துறவுக்கு அடையாளமான காவியை பயங்கர வாதத்திற்கு அடையாளமாக புனைவது  இந்நாட்டிற்கு செய்யும் மாபெரும் துரோகம் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முன்னிலையில் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பாஜக,வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து பயங்கரவாதிகளை உருவாக்கும் முகாம்கள் நடத்தி வருவதாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்க்கு தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சரின் இந்தபேச்சை பிரதமரும் அமைதியாக இருந்து ஆமோதித்துள்ளார். சுஷில்குமார் ஷிண்டேவின் பேச்சை நமது நாட்டின் மீது பக்தி கொண்டவர்கள் வன்மையாக கண்டித்திருப்பதோடு அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். நமது நாட்டின் உள்துறை மந்திரியின் கருத்து என்பது அரசாங்கத்தின் கருத்தாகவே அமைய முடியும்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கான முறை நம் நாட்டை தாக்கியுள்ளனர். நமது நாட்டின் எல்லையில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் 2500 பேர் ஊடுருவ தயாராக இருப்பதாக அரசாங்கமே அறிவித்துள்ளது. நமது நாட்டின் ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலையை வெட்டிச் சென்ற பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் மீது போர் தொடுக்க தயாராக உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் இந்தியாவில் தான் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர் என்றும் கூறி வருகிறது. இப்போது உள்துறை மந்திரியின் இந்த பேச்சு பாகிஸ்தான், இந்தியா மீது குற்றம் சாட்டியிருப்பதற்கு மேலும் ஆதரவாக அமைந்துள்ளது.

நமது நாட்டின் உள்துறை மந்திரியின் பேச்சு நமது நாட்டை பயங்கரவாதிகள் ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் எனவும் கூற வைத்துள்ளது. பொறுமையின் இருப்பிடமாகத் திகழும் இந்துக்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதும், துறவுக்கு அடையாளமான காவியை பயங்கர வாதத்திற்கு அடையாளமாக புனைவதும் இந்நாட்டிற்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதை கவனத்தில் கொள்ளாமல் வாயில் வந்தவற்றை கூறியிருக்கும் உள்துறை மந்திரியை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அவருடைய உரையை அப்படியே ஏற்றுக் கொண்ட பிரதமரும், சோனியா காந்தியும் கூட கண்டனத்திற்கு உரியவர்கள். எனவே சுஷில்குமார் ஷிண்டே நீக்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் பாரதீய ஜனதா கட்சி வரும் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தும். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே காலை 10 மணி அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.