மானம் காக்க வந்த சிங்கம் பாகிஸ்தான் கஷ்மீர் எல்லையில் நம் இராணுவ வீரர்களைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்திக் கொன்றதோடு நில்லாமல் அது குறித்துத் தெனாவட்டாக பதிலளிக்கவும் செய்கிறது. மைய அரசு இதற்கு என்ன செய்வதென்று தெளிவின்றித் தத்தளிக்கும் வேளையில் பாரதத்தின் முப்படைகளின் கூட்டுத்தலைமைத் தளபதியும்

விமானப்படைத் தலைமைத் தளபதியுமான நார்மன் அனில் குமார் ப்ரௌன் "அத்துமீறினால் பாகிஸ்தான் மீது பேச்சு வார்த்தை தவிர வேறு விதங்களில் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார். (மீறினாலா? இப்ப நடக்கிறது என்னவாம்? அத்துன்னா என்ன அதை மீறுவதுன்னா என்னன்னு கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க மார்ஷல்.)

ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இதுவரை நடவடிக்கை பற்றி வாய் திறக்கவில்லை. மைய நிலை இப்படி இருக்க, குஜராத்தில் சிதம்பர ரகசியப்படி வெற்றி பெறாத மோடியோ நடவடிக்கை என்ன என்பதைக் காட்டியிருக்கிறார். (Vibrant Gujarat Global Summit 2013) அதிரும் குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2013 இதில் தமக்கு பேதங்கள் ஏதுமில்லை என்று காட்டுவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த வணிக நிறுவனங்களையும் அழைத்திருந்தனர்.

22 பேர் கராச்சி வணிகர் கூட்டமைப்பில் இருந்து வந்து அகமதாபாத்தில் ஒரு ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தனர். திடீரென்று அவர்களை விடுதியிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியது குஜராத் அரசு. அவர்கள் அகமதாபாத்தைச் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சூரத் நகருக்குச் செல்ல விரும்பினர். அங்கே பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பைக்கு அனுப்பப்பட்டனர் என்று தகவல்.

மாநாடு நடக்கும் காந்திநகருக்கு அவர்கள் வரவில்லை. குஜராத் டிஜிபி சித்தரஞ்சன் சிங் கூறுகையில் "அவர்கள் விசாவில் பிரச்சினைகள் இருந்ததால் அவர்களை எங்கும் செல்ல அனுமதிக்க முடியாது என்றார். குஜராத் உள்துறைச் செயலர் எஸ்.கே. நந்தா கூறுகையில் அந்த 22 பேருக்கும் அகமதாபாத் வர மட்டுமே விசா இருந்ததாகவும் அதனால் காந்திநகருக்கோ மற்ற இடங்களுக்கோ செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மாநாடு நடக்குமிடம் தெரியாமலா விசா எடுத்து வந்தார்கள்? சென்ற ஆண்டு பாகிஸ்தான் வணிகர்கள் வந்த போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நடுவில் மோடியை கராச்சிக்கு அழைத்தார்கள். வர இயலாது என்றதும் கராச்சி வணிகர்களுடன் விடியோ கான்ஃப்ரன்ஸில் பேசும்படி மோடியை வேண்டினர் பாகிஸ்தான் வணிகக் குழுவினர்.

குஜராத்-சிந்த் உறவுகளை எண்ணிப் பார்க்கையில் இது சாத்தியமே என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் கஷ்மீர் எல்லையில் பாரத ராணுவ வீரர்களைக் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து கொன்ற கொடுமைக்குப் பிறகு பாகிஸ்தான் வணிகர்களுடன் வியாபாரம் கொள்வதை குஜராத் அரசு விரும்பவில்லை.
பாகிஸ்தான் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நிலை எடுத்து வருபவர் மோடி. மோடி குறிப்பாக பாகிஸ்தான் வணிகர்களைத் திருப்பி அனுப்பிவிட்டே மறுவேலை என்ற முடிவில் இருந்தார். அதனால் தான் அந்த 22 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று விவரம் அறிந்த குஜராத் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.