1905இல் நடந்த வங்கப்பிரிவினைக்கு வங்காள தேச பக்தர்களின் பாய்ச்சிய வேல் ஆயிற்று.வேதனையால் வங்கமக்கள் கொதித்து எழுந்தனர்.பல புரட்சி இயக்கங்கள் தோன்றி தீவிரமாக செயல்பட தொடங்கின. மாணவர்கள் தடையை மீறி ஊர்வலம் வந்தனர். தடியடிகளையும் சவுக்கடிகளையும் பெற்று சிறைகளை நிரப்பினர்.

இது குறித்து சந்தியா , வந்தேமாதரம் , யுகாந்தர், போன்ற பத்திரிகைகளில் அனல் பறக்கும் கட்டுரைகள் வெளிவந்தன. இதனைக்கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அரசு இந்த மூன்று பத்திரிக்கைகளின் ஆசிரியர்களான பண்டோபாத்யாயா, அரவிந்தகோஷ், விபின் சந்திரபால்,ஆகியோரைக் கைது செய்து வழக்கு தொடுத்தனர், வழக்கு நடக்கும் போதே பண்டோபாத்யாயா சிறையில் இயற்கை எய்தினார், அரவிந்தர் விடுதலையானார், விபின் சந்திரபால் மட்டும் ஆறுமாத சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்தார்.

விபின் சந்திரபால் சிறைவாசம் முடித்து வெளியே வந்ததும் அவரை வரவேற்க இளைஞர்கள் தடையைமீறி சிறைவாசலில் கூடினர். அவர்களில் பலருக்கு மாகாண மாஜிஸ்டிரேட் "கிங்ஸ்போர்டு" பதினைந்து கசையடிகள் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

இப்போது அனுசீலன் சமிதி மற்றும் யுகாந்தர் போன்ற புரட்சி இயக்கங்கள் தீவிரமாக செயல் பட தொடங்கின.இந்நிலையில் "கிங்ஸ்போர்டு" முஸாபர்பூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

முஸாபர்பூர் சென்ற கிங்க்ஸ்போர்டுக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது, கல்கத்தாவிலிருந்து வந்த அந்தப் பார்சலை சந்தேகத்தோடு பார்த்த அவர் அதனைப் பிரிக்காமல் போலீசாரிடம் ஒப்படைக்க, போலீசார் அதனுள் தொட்டவுடன் வெடிக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டைக் கைப்பற்றினர். கிங்க்ஸ்போர்டு தப்பினார்.

கிங்க்ஸ்போர்டுவை தீர்த்துக்கட்ட புரட்சி இயக்கம் குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல சக்கி என்ற இரு புரட்சி வீரர்களிடம் போதுமான வெடிகுண்டுகளை கொடுத்து தீர்த்துகட்டுமாறு பணித்தனர்.

இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் தனி மனித பயங்கரவாத செயல்களின் முன்னோடி என்று பிற்காலத்தில் பல தலைவர்களால் போற்றப்படும் குதிராம் போஸ் மிகச்சிறு வயதிலேயே பாரத சுதந்திரத்திற்காக புரட்சி இயக்கத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டான்.

1907 இல் ஹட்கட்சா என்ற ஊரில் நடந்த தபால் பை கொள்ளையிலும், கவர்னர் சர் அன்ட்ரு பிரேசர் மற்றும் சர் பேம்பில்டே ஆகிய இருவரை கொல்ல நடந்த இரண்டு கொலை முயற்சியிலும் முழு வீச்சோடு பங்கு கொண்டு தோல்வியைத் தழுவினான்.

1908 ஏப்ரல் 30 அன்று குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல சக்கி இருவரும் "கிங்ஸ்போர்டு" தங்கியிருந்த பங்களாவில் சுவர் ஏறி குதித்தனர். அப்போது ஒரு கோச் வண்டி பங்களாவின் உள்ளே வந்ததும் இருவரும் தம் கைகளில் உள்ள வெடிகுண்டுகளை கோச் வண்டியில் வீச அந்த வண்டியில் வந்த கிங்க்ஸ்போர்டின் விருந்தினர்களான இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லசக்கி இருவரும் சற்றும் தாமதியாமல் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிரபுல்லசக்கியை மடக்கி பிடிக்க முற்பட்ட போது தன் கையிலுள்ள பிஸ்டலை எடுத்து தற்கொலை செய்துகொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு குதிராம்போஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டான், குதிராம்போஸ் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. குதிராம்போஸ் தன் குற்றத்தினை ஒப்புக்கொண்டான்.

""கிங்ஸ்போர்டு தேசபக்தர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதால் அவரைக்கொல்ல தான் மனப்பூர்வமாக விரும்பியதாகவும், ஆனால் ஒரு பாவமும் அறியாத அந்த இரு பெண்களை கொல்வது தம் நோக்கம் அல்ல எனவும், அவர்களின் மரணத்திற்காக தாம் மிகவும் வருந்துவதாகவும் கூறினான்,""

குதிராம்போஸ் – ற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, 1908 ஆகஸ்ட் 11 இல் குதிராமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவனுக்கு வயது பத்தொன்பது மட்டுமே,

குதிராம் இறந்தபிறகு அவனது சாம்பலை வங்கத்து தாய்மார்கள் தங்கத்தினை அள்ளுவது போல அள்ளி தங்களின் குழந்தைகளுக்கு பாலில் கலந்து ஊட்டினார்கள்,

நன்றி; ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.