கேள்வி குறியாகும் எதிர்கால உணவு பாதுகாப்பு பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங் – ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா கூட்டாளிகள் அடுத்து பொதுவிநியோக முறையை சீரழித்து ரேஷன்கடைகளை இழுத்து மூடும்வேலைக்கு தற்போது அச்சாரம் இட்டிருக் கிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னியரை அனுமதிப்பது எனும் அரசின் தான்தோன்றித் தனமான –

தறுதலைத்தனமான திட்டத்துக்கு எதிராகவே தற்போது பாராளுமன்றம் கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தசூழ்நிலையில் இந்திய மக்களின் உணவுபாதுகாப்பிற்கு வெட்டுவைக்கும் வகையில் இன்னொரு தருதளைத்தனத்தை அரங்கேற்ற மன்மோகன்சிங் – ப.சிதம்பரம் – அலுவாலியா கூட்டணி துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய பெருமுதலாளிகளின் வயிறுவெடிக்கும் அளவிற்கு 5 இலட்ச கோடிக்குமேல் மானியத்தை கொட்டிக்கொடுக்கும் மன்மோகன் சிங், காலா காலமாக ரேஷன் உணவுபொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல்கேஸ் போன்றவற்றிற்கு சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படும் சிறுதொகையிலான மானியத்திற்கு மட்டும் ''பணம் என்ன மரத்திலா காய்க்கிறது…" என கேள்வி கேட்கிறார்.

அப்படி சிறுமானியத்தின் மூலம் இயங்கும் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டி மக்களுக்கு கொடுக்கப்படும் அந்த சிறுமானியத்தை கூட வெட்டுவதற்கு மன்மோகன்சிங் – ப.சிதம்பரம் துணிந்திருக்கிறார்கள். இதன்மூலம் தற்போது ரேஷன்கடைகளில் கொடுக்கப்படும் உணவுபொருட்கள் விநியோகத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக, அந்த உணவுபொருட்களுக்கு அரசு இது வரை கொடுத்துவந்த மானியத் தொகையை வரும் புத்தாண்டு முதல் – ஜனவரி 2013 முதல் நேரடியாக பொதுமக்களின் கைகளிலேயே கொடுத்து விடுவார்களாம். அந்ததொகையுடன் அவர்கள் தங்களது காசைகூட சேர்த்து வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். ஆண்டு ஒன்றுக்கு இப்படியாகசேரும் மானியத் தொகை என்பது 32,000 ரூபாயாம். பொதுமக்களின் நாக்கில் மன்மோகன்சிங் தேனைத் தடவுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். காசுகொடுத்து மக்களை மயக்கும்திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தமக்களை மயக்கும் வேலைகளின் விளைவுகள்தான் என்ன என்பதையும் மக்கள் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று : இந்த மானியத்தொகையை மக்கள்கைக்கு கொடுக்கும் இந்த புதிய முறை எத்தனை நாளைக்கு நீட்டிக்கும் என தெரியவில்லை. ''பணம் காய்க்கும்மரம் அரசிடம் இல்லை'' என சொல்லி திடீரென நிறுத்தி விடுவார்கள்.

இரண்டு: ரேஷன்கடைகளை இழுத்து மூடுவதற்கான சுலபமானவழி இது. இனி நாட்டில் ரேஷன்கடைகளோ, உணவுப்பொருட்கள் விநியோகமோ நாட்டில் இருக்காது.

மூன்று: ரேஷன்கடைகளே இருக்காது என்கிறபோது, உணவு பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல்செய்து கிடங்கில் பாதுகாத்து மக்களுக்கு ரேஷன்கடைகளின் மூலம் விநியோகம் செய்ய உதவிபுரியும் இந்திய உணவுக்கழகம் இனி மூடப்படும்.

நான்கு: இது வரையில் மக்கள் ரேஷன்கடைகளில் எப்போது உயராத ஒரே விலைக்கொடுத்துதான் பொருள் வாங்கிவந்தார்கள். ஆனால் அரசுகொடுக்கும் மானியத்தொகையும் உயராது. ஒரேமாதிரியான தொகையை தான் அரசு கொடுக்கும். ஆனால் வெளிச்சந்தையில் நாளுக்கு ஒரு விலை விற்கும். தினமும் விலை உயர்ந்துகொண்டே போகும். மக்கள் தன் கைகாசை அதிகமாக செலவழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ''பணவீக்கம்'' என்பது மேலும்மேலும் அதிகரிக்கும்.

ஐந்து: உணவுக்கழகமே மூடப்படும் நிலையில், ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பொருட்களை கொள்முதல் செய்துவந்த பன்னாட்டு பெருமுதலாளிகள் கையில் கொள்முதல் முழுதும் சென்றுவிடும். விவசாயிகளுக்கோ அல்லது உற்பத்தியாளருக்கோ நியாயமானவிலை கிடைக்காமல் போய்விடும்.

ஆறு: எதிர்காலத்தில் ''உணவு பாதுகாப்பு'' என்பது கேள்வி குறியாகிவிடும்.

ஏழு: நாட்டில் மிகப் பெரிய உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்.
எட்டு: மக்களின் அடிப்படை உரிமைகளில்ஒன்றான ''உணவு உரிமை'' என்பது மயக்க ஊசிப்போடாமலேயே ஆட்சியாளர்களால் ''மயக்கி'' பறிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.