வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 4 பாரிஸால் கிழக்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம். விசமத்தனமான வங்கப்பிரிவினை வெளிப்பட்ட நாளில் இருந்தே பாரிஸால் போர்க்களமாக மாறியது. வீதியெங்கும் வந்தே மாதர கோஷம்.

அடக்க முடியாத அளவிற்கு வங்கத்தில் ஆக்ரோஷம். கூர்க்காக்களை தருவித்து அடக்க முயன்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால் பாரிஸால் பணிவதாக இல்லை.

கொடுஞ் சட்டங்களாலும், போலிசாரின் அச்சுறுத்தும் அடக்கு முறைகளாலும் பாரிஸால் மக்களை பயமுறுத்த இயலவில்லை. போலிசாரின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் சில இதோ.

1.ஒரு வீட்டின் வாசலில் "வந்தேமாதரம்" எழுதப்பட்டதற்காக அந்த வீடு தரைமட்டமாக இடிக்கப்பட்டது.

2.பதினொரு வயது சிறுவன் ஒருவனை போலீசார் முச்சந்தியில் கட்டி வைத்து சாட்டையால் அடித்தனர். இது கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரிலேயே நடந்தது. அவன் செய்த குற்றம் "வந்தே மாதரம்" கோஷமிட்டதுதான்.

3.கூர்க்காப்படை வீரர்கள் குண்டர்களைப் போல் கடைக்காரர்களை மிரட்டி பொருட்களை வாங்கியுள்ளனர். அதற்கு அவர்கள் காசு ஏதும் தரமாட்டார்கள்.

4."சுதேசியப் பொருட்களை வாங்குவீர்" என தம் கடைகளில் எழுதி வைத்த குற்றத்திற்காக கடைகாரரின் கைகளை வெட்டினர் கூர்க்காக்கள்.

பாரிஸால் நகரம் மட்டும் இல்லை அந்த மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் தீயாய் பரவியது. வங்கப்பிரிவினைக்கு எதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு.நகரை விட்டு வெளியேறும்படி அரசு கட்டளையிட்டது. கிழக்குவங்கம் முழுவதும் "வந்தேமாதரம் தடைசெய்யப்பட்டது.

தடையைப் பொருட்படுத்தாமல் பலர் வந்தேமாதர கோஷமிட்டு கர்ஸான் கொடும்பாவியை கொளுத்தினர்.

இத்தகைய சூழலில்தான் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் மாநாடு ஒன்றிற்காக ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த ஊர்வலத்தில் "வந்தேமாதர" கோஷம் எழுப்பாமல்தான் நடத்திக் கொள்ளவேண்டும் என்பது அரசின் அடக்குமுறை அராஜக உத்தரவு.

சுரேந்திரநாத் பானர்ஜியுடன் , விபின் சந்திரபால், அரவிந்த கோஷ், மோதிலால் கோஷ், போன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

அமைதியாக நடைபெற்ற ஊர்வலத்தை கண்டு பொறுக்க முடியாத போலீசார். தடியடி நடத்தத் தொடங்கினர். முதல் தடியடி தலையில் விழுந்ததுதான் தாமதம். அங்கு சூழ்ந்து இருந்த இளைஞர் பட்டாளம், "வந்தேமாதரம்" என்று உரத்தக் குரல் எழுப்பினர்.

ஊர்வல வீதிகள் முழுவதும் போர்க்களமாக மாறியது. சித்தரஞ்சன் குஹா எனும் மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டு தண்ணீர் தொட்டியில் தூக்கி எறியப்பட்டான், சுரேந்திரநாத் பானர்ஜியின் தலை மற்றும் உடல்களில் பலத்த காயங்கள். இதையும்தாண்டி தாண்டி மாநாடு இரத்தக் காயங்களுடன் நடைபெற்றது. சித்தரஞ்சன் குஹா தலையில் ஒரு பெரிய கட்டுடன் மேடையில் அமர்ந்திருந்தார்.

இதனைகண்டு வங்காளம் முழுவதும் உணர்ச்சிபிழம்பாகியது.

மாநாடு முடிந்தவுடன் சகோதரி நிவேதிதா இரத்த வெள்ளத்துடன் இருந்த சுரேந்திரநாத் பானர்ஜியை சந்தித்து " நீங்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திலும் ஓராயிரம் வீரர்கள் உதிப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்த தேசத்திற்காக போராடுவார்கள்." என்று சொன்னதும் "வந்தேமாதரம்" கோஷம் விண்ணைப் பிளந்தது.

தொடரும……….,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.