சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும் சில்லறை வர்த்தகத்தில் அந்நியநேரடி முதலீட்டுக்கு (எப்டிஐ) எதிர்ப்புதெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல்கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன் மூலமாக 'LAW MAKERS' என ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமதுமக்கள் பிரதிநிதிகளில் பலரின்சாயம்

வெளுத்திருக்கிறது; தற்போதைய ஐ. மு,. கூட்டணி அரசின்தரம் (ஏற்கனவே என்ன தரத்தைக் கண்டீர்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) அதலபாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. ஆனால் இம்முடிவு தெரிவதற்குள் நடந்த நாடகங்கள்தான் எத்தனை, எத்தனை?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடிமுதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவை அமலாக்கசென்ற ஆண்டே ஐ.மு.,கூட்டணி அரசு முயன்றது. பிரதமர் மன்மோகன்சிங், "ஒரே வணிக முத்திரைகொண்ட நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடிமுதலீடும், பல்வேறு வணிக முத்திரைகள்கொண்ட நிறுவனங்களில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடும்செய்ய அனுமதி அளிக்கப்படும். இதனால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும்; விவசாயிகள் பலன்அடைவார்கள்'' என்றெல்லாம் சொன்னார் (நவ. 24, 2011). இதற்கு காங்கிரஸ் தவிர்த்தபெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன.

சில்லறை வர்த்தகத்தில் எப்டிஐ.யை அனுமதிப்பது என்ற மத்திய அரசின்முடிவுக்கு  எதிர்ப்பு கிளம்பிய போது, 'சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டை மத்திய அரசு கொள்கை அடிப்படையில் அனுமதிப்பது என்றும், தத்தமது மாநிலத்தில் இதனைஅனுமதிப்பது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் எனவும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இதைக்காட்டி கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் அரசு தந்திரங்களைசெய்தது.

2011 நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே எப்டிஐ.க்கு ஒப்புதல்பெற்றுவிட காங்கிரஸ் முயன்றது. ஆனால், அப்போது காங்கிரஸ்பக்கம் சாதகமாகக் காற்றுவீசவில்லை. கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புகாரணமாக, காங்கிரஸ் கட்சியின்கனவு கலைந்தது. தவிர, உத்தர்கண்ட், கோவா, உ.பி, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல்கள் நடைபெற இருந்தநிலையில் சில்லறை வர்த்தகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க அரசு தயாராகவும் இல்லை

எனினும் காங்கிரஸ் கட்சி 'நூல்' விட்டுப்பார்த்தது. ஆளும் தரப்பிலேயே எழுந்த கடும் எதிர்ப்பால் பிறகு பின்வாங்கியது. 'அனைத்து கட்சிகளும் ஒரேபுரிதலுக்கு வரும் வரை, இந்த விஷயத்தில் தனது முடிவைத்தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக' நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்தது. நாட்டின் வர்த்தகர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள்குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நாடுமுழுவதும் பிரசார இயக்கத்தை முன்னெடுத்ததும் அரசின் அந்தர் பல்டிக்கு காரணமாக அமைந்தது.

" அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, "தற்போது ஒரு இடைத் தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பது தான் முடிவைத் தள்ளிவைக்க காரணம்" என வெளிப்படையாகவே கூறினார். அதற்கேற்ப "'சட்ட சபை தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்து அரசியல்கட்சிகளுடன் விரிவாக விவாதித்து, அனைவரது ஒத்துழைப்புடன் சில்லறை வர்த்தகத்தில் எப்டிஐ. கொண்டு வரப்படும்" என பிரதமர் மன்மோகனும் சொன்னார். அதாவது, அரசு தனதுநிலையை தற்காலிகமாக மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது என்பதை அவர் பகிரங்கப்படுத்தினார்.

அதேபோல, இப்போது காங்கிரஸ் கட்சி தனக்குத்தெரிந்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு, எப்டிஐ. விவகாரத்தில் அரசியல் சடு குடு ஆடியிருக்கிறது. 'அனைத்து சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும் அரசியல் கட்சிகளுடன்விவாதித்து கருத்தொற்றுமையுடன் முடிவுகாணப்படும்' என மன்மோகன்சிங், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் பிளவு படுத்தி, எதேச்சதி காரத்துடன் எப்டிஐ. தீர்மானத்தில் அரசு 'வெற்றி'பெற ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு, 'மதவாத பூச்சாண்டி' காட்டிக் கொண்டே, காங்கிரஸ்க்கு வால் பிடிக்கும் முலாயம், மாயாவதி கருணாநிதி கும்பல்கள் உதவியுள்ளன .

2011 நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் மூக்கடிபட்டு ஜகா வாங்கிய காங்கிரஸ், கொல்லைப்புற வழியாக 2012 நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் கட்சிகளை விலைபேசியும், மிரட்டியும் ஜனநாயகத்தின் மூக்கை உடைத்துள்ளது . வர்த்தகர்களுக்கு ஆதரவாக நீலிக் கண்ணீர் வடித்த சில சுயநல அரசியல்வாதிகள் ஜகாவாங்கியதை கண்டு இந்திய வர்த்தகஉலகம் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. நமக்கு வாய்த்த தலைவர்களின் யோக்கியதையை நாடு இம்முறை தெள்ளத்தெளிவாகக் கண்டுகொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற லோக் சபாவில் இது குறித்த விவாதம் நடந்த போது, எப்டிஐ.க்கு அளித்த அனுமதியை திரும்பப்பெறுமாறு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு வேண்டுகோள்விடுத்தன. "எப்டிஐ.யை சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் அடுத்ததேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும் ; பா.ஜ.க,.வுக்கு சாதகமாக அது அமையும்' என்றும்கூட முலாயம்சிங் யாதவ் லோக்சபாவில் பேசினார். "சில்லறை வர்த்தகத்தில் எப்டிஐ.யை அனுமதித்தால் வேலைவாய்ப்பு பெருகும் என சொல்வதெல்லாம் மாயை. அதனால் 25 கோடி சிறுவியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். சோனியா தனது பெயரில் ஏற்றுக்கொண்டிருக்கும் காந்தி என்ற பெயருக்காகவேனும் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்'' என்று அவர் உருக்கமாகவே பேசினார்.

பல்டி அடிப்பதில் சமர்த்தரான தி.மு.க தலைவரை சொல்லவேவேண்டாம். "எப்டிஐ. விவகாரத்தில் அரசின் நிலையை தி.மு.க ஆதரிக்கவில்லை இந்த விஷயத்தில் தி.மு.க என்ன நிலை எடுக்கும் என்பது சஸ்பென்ஸ்" என்றெல்லாம் கூறிய பகுத்தறிவுப்_பகலவன், ''பா.ஜ.க வென்றுவிடக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் எப்டிஐ.க்கு ஆதரவாக வாக்களிப்போம்" என குட்டிக்கரணம் அடித்தார். இதற்கு பின் புலமாக கருணாநிதிக்கு அளிக்கப்பட வாக்களிப்பு என்னவோ? கனி மொழிக்கும் ராசாவுக்குமே வெளிச்சம்!

இத்தனைக்கும் பா.ஜ.க.,வுடன் கூடிக்குலாவி தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததை தாத்தா வசதியாக மறந்து விட்டார். அமைச்சராக இருந்த முரசொலிமாறன் படுத்த படுக்கையாக, நினைவின்றி கிடந்த போதும் அவரை நீக்காமல் கூட்டணிதர்மம் காத்த பிரதமர் வாஜ்பாய்க்கு செம்மொழி கொண்டான் நல்ல நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார். அ.தி.மு.க ஆதரவுடன் 1998 ல் வாஜ்பாய் அரசு அமைந்த போது, அப்போதைய தி.மு.க அரசைக் கலைக்கவேண்டும் என வலியுறுத்திய ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு சம்மதிக்காததால்தான், அவரது ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதையும் நன்றிமறந்த கருணாநிதி மறந்து விட்டார். எல்லாம் காலக் கொடுமை!

இவரைவிட அற்புதமானபல்டி அடித்திருக்கிறார் மாயாவதி. கருணாநிதியாவது, முதலிலேயே தனது நிலையைத் தெளிவுபடுத்தினார்; தான் நன்றி கொன்றவன்தான் என்பதை ருசுப்படுத்தினார். வியாபாரிகள் நலம் எல்லாம் தனது சுய நலத்துக்கு அப்பா தான் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார். மாயாவதியோ, லோக்சபாவில் ஒருமுடிவும், ராஜ்யசபாவில் ஒருமுடிவும் எடுக்கிறார்! இதே மாயாவதி பா.ஜ.க ஆதரவுடன் தான் இரு முறை உ.பி., முதல்வரானார். இப்போது பா.ஜ.க அவருக்கு மதவாதக்கட்சியாக மாறி இருக்கிறது! தங்கள்பேரங்களை சாமர்த்தியமாக முடித்துக் கொள்ள உதவும் மதவாத பூச்சாண்டிக்கு இந்த அரசியல்தரகர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

"சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் அவசரம் காட்டவேண்டாம்" என்று லோக்சபாவில் பேசிய பகுஜன் சமாஜ் உறுப்பினர் தாராசிங், 'எப்டிஐ. விவகாரத்தில் மதவாதசக்திகள் பக்கம் இருப்பதா (அரசை எதிர்ப்பதா) அல்லது அவர்களை எதிர்ப்பதா (அரசை ஆதரிப்பதா) என்று மறுநாள் முடிவு செய்வதாக' அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, லோக்சபாவில் எப்.டி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதி கட்சியினர் வெளிநடப்புசெய்தனர். முன்னதாக முலாயம் கட்சியினரும் வெளிநடப்புசெய்தனர். முதுகெலும்பற்ற தி.மு.க அரசை ஆதரித்தது. விளைவாக, எப்டிஐக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் அரசால் 253- 218 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. அத்துடன் அந்நிய செலாவணி நிர்வாகசட்டம் (பெமா) குறித்த இடதுசாரிகளின் தீர்மானமும் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.

லோக்சபாவில் காங்கிரஸ் வென்றாலும், ராஜ்ய சபாவில் காங்கிரஸ் தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு எதிர்க் கட்சிகளின் தீர்மானம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு 'அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது' என அந்தர் பல்டி அடித்து அரசைக்காப்பாற்றி இருக்கிறார் மாயாவதி. லோக்சபாவில் ஒருவேஷம்; ராஜ்யசபாவில் ஒருவேஷம். இவரைத்தான் நாட்டின் முக்கியமான தலித்தலைவியாக கொண்டாடுகிறார்கள். மாமேதை அம்பேத்கர் தலைமை தாங்கிய தலித்மக்களுக்கு இப்போது வாய்த்துள்ள தலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதே முலாயமும் மாயாவதியும் உ.பி., மாநிலத்தில் குடுமிப்பிடி சண்டையிடுகிறார்கள். இவர்களை இன்னமும் நம்பும் உபி. மக்களை நினைந்தால் மிகமிக பாவமாக இருக்கிறது.

இதில் விசேஷம் என்ன வென்றால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் வென்றிருந்தாலும்கூட, அரசுக்கு ஆபத்தில்லை. ஏனெனில் இது அரசுமீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்ல. எப்டிஐ. முடிவு தள்ளிப்போயிருக்கும். அவ்வளவு தான். அதற்கும் கூட காங்கிரஸ் விடவில்லை. இதை தனது கௌரவப்பிரச்னையாக எடுத்துக்கொண்டு, நாட்டின் கௌரவத்தை அடகுவைத்திருக்கிறது காங்கிரஸ். சுதந்திரம் அடைந்தவுடனேயே, 'காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும்' என மகாத்மாகாந்தி ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது.

இந்தக் கழிசடைகளை நம்பித்தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள். மதவாதம் என்று அச்சுறுத்திக் கொண்டு தங்கள் பேரங்களை முடித்துக் கொண்டு, வீராவேசமாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலநூறு கோடிகளை கூட்டிக் கொண்டு, கடைசி நேரத்தில் பல்டிஅடித்து, அரசியல் சாகசம் செய்பவர்கள்தான் இன்று ராஜ தந்திரிகள். இதைக்கண்டிக்க வேண்டிய ஊடக உலகம் மௌனம்காக்கிறது. குறைந்தபட்சம் இடதுசாரிகள் எப்டிஐ.யை எதிர்ப்பதற்காகவேனும், ஊடகங்கள் நியாயமாக செயல்பட்டிருக்கலாம். சில பத்திரிகைகள்தவிர பெரும்பாலானவை, அரசின் வெற்றியை மெச்சுகின்றனவே ஒழிய, அது எந்தவழியில் பெறப்பட்டது என்பதை சொல்லவும் தயங்குகின்றன. அவையும் மத வாத பூச்சாண்டிக்கு ஆட்பட்டு விட்டனவா?

மொத்தத்தில் நமது நாட்டின் சுய நிர்ணயமும் வர்த்தக சுதந்திரமும் கால வதியாகும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்டிஐ. அனுமதியை அரசு நிறைவேற்றிஇருப்பதில், அந்நிய நிறுவனங்களின் 'கோடிக்கரங்கள்' நீண்டிருக்கவும் வாய்ப்புள்ளன. அதைக்கண்டுபிடிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத்துறையோ, எதிர்க் கட்சிகளை வழிக்குக் கொண்டு வரப் பயன்படும் வேட்டை நாயாக மாறி இருக்கிறது. ஆக, இந்திய ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் குலைந்துள்ள காலகட்டத்தில் நாம் வாழ்வது உறுதியாகி இருக்கிறது.

இந்தநேரத்தில் எப்டிஐ.யை இறுதிவரை எதிர்த்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிககடன் பட்டிருக்கிறது. ஏனெனில், 'நாங்கள் அடிமைகள்அல்ல' என நாடாளுமன்றத்தில் கூற 218 பேரேனும் இருந்ததை சரித்திரம் பதிவுசெய்திருக்கிறது.

இந்தத்தோல்வி தற்காலிகமானது. நாட்டை விலை பேசும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் பாடம்கற்பிக்கும் வாய்ப்பு விரைவில் வரும். அதற்கு இக்கட்சிகள் தயாராகவேண்டும். தங்களிடையிலான அரசியல் பேதங்களை மறந்து, நாட்டுநலனுக்காக இக்கட்சிகள் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அதையே, தற்போதைய சில்லறை மனிதர்களின் தகிடுதத்தங்கள் நினைவுபடுத்தி இருக்கின்றன.

நன்றி  சேக்கிழான்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.