இரண்டாவது சுதந்திரப்போராட்டத்துக்குத் தயாராவோம்! நம் நாட்டை மன்மோகன் அண்டு கம்பெனி படிப்படியாக விற்றுவருகிறது. இப்போது விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது.ஏனெனில், இந்த அரசு வெகுவிரைவிலேயே வீழ்ச்சியடைந்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டனர். ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிவதற்கு முன் இதன் மூலம் எவ்வளவு பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே

செயல்திட்டமாகும். இந்த மோசடியை மறைப்பதற்காக அவர்கள் விதவிதமான நொண்டிச் சாக்குகளை கூறுகிறார்கள்.

ஆட்சியாளர்கள் தேசத்தின் பெரும்பாலான நிதி சார்ந்த சொத்துக்களை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் வெளிநாட்டவரின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டவரின் கைவரிசை ஏதேனும் ஒரு பெயரில் வலுத்துள்ளது.அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வங்கிகளைக் கைப்பற்றிக் கொள்ளமுடியும்.

டாடா, மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களும் வெளிநாட்டவரின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டன. டாடா நிறுவனம், டாடா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அது முழு உண்மையல்ல; வெளிநாட்டவரிடம் டாடா நிறுவனம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளது.

விஜய் மல்லைய்யாவின் 'கிங்  பிஷர்' விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்;உண்மையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது அல்ல;அவர் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இன்னும் சில வாரங்களில் இவற்றையெல்லாம் அவர் அடமானம் வைக்க வேண்டியநிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

எல்லா கார் நிறுவனங்களின் கதையும் இப்படிப்பட்டதுதான். மாருதி சுசுகியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல; பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிலும்  நிதி நிறுவனங்களிலும் கணிசமான தொகையை கடனாக வாங்கியுள்ளன.கடன் சுமையால் இந்த நிறுவனங்கள் திணறுகின்றன.

இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏன் கடன் வாங்க வேண்டும்? வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன்? வெளிநாடுகளில் பொருளாதாரம் நொடித்துப் போய்விட்டது. அங்கே கடன் வாங்க யாரும் தயாராக இல்லை; இதனால்தான் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வங்கிகள் தாராளமாக கடன் கொடுத்து வருகின்றன.

இனி "நேரடி அந்நிய முதலீடு", எப்படி பாரதப் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதைப் பார்ப்போம்: சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எஜமானி சோனியாவால் நடத்தப்படும் இந்திய தேசிய காங்கிரஸ்  இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.இதற்கு என்ன பொருள்? நமது சந்தைகளை வெளிநாட்டவருக்கு விற்கிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி நமது சந்தைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது.அது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.

கோதுமை, அரிசியிலிருந்து தக்காளி, வெங்காயம் வரை, பீர், ஒயினிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்புப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களே இங்கு வந்து விற்பனை செய்ய இருக்கின்றன. எதை வாங்க வேண்டும்? விற்க வேண்டும்? என்பதை மட்டுமல்லாமல் விலையையும் வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயம் செய்யும்!!! அது மட்டுமல்லாமல் எங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முடிவு செய்யும்.நமது விவசாயிகள் வெளிநாட்டு நிறுவனங்களையே சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் நம் விருப்பம் போல சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியாது. பால் பண்ணையை நடத்த முடியாது; வாகனங்களைக் கூட இயக்க முடியாது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மன்மோகன் அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது.  (இந்த அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் அவைகளின் நாடுகளில் ஏகப்பட்ட கோல்மால் செய்து நொடித்துப் போனவை)

ஆனால்,இங்கு எல்லாமே சோகமயமானதுதான். வாழைப்பழங்களையும்,மாம்பழங்களையும், முட்டைக் கோசுகளையும், காலிபிளவர்களையும் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையா? வேட்டிகளையும், சேலைகளையும், துண்டுகளையும் காலணிகளையும் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் அவசியமா?

வால்மார்ட் இங்கு வேரூன்றி விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கே செல்வான்? வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டையைப் போல நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும்.உலகம் முழுவதும் வால்மார்ட் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. கிளைகள் உள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் உள்ள வல்லுநர்கள் வாங்குவதிலும் விற்பதிலும் வித்தகம் பெற்றவர்கள்.இதனால் தரமான பொருட்கள் கிடைக்கும்;குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோர் வாங்க முடியும் என்றெல்லாம் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் கயிறுதிரிக்கிறார்கள்.

முதலில் விலைகள் சற்று குறையும் என்பது உண்மைதான். இதனால் பொருட்கள் வாங்குவோரும் சிறிது மகிழ்ச்சியடைய முடியும்.ஆனால்,அதே நேரத்தில் ஒரு பொருளை வாங்குபவர் மற்றொரு பொருளை விற்பனை செய்பவராக இருப்பார் என்பதை மறந்துவிடக் கூடாது.உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையே(தயாரிப்புச் செலவை விடவும் குறைந்த விலை!!!) கிடைக்கும். இதனால்,  வெளிநாடுகளில் எங்கெல்லாம் பேரங்காடிகள் எனப்படும் ஹைப்பர் மார்கெட்டுகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் சிறிய கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டன. பொருட்களை மலிவாக வழங்குகிறோம் என்று சொல்லி வேலை வாய்ப்பை பறித்துவிடுவார்கள். ஐரோப்பாவில் இதுதான் நடைபெற்றது.

விலையை குறைப்போம் என்று கோகோகோலாவும் பெப்சியும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் தொழில் அமைச்சகத்தில் இருந்தேன்.இந்த நிறுவனங்கள் பொய் சொல்கின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டு வர்த்தக பூதங்கள் பொய்ச் சொல்லத் தயங்குவதே இல்லை; பொய்யின் மீதுதான் இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டமைக்கப்பட்டுள்ளன.

அழகுசாதனப்பொருட்கள் குறித்தும் இதரப்பொருட்கள் குறித்தும் தொலைக்காட்சியில் வெளிநாட்டுநிறுவனங்கள் செய்கின்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கவனித்தாலே இது புலனாகும்.(இந்தியாவில் மட்டும் இந்தியாவை ஏளனப்படுத்தும் விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன:- சே! என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, "எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ?" என்று சலித்துக்கொள்கிறாள்.அதற்கு அந்த இரண்டாம் மாணவி, "இங்கே தான் நான் குடியிருக்கிறேன்" என்கிறாள்./// குப்பைக் கூளத்தில் தான் இந்தியா இருக்கிறதாம்.அந்த துர்நாற்றத்தை ஒரு பன்னாட்டு நிறுவன வாஷிங் பவுடர் போக்குகிறதாம்). அந்த அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையை மூடி மறைத்து பொய்யை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துகின்றன.

மீண்டும் பெப்சி, கோகோகோலா விவகாரத்துக்கு வருவோம்: பெப்சி,கோகோகோலா விவகாரத்தில் எப்படி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொய்யைப் பரப்பத்துவங்கினார்களோ அதே பொய்களைத் தான் வால்மார்ட் விவகாரத்திலும் பரப்பி வருகிறார்கள்.வால்மார்ட் இங்கு வந்தால் அதிசயங்கள் நிகழும்.லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடக்கும் பங்களிப்பு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.

ஜெர்மனியில்,வால்மார்ட்டால் சொர்க்கத்தை சிருஷ்டிக்கமுடியவில்லை? அங்கு வால்மார்ட் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நடத்தி வந்தது.ஆனால்,அது இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.ஏனென்றால் வால்மார்ட்டை ஆதரிக்க ஜெர்மனியர்கள் மறுத்துவிட்டனர்.இதனால்,ஜெர்மனியில் வால்மார்ட் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

ஜெர்மனியில் வால்மார்ட்டுக்கு என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்காமல் போகாது.மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் எவ்வளவு போலி வாதங்களை அடுக்கினாலும் அதற்கு உறுதுணையாக தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டாலும் பொய்யை நிச்சயமாக நிலைநிறுத்த முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.இது நிச்சயமாக பலிக்கும்.

நன்றி: ஆர்கனைசர் மற்றும் விஜயபாரதம்,

இப்படிக்கு கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.