப்பிய முதல் கோஷம். "வந்தேமாதரம்" என்போம் என்று சொன்ன கையோடு, 'எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்' என்று அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கிறார். இந்தப் பாடல் 'ஆனந்தக் களிப்பு' எனும் மெட்டில் அமைந்தது. அப்படியானால், என் நாடு, தாய் நாடு என்று சொல்லும் போதே மனத்தில் ஆனந்தம் கொப்புளிக்கிறது என்றால் அது தேசபக்தி இல்லாமல் வேறு என்னவாம்?

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி, ஜாதி வேறுபாடுகள் மண்டிக் கிடந்த நேரம். கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.இராமமூர்த்தி ஒரு முறை சொன்னார் (நேரில் கேட்ட செய்தி இது), தானும் தோழர் சீனிவாச ராவும் தஞ்சாவூர் மாவட்ட நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி, கெளரவமான வாழ்க்கையும், வருமானமும் கிடைக்கச் செய்யப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் மாதாமாதம் அமாவாசைக் கூட்டங்கள் நடத்துவார்களாம். அவை பெரும்பாலும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் சேரிப்பகுதிகளில் நடக்குமாம். கூட்டம் முடிந்த பிறகு இரவு உணவு அங்குள்ள ஒரு தோழரின் வீட்டில் தரப்படுமாம். அப்போது அங்கு வசிக்கும் சில பெரியவர்கள் இவர்களிடம், ஐயா உங்களுக்கு உணவு இட்டால் எங்களுக்குப் பாவம். மறுபடியும் நாங்கள் இப்படிப் பிறந்து சிரமப்பட வேண்டுமா? போங்கய்யா, வேறு எங்காவது சாப்பிடுங்கள் என்பார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் மனங்களில் தங்களைப் பற்றிய ஒரு தாழ்வு உணர்ச்சியை ஊட்டி வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நிலைமையில், அவர்கள் மனம் மாறி எழுந்து நின்று

"வேதியர் ஆயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே, ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி, ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?"

என்று கேட்க வைத்தவன் அல்லவா பாரதி. தீண்டாமை எனும் பேயை அறவே ஒழிக்கப் புறப்பட்ட சண்டமாருதமாக அல்லவா பாரதி திகழ்ந்தான்.

"உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின், வேதியரோ அன்றி வேறு குலத்தவரோ நாங்கள் அனைவரும் ஒன்றே" என்று உரக்கக் குரல் கொடுத்தவன் யார்? அது இந்த நாட்டின் மீதுள்ள பற்று அல்லவா, அவன் தேசபக்திக் கவிஞன் இல்லையா?

அவன் அப்படிக் குரல் கொடுத்தது இன்றைய நிலையில் அல்ல. நூறு ஆண்டுகளுக்கு முன்பு! நன்றாக நினைவில் வைத்திருங்கள். அன்றைய சமுதாயச் சூழ்நிலையை எழுத்தில் வடிக்க முடியாது. கண்டவர்கள், அனுபவித்தவர்கள் சொன்னால்தான் அந்தக் கொடுமையான, நிலைமையை உணர முடியும். இன்று பெருநகரங்களில், குளிர்சாதன வசதிகளோடு, அண்டை அயலார் குறித்த எந்த அக்கறையுமில்லாமல், சமூக பிரக்ஞை இல்லாமல், சுயநலம் ஒன்றே குறியாக வாழும் நாடோடி வாழ்க்கையில் அந்த அனுபவங்களைப் புரிந்து கொள்வது கூட சிரமமானதுதான்.

நாடு என்றவுடன் நம் சிந்தையில் எழும் எண்ணம், காடும், மலையும், நதிகளும், பரந்து விரிந்த வயல் வெளிகளும், பாலைவனங்களும், தரிசு நிலங்களும், பாறைகள் நிறைந்த மலைப் பிரதேசமும் மட்டும் அல்ல. இந்த பூமியில்தான் எனது தாய் தந்தையர், அவர்களது பெற்றோர்கள், அதற்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து, முடிந்தனர்.

அவர்களெல்லாம் என்னவாயினர். காற்றோடு காற்றாக மறைந்து விட்டனரா? மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யாரோ ஒருவர்தானே உன்னுடைய வம்சாவளியின் வேர். அப்படியானால் அப்போதிருந்து இங்கு வாழ்ந்திருந்த அவர்கள் எல்லாம் எங்கே? எங்கும் போய்விடவில்லை. இங்கே, இதே மண்ணில்தான் பிறந்து, தவழ்ந்து விளையாடி, நீர்நிலைகளில் நீராடி மகிழ்ந்து, வளர்ந்து இளவயது எய்தி, காதல் வசப்பட்டு, மணக்கோலம் பூண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் பெருகி, வயது முதிர்ந்து, தளர்ந்து, உயிர் நீத்து, இந்த மண்ணில் புதையுண்டு அன்றி எரிக்கப்பட்டு அவர் உடல் பூந்துகளாகி இந்த மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது அல்லவா?

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையோர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே இதை
வந்தனை கூறி மனதில் இறுத்தி என் வாயுற வாழ்த்தேனோ? இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல் போந்ததும் இந்நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே அவர்
தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியது இந்நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே பின்னர்
அங்கு அவர் மாய அவர் உடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே இதை
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று வணங்கேனோ?

(துங்கம்: பெருமை (dignity) தூய்மை (purity) பூந்துகள்: சாம்பர்)

இந்த மண்ணில் ஒவ்வொரு துளியிலும் அவர்தம் பூந்துகள்கள் இல்லாமலா போய்விடும். அந்த மண்ணைப் போற்றிப் பாடியது தேசபக்தியா? அல்லவா?

அப்படிப்பட்ட பாரத நாட்டைப் பாரத தேவி என்று பெயரிட்டு, நம் அன்னையாக நம்முன் கொண்டு வந்து நிறுத்தி, இதோ பார் இவள்தான் உன் அன்னை, இவளை அன்னை பயங்கரி, கொற்றவை, ஆரிய ராணி, மந்திரத் தெய்வம், பாரத நாயகி, பராசக்தி என்றெல்லாம் அடையாளம் காட்டியவன் பாரதி. பாரத நாயகிக்கு என்ன பெருமை?

"தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்"

இவளை வாழ்விக்க, அவளால் நாம் வாழ, தீயன கழிந்து நல்லன மிகுதல் வேண்டும். அதற்கு இந்திய மக்கள் ஒன்று பட வேண்டும்.

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மக்கள்

என்ற உணர்வு நமக்கிருந்தால் போதும். இந்த நாடு யாருக்குச் சொந்தம் என்பதிலே கூட அன்றைய மக்களுக்கு சந்தேகம் இருந்திருக்க வேண்டும். வெள்ளையனின் இரக்க குணத்தால், அவன் தயவில் அவனுக்கு உரிமையான இந்த நாட்டில் வாழ்கிறோம் என்றுகூட நினைத்திருப்பார்களோ? இல்லாவிட்டால் பாரதி

"நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம்"

என்று முழுக்கமிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அதுமட்டுமல்ல இந்த நாடு நமக்கு சுயாதீனமாகிவிட்டால் நாம் வாழப்போகிற வாழ்வு புதுமையானது, பழைமைக்கு மாறானது. "பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்" என்று விட்டுவிடுதலையாகி நிற்கும் அற்புத நிலைமையை அன்றே மக்களுக்கு உணர்த்தியது தேசபக்தியால் அல்லவா?

மக்கள், மக்களின் நல்வாழ்வு என்றெல்லாம் கூறி தேசபக்தியை உண்டு பண்ணி, நாட்டை அன்னியர் வசமிருந்து மீட்டு நம்மவர் கரங்களில் ஒப்படைத்த பின் இன்று அவர்கள் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு, இன்று அவன் இருந்திருந்தால் இப்படித்தான் மனம் கொதித்திருக்க முடியும்.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ கிளியே ஊமைச் சனங்களடி.
ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் கிளியே வாழத் தகுதி உண்டோ?
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்று எண்ணும்
ஈனர்க் குலகந்தன்னில் கிளியே இருக்க நிலைமை உண்டோ?
சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்பது போல்
வந்தேமாதரம் என்பார் கிளியே மனதில் அதனைக் கொள்ளார்
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்பும் கொண்டே கிளியே சிறுமை அடைவாரடீ.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடீ.

இன்னும் பல சொல்லலாம். பாரதி ஒரு தேசபக்திக் கவிஞன் என்பதற்கு. ஒருவன் தேசபக்தனா அல்லவா என்பதை அவரவர் மனச்சாட்சிதான் முடிவு செய்யவேண்டுமே அன்றி வேறெவரும் போகிற போக்கில் தீர்ப்புச் சொல்லிட முடியாது என்பது மட்டும் நிச்சயம். பாரதி ஒப்புவமை இல்லாத உன்னதமான தேசபக்தன் இதை பல்லாயிரம் கோயிலில் சொல்லுவேன்.

நன்றி தஞ்சை வெ.கோபாலன்,

இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.