1950ஆம் வருடம் குஜராத்தின் மேகசனா மாவட்டத்தில் உள்ள வடநகர் எனும் குக்கிராமத்தில் பிறந்து தனது கடும் உழைப்பினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். குடும்பத்தில் நிலவிய ஏழ்மைகாரணமாக சிறுவனாக இருக்கும்போதே தனது சகோதரரின் டீக்கடையில் வேலைசெய்துள்ளார். அப்போது தான் அவருக்கு தேசிய இயக்கமான ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் தொடர்புகிடைத்துள்ளது. அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்து விட்டது.

ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் சிறுவனாக இருக்கும்போதே சேர்ந்து விட்டதால் நல்லபண்புகளான ஒழுக்கம், கட்டுப்பாடு, திட்டமிட்டு செயல் படுவது, பிறருடன் இணைந்து வேலைசெய்வது,  நேரம் தவறாமை, சமுதாயத்தின்மீது அக்கறை, தேசபக்தி மற்றும் சேவை மனப் பான்மை போன்றவைகள் அவரது மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது. அன்று அவர் ஆர்எஸ்எஸ்.ஸில் கற்றுக்கொண்ட பாடங்கள் தான் இன்று அவரது சாதனைக்கு அடித்தளம் ஆகும்.

1965 ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போர் நடந்தது . அந்த நேரத்தில் ஆயிரக் கனக்கான ராணுவ வீரர்கள் போர்க்களத்திற்கு செல்வதற்காக ரயிலில் வந்திறங்குவார்கள், அடுத்து மற்றொரு ரயிலைபிடிப்பார்கள். ஒரு போர்முனையிலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வார்கள் அந்த மாதிரியான நேரத்தில் ஆர்எஸ்எஸ்.இயக்க தொண்டர்கள் ரயில் நிலையங்களுக்கு சென்று ராணுவ வீரர்களுக்கு உதவிசெய்தனர்.

1967 ஆம் ஆண்டு குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களின் துயர் துடைக்கும் வெள்ளநிவாரண பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். சிறு வயதிலிருந்தே பொது வாழ்வில் ஈடுபட்டு வருவதால் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளவும் அவர்களை ஒருங்கிணைக்கவும் கற்றுக்கொண்டார். இவ்விரண்டும் தான் இன்று அவருக்கு கைகொடுத்து உதவிவருகிறது.

மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியிருந்ததால் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மூலம் மாணவர்களிடையே பணியாற்றி உள்ளார். கல்லூரியில் மாணவர் பேரவைத்தலைவராக இருந்துள்ளார். அதன்வாயிலாக பல சமுக மற்றும் அரசியல் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கியபங்கு வகித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கடுமையான சவால்களை சந்தித்துவந்துள்ளார். சோதனைகளை கண்டு துவண்டுவிடாமல் அவற்றை எதிர் கொண்டு வெற்றிவாகை சூடியுள்ளார். ஒவ்வொரு சோதனையையும் சவாலையும் பெரும்வாய்ப்பாக கருதி வேலைசெய்ததால் அவரிடம் மறைந்திருந்த ஆற்றல், செயல் திறன் நன்குமெருகேறி வெளிப்பட துவங்கியது.

ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் சிறுவனாக இருந்த போதே தன்னை இணைத்துக்கொண்ட நரேந்திர மோடி அவ்வியக்கத்தில் வேலைசெய்து கொண்டே தனது படிப்பிலும் கவனம் செலுத்திவந்தார். அவர் "அரசியல் அறிவியல்" (Political Science) பாடத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பினை முடித்த நரேந்திரமோடி எந்த ஒருவேலைக்கும் சென்று சம்பாதிக்கவேண்டும் என நினைத்ததே இல்லை. படிக்கின்ற காலத்திலேயே தனதுவாழ்வு சமுதாயத்திற்காக என தீர்மானம் செய்து விட்டதால் அவர் ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் "பிரச்சாரக்" ஆனார். (திருமணம் செய்து கொள்ளாமல் வேறு எந்தஒரு வேளையிலும் ஈடுபடாமல் இயக்கத்தின் வேலைக்காக என்று வருபவர்களை பிரச்சாரக் என அழைப்பர். அதற்கு சம்பளமும் கிடையாது.)

1974 ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டு பஞ்சம் தலை விரித்தாடியது. குஜராத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசோ அவைகளை பற்றி சிறிதும் அக்கறையின்றி ஊழலில் மூழ்கித்திளைத்து வந்தது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்தது. இதைஎதிர்த்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு மாணவர்களை ஒன்றுதிரட்டி ஊழலை எதிர்த்து போராடுவதற்காக "நவநிர்மான் அந்தோலன்" எனும் பெயரில் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியது . மாணவர்கள் போராட்டம் மாநிலமெங்கும் காட்டுத் தீ போல் பரவியது . மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து வீதிக்குவந்தனர். இதன் விளைவு குஜராத்தில் ஆட்சிசெய்து வந்த காங்கிரஸ் அரசு பதவியைவிட்டு விலக வேண்டியதாயிற்று. அடுத்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி பெரும் தோல்வியை தழுவியது. ஜனதா மோர்ச்சா எனும் பெயரில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின்கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தன. அதிலும் முக்கிய பங்காற்றி உள்ளார் நரேந்திரமோடி.

ஆர்எஸ்எஸ். ப்ரசாரக்காக இருந்ததன் காரணமாக அன்றாடம் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துபழகவும், சந்தித்து பேசவும் அவருக்கு வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அதுவே இன்று அவருக்கு மிகப்பெரிய பலமாக துணைநின்று வருகிறது. அதைத்தொடர்ந்து வந்த நெருக்கடிநிலையை எதிர்த்து (1975-77) கைதாவதிலிருந்து தப்பித்து 19 மாதங்கள் தலை மறைவாக இருந்தே இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியுள்ளா ர்.

1987ஆம் வருடம் அவர் ஆர்எஸ்எஸ். அமைப்பிலிருந்து அரசியல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாஜக.வில் இணைந்து பணியாற்றிய அவரது திறமையைக்கண்ட கட்சி தலைமை அவரை குஜராத் மாநில பொதுச்செயலாளராக நியமித்தது. நரேந்திர மோடி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று கட்சியை பலப் படுத்தும் பணியில் இறங்கினார். கட்சியை கிராம அளவில் தொடங்கி பெருநகரங்கள் வரை நெறிப்படுத்தி கட்டமைப்பினை வலுப்படுத்திட வாய்ப்பு அவருக்குக்கிட்டியது. எனவே முழுகுஜராத்தை பற்றியும் மக்களின் மனோபாவங்களை புரிந்துகொள்ளவும், ஆங்காங்கு நிலவிவருகின்ற பலதரப்பட்ட பிரச்சனைகளை பற்றியும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

1990 இல் குஜராத் சட்டமன்றத்திற்கு நடை பெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக. கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற து. ஆனால் அந்தக்கூட்டணி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதைதொடர்ந்து 1995ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக.மூன்றில் இரண்டுபங்கு இடங்களில் வெற்றிபெற்று தனியாக ஆட்சியமைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை குஜராத்தில் பாஜக. ஆட்சிதான் இருந்துவருகிறது. இந்த வெற்றிக்கு பின்னணியில் மோடியின்பங்கு அதிகமாகவே உள்ளது . 1988-லிருந்து 1995 வரை குஜராத்தில் அவர் ஆற்றிய கட்சிப்பணியை பார்த்து வியந்த கட்சியின் அகில பாரதத்தலைமை அவருக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்புகளை வழங்க தயாராகியது.

அத்வானி அவர்கள் 1990 ஆம் ஆண்டு சோமநாத்திலிருந்து அயோத்யா வரை மேற் கொண்ட ரதயாத்திரை மற்றும் 1992 ஆம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தேசியக்கோடியை ஏற்றிடு வதற்காக டாக்டர் முரளி மனோகர்ஜோஷி மேற்கொண்ட "காஷ்மீர் சலோ" யாத்திரையின் முழுப்பொறுப்பும் நரந்திர மோடி வசம் வழங்கப்பட்டது . அவர் அதை கட்சிதமாக திட்ட மிட்டு நிறைவேற்றினார். இந்த இருயாத்திரையின் காரணமாக நாடுமுழுவதும் சுற்றி வருவதற்கும், மக்களின் மனநிலையையும், கட்சியின் அனைத்து தரப்புத்தொண்டர்கள், தலைவர்களை பற்றி சரியாகப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன் பழகிடு வதற்கும் இந்தயாத்திரைகள் அவருக்கு பயனுள்ளதாக அமைந்தது . இந்த இரண்டு யாத்திரைகளும் மாபெரும் மக்கள் ஆதரவினை பாஜக.விற்கு கொண்டு வந்த சேர்த்தன. அந்த யாத்திரைகள் தான் பாஜக.வை மக்கள் மத்தியில் பிரபல படுத்தியது. இரண்டு யாத்திரைகளும் நரேந்திரமோடிக்கு மாபெரும் அங்கீகாரத்தினை கட்சித் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. நரேந்திரமோடி என்றால் எதையும் திட்டமிட்டு கட்சிதமாக குறித்தநேரத்திற்குள் செயல்படுத்த கூடியவர் என பலராலும் இன்று புகழப் படுவதற்கு கூட இந்த யாத்திரையின் கச்சித மான ஏற்பாடுகள் காரணமாகும்.

1995ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலார் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. அதுமட்டும இன்றி முக்கியமான 5 மாநிலங்களின் கட்சியின் அமைப்புப்பொறுப்பும் இவரிடம் கொடுக்கப்பட்டது. 1998 ஆம் வருடம் பாஜக.வின் அகில பாரத பொதுச்செயலாளராக நரேந்திர மோடி தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து 2001 ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வர் ஆக பதவியேற்கும்வரை அவர் கட்சியின் பொதுச்செயலாளராகவே தொடர்ந்து இருந்துவந்தார். தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பினையும் தட்டிக்கழிக்காமல் முழுமனதுடன் செயல்பட்டு வெற்றியை தேடித் தந்தவர். தனது அயராத கடும்உழைப்பினால் பாஜக.வின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்துவந்த நரேந்திரமோடி இன்று நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப் படுகிறார். நினைவு திறன் என்பது அபாரமாக இருக்கிறது. தன்னுடன் சிலநாட்கள் பழகியவர்களை பற்றி கூட அனைத்தையும் நினைவில் வைத்திருக்கும்திறன் அவரிடம் உள்ளது. எந்தசவால்கள் வந்தாலும் அதைக் கண்டு அஞ்சி ஓடிடாமல் எதிர் கொண்டு அவைகளை முறியடித் திடும் திறனும் நம்பிக்கையும் மோடியிடம் அதிகமாகவே காணப்படுவதால் தான் இத்தனை சவால்களையும் தொல்லைகளையும் அவ தூறுகளையும் தாண்டி குஜராத்தில் அவரால் சாதனைபடைக்க முடிந்துள்ளது.

கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை அனைவருடனும் இயல்பாகப்பழகி வருவதுடன் அவர்கள் வீடுகளுக்குசெல்வது, அவர்களுடன் உணவு அருந்துவது, அவர்கள் வீட்டில் ஒருகுடும்ப உறுப்பினரைப் போன்று இருப்பது போன்றவைகள் தொடக்க காலத்தில் இருந்தே நரேந்திர மோடியிடம் இருந்துவருகிறது. வெளி உலகத்திற்காக நாடக மாடிடாமல் உண்மையிலேயே எளிமை யானவர், சிக்கனமானவர். படாடோபத்தை சிறிதும்விரும்பாதவர்.

முதல்வரான பிறகும்கூட அவருக்கென்று உதவியாளராக வெறும் மூன்றேமூன்று ஊழியர்களை மட்டும் தான் தன்னுடன் வைத்து கொண்டிருக்கிறார். சிலநேரத்தில் அவர்களும் வீட்டிற்குசென்று விடுவார்கள். அப்போது தனக்குத் தேவையானதை தானே தயாரித்துக்கொள்வது மட்டுமல்ல, யாராவது தெரிந்த நண்பர்கள், கட்சிப்பிரமுகர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கும் தேநீர் இவரே தயாரித்துக் கொடுக்கிறார்.

அரசியலில் நுழைந்தபிறகு பல சொந்தங்கள் தேடி வரும். அதிலும் அரசியலில் அதிகாரத்திற்கு வந்து விட்டால் கேட்கவே வேண்டாம் எல்லோரும் சொந்தம்கொண்டாடி சலுகைகளை நாடி வருவது வாடிக்கயான ஒன்று . ஆனால் நரேந்திர மோடி விஷயத்தில் இதற்கு சிறிதும் இடம் இல்லை. நரேந்திர மோடியைப் பொறுத்தவரை  அவருடைய உறவினர்கள் யார் என்றே எவருக்கும்தெரியாது. எந்த உறவினரையும் அவர் பக்கத்தில் நெருங்க விடுவது கூடக்கிடையாது. அவரது தாயார் வயதானநிலையில் அவர்களது பூர்வீக கிராமத்தில் தனியாகவே வசித்துவருகிறார். மோடி முதல்வரான பிறகும்கூட அவரது சகோதரார் ஒருநாள்கூட மோடியின் இல்லத்திற்கு வந்ததில்லை. இவருக்கும் அவர்களுக்கும் எவ்விதத்தொடர்பே இல்லை என்றே கூறிடலாம். எப்பவாவது ஒருமுறை தனது தாயாரைப் பார்க்க போகின்றார்.

எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் அதன் ஆழத்திற்குசென்று தெரிந்துகொள்ளும் குணம் அவரிடம் உள்ளதால் கட்சி பணியாகட்டும், வேறு எந்த பிரச்சனைகளா கட்டும் அவைகளை சரியாகப் புரிந்துகொண்டு சரியான தீர்வைத் தரக்கூடியவர். இன்றுகூட எந்தஒரு தொழில் அதிபர் அவரைப் பார்க்க சென்றாலும் அவர்கள் எதற்காகவருகின்றனர் அவர்களுடன் என்னபேசுவது என்ன பதில் தருவது அவர்களது பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வுகாண்பது என்பதை யெல்லாம் அவர் முன் கூட்டியே தன்னைத் தயாரித்துக்கொள்வதால் அனைத்தையும் அவரால் எளிதாகக் கையாளமுடிகிறது. நாள்ஒன்றுக்கு சுமார் 18 மணிநேரம் பணியாற்றுகிறார். ராகுல்காந்தியை கட்சிக்காரர்களே கூடப்பார்ப்பது கடினம். அவர் என்ன பேசுகின்றார் என்பது கட்சிக் காரர்களுக்கே புரியாத போது சாதாரண மக்களுக்கு என்ன புரிய போகிறது.

2001 ஜனவரியில் பூகம்பம் தாக்கியதில் மிகப்பெரிய பாதிப்பு, பொருளாதாரயிழப்பு ஏற்பட்டிருந்தது. பூகம்பத்திற்கு முன்பு வறட்சியால் மக்கள்வாழ்க்கையே முடங்கிப்போய் காணப்பட்டது. அந்நேரத்தில் குஜராத் மாநிலப்பொருளாதார நிலைமையும் மோசமாகவே இருந்தது. இந்த நிலையில் தான் அக்டோபர் மாதம் நரேந்திரமோடி முதல்வராக பொறுப் பேற்றார். பூஜ் மாவட்டத்தி ல் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான பேரழிவுகளிலிருந்து அந்த பகுதியை மீட்டெடுப்பது அவர் முன்பு இருந்த மிகப்பெரிய சவாலாக இருந்தது. பூகம்பத்தின் அழிவைக்கண்டு அஞ்சிடாமல் நிவாரண பணிகளை முடிக்கிவிட்டார். அப்பகுதிகளுக் கெல்லாம் இப்போது சென்றுபார்த்தால் அங்கு பூகம்பம் வந்ததா என சந்தேகம் வரக் கூடும். அந்த அளவுக்கு அந்த பகுதிகள் மேன்மை அடைந்துள்ளன.

ஒருபக்கம் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்துவந்தன. மறு பக்கம் குஜராத்தின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியைப்பற்றி மோடி சிந்திக்க தொடங்கினார் . மிகப்பெரிய அளவில் தொழில்வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் அவர் அதிக ஆர்வம்கொண்டவராக இருந்தார். எனவே ஒருங் கிணைந்த வளர்ச்சிக்காக ஐந்து அம்சத்திட்டம் ஒன்றினை தயாரித்தார். மோடியின் மனதில் குஜராத்தின் எதிகாலத்தைப்பற்றி தெளிவான திட்டம், செயல்வடிவம் இருந்ததால் பலமாற்றங்களை நிர்வாகத்தில் அவரால் உருவாக்கிட முடிந்தது. அவர் முதல்வராக பதவி ஏற்ற 100 நாட்களிலேயே அவரது லட்சியம் என்னஎன்பதை தெளிவாக மற்றவர்களுக்கு உணர்த்தி விட்டார். நரேந்திரமோடியின் தொலைநோக்கினால் இன்று குஜராத் அனைத்து துறைகளிலும் மற்ற மாநிலங்கள் எட்டமுடியாத் தொலைவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன.

2002 ஆம் ஆண்டு நரேந்திரமோடி தனது முதல்வர் பதவியை ராஜினாமாசெய்தது மட்டுமல்ல சட்ட சபையை கலைத்து விட்டு புதிய தேர்தலை எதிர் நோக்கினார். காங்கிரஸ் கட்சியினரும் அந்த கட்சிக்கு ஆதரவான ஆங்கில ஊடங்கங்கள், தொலை காட்சிகள் குஜராத் கலவரத்தைமட்டுமே முன்னிறுத்தி பிரசாரம் செய்துவந்தது. இஸ்லாமிய வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு தீவிராமாக பிரசாரம் செய்தபோதிலும் கூட நரேந்திரமோடியின் வெற்றியை இவர்களால் தடுத்துநிறுத்திட இயலவில்லை. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. மீண்டும் நரேந்திரமோடி 2வது முறையாக 2002 ஆம் ஆண்டு முதல்வராக பதவியெற்றார்.

தண்ணீர், பெண் கல்வி, மின்சாரம், சாலை வசதிகள், ஆரோக்கியம், விவசாயம், ஊழலற்ற நிர்வாகம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் கவனம்செலுத்தத் தொடங்கினார். ஊழலை அகற்றிட வேண்டு மென்றால் முதலில் முதல்வர் ஊழல் செய்யாதவராக இருக்கவேண்டும். அதில் அவர் வெற்றிபெற்றுள்ளார். அவர்மீது எந்த ஊழல்புகாரும் இதுவரை இல்லை. நிர்வாகத்தில் இருக்கின்ற குறைகளை களைந்து விட்டால் ஊழலுக்கு வாய்ப்பிருக்காது என்பதை நன்குணர்ந்துள்ள நரேந்திர மோடி பல நிர்வாக_சீர்திருத்தங்களை மேற்கொண்டதன காரணமாக சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர வேண்டியது வெகுவாக குறைந்துள்ளது. நவீனத்தொழில் நுட்பத்தினை நிர்வாகத்திற்கு ஏற்றவாறு அறிமுகம்செய்ததால் அரசின் வருமானம் அதிகரித்துள்ளது. அனைத்தும் வெளிப்படையாக இருந்துவருகிறது.

எந்த ஒருதிட்டமும் வெற்றிபெற வேண்டுமெனில் மக்களிடையே அந்த திட்டம் பற்றிய விழிப் புணர்வு இருக்கவேண்டும். அவர்களையும் அதில் பங்குபெற வைத்து விட்டால் திட்டங்கள் வெற்றிபெற்றுவிடும் என்பதை நன்கு அறிந்துள்ள நரேந்திரமோடி கிராமப் பஞ்சயத்துக் களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதுடன் நிற்காமல் அவர்களிடம் அதிகமான பொறுப்பு களையும் ஒப்படைத்தார். பஞ்சாயத்து தேர்தல்களில் தான் அதிகளவில் ஜாதி மற்றும் பகைமை உணர்வு ஏற்பட்டு வன் முறைக்கு வித்திடும். அதை தவிர்ப்பதற் காக போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்திற்கு மாநில அரசு கூடுதல்நிதி வழங்கிடும் என்று அறிவித்ததால் 40-45 சதவிகித பஞ்சாயத்துக்களில் எந்த வித போட்டியுமின்றி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோன்று தீண்டாமை இல்லா பஞ்சயத்திற்கு சிறப்புசலுகைகளை அறிவித்தார். அதுவும் பலனளித்தது.

தண்ணீர்ப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக "சுஜலாம் சுபலாம்" எனும் பெயரில் திட்டம் நடை முறைக்கு வந்தது. வறண்ட பூமியாக காட்சி தந்த குஜராத் இன்று பசுமையாக காட்சி தருகிறது . ராஜஸ்தானை போன்றே குஜராத்தும் மழைகுறைவான வறண்ட பூமியாகும். குடி நீர்த் தட்டுப்பாடை எவாராலும் தீர்க்க முடியாது முடியாது என்றே அம்மாநில மக்கள் கருதிவந்தனர். ஆனால் நரேந்திர மோடியின் தொலை நோக்கு பார்வையின் காரணமாகவும், எந்த ஒருதிட்டத்தையும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படுத்தி விட நினைக்கும் மோடியின் பழக்கத்தினாலும் நர்மதா நதி நீர்த்திட்டம் விரைந்து நிறைவேற்றப் பட்டது. கேரளம் தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பிரச்சனைக ளுக்காக ஏராளமான சண்டை சச்சரவுகள் வருடம்தோறும் நடந்து வருகின்றன. ஆனால் பகீரத பிரயத்தனத்தினால் கங்கை எப்படி பூமிக்கு வந்ததோ அதைப்போன்று நரேந்திர மோடியின் பகீரதப் பிரயத்தனத்தினால் நர்மதை நீர் குஜராத்துக்கு மட்டும் அல்ல அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்கும் செல்கிறது.

சென்னை கூவத்தைப்போன்று அகமதாபாத்தில் காட்சிதந்த சபர்மதி இன்று சபர்மதி  மக்கள்வந்து குவியும் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது. மிகத்தூமையான தண்ணீர் அதில் பாய்க்கின்றது. பார்ப்பதற்கே கண்ணுக்கு குளுர்ச்சியாக உள்ளது. இவை அனைத்திற்கும் முதல்வர் நரேந்திரமோடியே காரணம் ஆவார்.

நரேந்திர மோடி 2ம் முறையாக பதவி_ஏற்றதும் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளை பற்றிய விவரங்களைசேகரித்து அவைகள் அனைத்தையும் செப்பனிட்டு மழைநீரை தேக்கிட திட்டங்கள் தீட்டி அதை சரி செய்து பராமரிக்கவேண்டிய பொறுப்பினை அந்தந்த கிராம பஞ்சாயத்துகளிடம் கொடுத்ததால் இன்று குஜராத்தில் மழைநீர் வீணாகிடாமல் சேமிக்க படுகிறது. அனைத்து நீர் நிலைகளிலும் நீர் சேமிக்கப்படுகிறது. அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்வளம் இருந்தால் விவசாயம் பெருகிடும். நரேந்திர மோடி நீரின் அத்தியா வசியத்தை உணர்ந்து திட்டங்கள் தீட்டியதால் நம் நாட்டிலேயே வெற்றிகரமாக விவசாய, விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் குஜராத் மாநிலம் தான் முன்னணியில் உள்ளது . தொழில்வளர்ச்சியில் குஜராத் முதலிடத்தில் இருக்கிறது.

விவசாயிகளுக்கு நவீனத் தொழில்நுட்பங்களையும் எந்த மாதிரியான பயிர்செய்தால் லாபம்கிடைக்கும் என்கிற தகவலை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் "க்ருஷி மகோத்சவம்" நடத்தப் படுகிறது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் விவசாயிகளை தேடி கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு உதவிடவேண்டும் என உத்தரவிட்டார். அவரும் அவருடைய மந்திரிசபையில் இருக்கின்ற அனைத்து மந்திரிகளும் கிராமங்களுக்குச் சென்றுவர உத்தர விட்டார். வேன்களில் கண்காட்சிகள் அமைத்து அவைகள் கிராமங்களுக்கு  சென்றுவருகின்றன. விவசாயத்திற்கு தேவையான_மின்சாரம் சீராக வழங்கப் படுகிறது. ஒருகாலத்தில் குஜராத் கிராமங்களில் மின்சாரம் என்பதே_கிடையாது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லா கிராமமே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்கு மின்சாரவசதி ஏற்பட்டுள்ளது. மின்உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு "ஜோதி கிராம் யோஜனா" என பெயர் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

மின்உற்பத்திக்காக அதிகமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மின் இழப்பும் மின்சாரத்திருட்டும் பெரும் அளவு குறைந்து விட்டது. மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது நாட்டிலேயே சூரிய ஒளியிலிருந்து அதிகளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலை மின்உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின்உற்பத்தியில் முதலீடு செய்துவருகின்றன. உபரி மின்சாரத்தை விற்று நல்லலாபம் ஈட்டி வருகிறது அம்மாநிலம்.

வருடம் வருடம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முதலமைச்சர் தொடங்கி அனைத்து மந்திரிகள் எம்எல்ஏ.க்கள் கல்வித் துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஆசிரியர்கள் என்று அனைவரும் ஒருங்கிணைந்து வீடு வீடாகச்சென்று பள்ளி குழந்தைகளை அனுப்பச்சொல்லி பிரசாரம் செய்கின்றனர். இதனால் பெண்குழந்தைகள் பள்ளிக்கு செல்வது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த திட்டத்திற்கு "கன்யா யோஜனா" என பெயரிடப் பட்டுள்ளது. 2011ஆம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2001கும் 2011கும் இடையே பெண்களிடையே கல்வி அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. பத்தாவது ஆண்டாக நடைபெற்ற கன்யாகேலவாணி அபியான் மற்றும் சாலா பிரவேஷ் மகோத்சவ் வாயிலாக மாநிலம் எங்கும் ஒவ்வொரு பகுதியிலும் நூறுசதவிகிதம் பள்ளியில் சேர்க்க பட்டுள்ளனர். 2001-02 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுச்சென்றவர்களின் எண்ணிக்கை 20.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2010-11 ஆம் ஆண்டு அதுவெறும் 2.09 சதவிகிதமாக குறைந்து விட்டது. இந்த வருடம் பள்ளிகளில் சேர்ந்துள்ள பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 2,34,302 ஆகும். அதில் பொருளாதாரத்தில் மிகபின்தங்கிய நிலையில் இருக்கின்ற 74,466 கிராமப் புற சிறுமிகளுக்கு ஊக்கத்தொகையாக 15 கோடி ரூ மதிப்புள்ள  "நர்மதா பத்திரம்" வழங்கப் பட்டுள்ளது. முதலைச்சர் நரேந்திரமோடியே வருடத்தில் 2-3 நாட்கள் பள்ளிகளுக்குசென்று மாணவர்களுக்கு பாடம்நடத்துகின்றார்.

பள்ளிக்கு வருகிற மாணவர்கள் நல்ல திடகாத்திரமாக விளங்கிடவேண்டும் என்பதற்க்காக "பால போக் யோஜனா" திட்டம் செயல்படுத்த படுகிறது. நல்ல தரமானஉணவு பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

"மாத்தரு வந்தனா" எனும் பெயரில் தாய்மார்களின் உடல்நலம் பேணப்படுவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கற்ப காலத்திலும், குழந்தை பிறப்பிற்கு பிறகும் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பலவித நோய்களில் இருந்து அவர்களை காப்பதற்கும் இந்த திட்டம் வகுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தாய் மார்களுடன் குழந்தை நலனையும் கவனிப்பதற்காக இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

"பேட்டி பச்சோ" பெண் குழந்தைகளை பாதுகாப்பது இத்த திட்டத்தின் நோக்கம். பெண் சிசுக் கொலை செய்வதிலிருந்து பெண்குழந்தைகளைக் காத்துவருகிறது இத்திட்டம். பெண்குழந்தைகளின் அவசியத்தையும் முக்கியத்து வத்தையும் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மிகப்பெரிய அளவில் மக்களிடையே விழிப் புணர்ச்சி பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதன் விளைவு பெண் சிசுக் கொலை செய்வது கணிசமான அளவு குறைந்துள்ளது.

ஒரு ஆட்சிக்கு நல்லபெயர் ஈட்டித் தருவதும் கெட்டபெயரை வாங்கித் தருவதும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கையில் தான் உள்ளது . எனவே அவர்களின் உதவி இல்லாமல் எந்த ஒரு அரசும் நமது நாட்டில் நல்லபெயர் எடுத்திடமுடியாது. ஆட்சியாளர்கள் தீட்டும் நல்லதிட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்கின்ற அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் ஐஏஎஸ்.அதிகாரிகளுடன் வருடம்தோறும் அமைச்சர் பெருமக்களும் முதலமைச்சரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்றுவருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு "கர்மயோகி அபியான்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படி முழு அரசு இயந்திரமும் நரேந்திரமோடியின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ராகுல்காந்தியும் சோனியாவும் போட்டி போட்டுக்கொண்டு நரேந்திர மோடியை தாக்கிவந்தனர். அவர்களது கனவு பலித்திட வில்லை. பாஜக வெற்றிபெற்றதால் மீண்டும் நரேந்திரமோடி முதல்வர் பதவி ஏற்றார். 2002ஆம் வருட தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விற்கு எதிராகவே இருந்தது. ஆனால் 2007 ஆம் வருடம் கணிசமான அளவில் பரவலாக முஸ்லிம்களின்_வாக்கு பாஜக.விற்கு கிடைத்தது.

பாஜக.ஆட்சிக்கு வந்தபிறகு 10 ஆண்டுகளாக பெரியளவில் ஹிந்து முஸ்லிம் மோதல் எதுவும் நடை பெறவில்லை. அது முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு மோதல் நடந்துள்ளன. ஆனால் அவைகளைக்கூட உடனடியா நடவடிக்கை எடுத்து தடுத்து விட்டனர். குஜராத் அரசும் மதத்தின் அடிப்படையில் எவருக்கும் சலுகைகாட்டவில்லை. ஆனால் அனைத்து மதத்தினரையும் சரிசமமாகவே நடத்திவருகிறது.

நரேந்திர மோடியின் அரசு மேற் கொண்ட பல்வேறு நலத்திட்டங் களினால் குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்தனர். முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துள்ளது. அதிகளவில் முஸ்லிம்கள் வசித்துவருகின்ற பகுதிகளில் எல்லாம் முதன்முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எந்தக் கலவரமும் வன்முறையும் இல்லாத காரணத்தினால் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

நீதிபதி சச்சார் அவர்கள் குஜராத்சென்று மோடியிடம் சிறுபான்மையினர் நலனுக்காக என்னென்ன நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது குஜராத் அரசு என கேட்டபோது நரேந்திரமோடி முஸ்லிம்களுக்காக எதையும் இந்த_அரசு செய்யவில்லை. ஆனால் அனைத்து குஜராத் மக்களின் முனேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம் என கூறினார்.

நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்தால் சிறுபான்மை யினரின் வாக்குகளை இழக்கநேரிடும் என கருதி அவரதுபெயரை முன்மொழிய கூடாது என சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல. குஜராத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சி அமைப்புக் களுக்கான தேர்தலில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசித்துவருகின்ற பெருவாரியான இடங்களில் பாஜக.சார்பில் முஸ்லிம்களே வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டு அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். சிலமுஸ்லிம் பகுதியில் ஹிந்து வேட்பாளர் நிறுத்தப் பட்டு அவரும் வெற்றிவாகை சூடியுள்ளார். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிற சிலபகுதிகளில் பாஜக.சார்பில் முஸ்லிம்வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். குஜராத்தில் பாஜக. சார்பில் 120 முஸ்லீம்கள் மாநகராட்சி உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

பாஜக.பற்றி சிறுபான்மையினர் மனதில் தவறான எண்ணங்களை மத சார்பின்மை வாதிகளும், இடது சாரிகளும், ஆங்கில ஊடகங்களும் உருவாக்கி உள்ளன. உண்மையில் பா.ஜ.க தொடக்கம் முதலே எந்தஒரு மதத்தினருக்கும் மதத்தின் அடிப்படையில் சலுகைகள் எதுவும் தரப்படக்கூடாது என வலியுருத்துகிறதே தவிர கிருஸ்தவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ எதிரிகிடையாது. பாரதநாட்டு குடிமகன்கள் அனைவருக்கும் ஒருபொதுவான கலாசார பண்பாடு உண்டு . அதை நாம் மதிக்கவேண்டும் என்று மட்டும் தான் கூறிவருகிறது. சிறுபான்மையினர் மத்தியில் காணப்படுகிற இந்த அச்சம் பாஜக. ஆளும் மாநிலங்களில் வேகமாக குறைந்துவருகிறது. நரேந்திரமோடி அவர்களும் அவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளார்.

2009 ஆம் ஆண்டு அரசின் அதிகார பூர்வமான குடியரசு தினவிழா கோத்ராவில் நடைபெற்றது. அப்போதைய கவர்னர் நாவல்கிஷோர் ஷர்மா கோத்ராவிற்கு வந்திருந்து தேசியக்கொடியை ஏற்றினார். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நரேந்திரமோடி மிகக்குறைந்த அளவில் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்துக்கொண்டு கோத்ராவிற்கு சென்றார். அந்த சமயத்தில் கோத்ரா நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவருக்கு வரவேற்புகொடுத்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்களும் பெண்கள், பெரியோர்கள் அதிகஉற்சாகத்துடன் மோடிக்கு வரவேற்பு தந்தனர். அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கண்டவுடன் முதல்வர் மோடி தனது வாகனத்தை நிறுத்தச்சொல்லி அவர்களுடன் கைகுலுக்கினார்.

பேரிடர் மேலானமையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஐ.நா,சபை Sasakawa Award வழங்கியுள்ளது. அரசு யந்திரத்தில் பல புதிய அணுகு முறைகளை கையாண்டதற்காக Commonwealth Association in governance for Public Administration and Management விருது கிடைத்துள்ளது. கடந்த சிலவருடங்களாக குஜராத் தொடர்ந்து இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி கண்டுவருகிறது. தொடர்ந்து வளர்ச்சிபாதையில் மேல் நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. மோடியின் முயற்சியினால் கடும்உழைப்பினால் குஜராத் இன்று வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் நிற்கிறது. சரியானகொள்கை சரியான முன் மாதிரி சரியான தலைமை இந்த மூன்றும் ஒருங்கேகொண்டுள்ள நரேந்திரமோடி நமது நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பார் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

அன்றாடம் நாட்டுநடப்புகள் பற்றியும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும், குஜராத் பற்றியும் பல விஷயங்களிலும் Twitter மூலமாக நரேந்திரமோடி தனது கருத்தை உடனுக்குடன் தெரிவிக்கிறார்.10 லக்ஷத்திர்க்கும் அதிகமானோர் அவருடைய Twitterஇல் இணைந்து ள்ளனர். நாளுக்கு_நாள் இளைஞர்கள் அவரது Twitter இல் இணைந்தவண்ணம் இருக்கின்றனர். இதுவேபோதும் இந்த காலத்து இளைஞர்கள் யாரை விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு. இதேபோன்று இன்னும் மோடியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வெளிப்படையான சிறப்பான நிர்வாகம், ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது என சொல்லமுடியாது. ஆனால் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. ஒவ்வொரு கிராமப்பஞ்சாயத்தும் கணினியால் இணைக்கப் பட்டுள்ளது. அநேகமாக முழு_அரசு இயந்திரமும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தொழில்துவங்கிட லஞ்சம்கொடுத்திட வேண்டிய அவசியம் இல்லை. பலபன்னாட்டு நிறுவனங்கள் தொழில்துவங்கிட அல்லது முதலீடுசெய்திட அவர்கள் விரும்புகின்ற மாநிலம் குஜராத்தாகவே இருக்கிறது. ஏன் நமது நாட்டில்கூட அனைத்து தொழிலதிபர்களும் குஜராத்தில் தங்கள தொழில் இருக்கவேண்டும் என்று கனவு காணுகின்றனர். தனக்கு அதிகாரம்கிடைத்தால் தன்னால் என்ன மாற்றத்தை செய்திடமுடியும் என்பதற்கு குஜராத் சாட்சியாக இருக்கிறது. எனவே அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. நரேந்திரமோடியுடன் ஒப்பிடுவதற்கு எதிர் கட்சிகளில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பா.ஜ.க.வில் மோடிக்கு கிடைத்த ஊடங்க ஆதரவு மற்ற முதலவர்களுக்குக் கிடைக்கவில்லை. மபி முதல்வர் சிவராஜ்சிங் சொஹான், சத்தீஸ்கர் முதல்வர் டாக்டர் ராமன்சிங், கோவா முதல்வர் மனோகர் பாரிகர், போன்றவர்களுடைய ஆட்சியும் நிர்வாகமும் மிகசிறப்பாகவே இருந்துவருகிறது. இம்மாநிலங்களில் ஊழல்களும் மிகக்குறைவு. முதலமைச்சர் மட்டத்தில் எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது.

 

நன்றி; சடகோபன் ஆழம் பத்திரிக்கை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.