நமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!! சொர்க்கபுரி என்னும் ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே அவருக்கு அந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் அவருக்கான புகழைப்பரவச் செய்திருந்தது.அந்த ஜோதிடர் ஸ்ரீகால பைரவரை தினமும் வழிபடும் பைரவ உபாசகராக இருந்ததால்,இந்தப்புகழைப் பெற்றிருந்தார்.ஒரு நாள் மாலை நேரத்தில் அந்த ஜோதிடரைக் காண ஒரு விவசாயி வந்தார்.

ஏழை விவசாயியான அவர் தனது ஜாதகத்தை, ஜோதிடரிடம் கொடுத்து, ‘எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறது.என் வாழ்வு சிறப்பாக அமைய என் ஜாதகத்தில் ஏதாவது வழியிருக்கிறதா? என்று பார்த்துக்கூறுங்கள்’என்று கேட்டுக் கொண்டார்.ஜோதிடரும் அந்த விவசாயியின் ஜாதகத்தைக் கணிக்கத் தொடங்கினார்.

ஜாதகத்தை கணித்துக் கொண்டிருந்த ஜோதிடரின் முகம் சுருங்கியது.அதற்குக் காரணம் அந்த விவசாயியின் வாழ்வு அன்று இரவு 8 மணியுடன் முடிவடைவதாக ஜாதகம் கூறிற்று.இரவு 8 மணிக்கு அவருக்கு ஏற்படும் கண்டமானது அவரது உயிரைப் பறிக்கும் என்று அந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்து கொண்ட ஜோதிடர், அதனை அந்த விவசாயியிடம் எப்படி கூறுவது என்று மனக்கஷ்டம் அடைந்தார்.

பின்னர் விவசாயியிடம் நேரடியாக எதுவும் கூறாமல், “ஐயா,எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது;அந்த நினைவு இல்லாமல் உங்களுக்கு ஜாதகம் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.இன்று விட்டால் அந்த வேலை தேங்கிவிடும்.எனவே,உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும்.நீங்கள் இப்போது சென்றுவிட்டு, நாளைக் காலையில் வாருங்கள்.நான் உங்களுக்குப் பதில் கூறுகிறேன்”என்று மழுப்பலான பதிலைக் கூறினார்.

ஜோதிடர் கூறுவது உண்மை எனறு நம்பிய விவசாயியும்,நாளைக் காலை தங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மனைவி, ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று சொன்னீர்களே! பிறகு ஏன் அவரிடம் பொய் சொல்லி அனுப்பினீர்கள்?’என்று கேட்டாள்.

‘இங்கிருந்து புறப்பட்டுப் போகிறாரே’ அவரது ஆயுள் காலம் இன்று இரவோடு முடியப் போகிறது.அதை அவரிடம் தெரிவிக்க எனக்கு மனமில்லை;அதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்.அவர் உயிரோடு இருந்தால் தானே நாளை என்னை வந்து பார்க்க முடியும்? என்று கூறினார் ஜோதிடர்.

இதற்கிடையே ஜோதிடரின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற விவசாயி,தனது ஊருக்கு காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்  சென்று கொண்டிருந்த நேரத்தில் வானம் மேக மூட்டமாகி இருள் சூழ்ந்தது.சிறிது நேரத்தில், மழைத் தூறல் ஆரம்பித்து,வலுப்பெற்றது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது.இதனால் விவசாயியால் மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர முடியவில்லை;

அப்போது அந்தப் பகுதியில் பாழடைந்த சிவன் கோவில் ஒன்று தென்பட்டது.அங்கு சென்று மழைக்கு ஒதுங்கினார்.கோவிலின் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அந்த விவசாயி,பாழடைந்து கிடக்கும் கோவிலின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.மேலும் அவரது மனதில் சில எண்ணங்கள் ஓடின. “கோவிலின் கருவறையும்,முன் மண்டபமும் இந்த அளவுக்கு கேட்பாரற்றுக் கிடக்கிறதே! மண்டபத்தின் உறுதித்தன்மையை அதில் வளர்ந்துள்ள ஆலமரமும்,அரசமரமும் அசைத்துப்பார்க்கும் வகையில் முளைத்திருக்கின்றதே! நான் மட்டும் ஏழையாக இல்லாமல்,போதுமான பணத்துடன் இருந்தால்,இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்” என்று நினைத்துக் கொண்டார்.

அத்துடன் அவர் மன ஓட்டம் நிற்காமல் தொடர்ந்தது.சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக் கொண்டார்.கோபுரம்,ராஜகோபுரம்,பிரகாரங்கள்,மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார்.கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி,வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து,கும்பாபிஷேகம் நடத்தி,கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓட விட்டார்.

அந்த சிந்தனையின் ஊடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியை பார்த்த போது,அங்கே அவரது தலைக்கு மேல் கருநாகம் ஒன்று படமெடுத்து நின்று,அவரைக் கடிக்கத் தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஒரு நொடியும் தாமதிக்காமல் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.மண்டபத்தில் இருந்து அவர் 200 அடி தள்ளிப்போன மறுநொடியே அந்த மண்டபம் அப்படியே நொறுங்கி விழுந்ததைக் கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அப்போது மணி சரியாக இரவு 8 ஐக் காட்டியது.மழை ஓய்ந்து போனது.அங்கிருந்து விவசாயி தனது வீடு திரும்பினார்.மறுநாள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஜோதிடரை சந்திக்கச்சென்றார். விவசாயியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை;ஒருவேளை தான் ஜாதகத்தை சரியாக கணிக்கவில்லையா? என்ற சந்தேகமும் கூட அவருக்குத் தோன்றியது.

தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஜோதிட நூல்களை ஆராய்ந்தார்.கணக்கு சரியாகவே இருந்தது.அவர் நேற்று இரவே இறந்திருக்க வேண்டும் என்றுதான் ஜோதிட நூல்களின் ஜோதிட விதிகள் வலியுறுத்துகின்றன.இது போன்ற கண்டத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க வேண்டுமானால்,அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஜோதிட பரிகார சம்ஹிதைகள் தெரிவித்தன.

ஆனால்,இவரோ ஏழை விவசாயி! இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியும்? அதுவும் ஒரு இரவுக்குள் என்று நினைத்தபடியே, ‘நேற்று இரவு நடந்தது என்ன?’ என்பதை அந்த விவசாயியிடம் கேட்டார் ஜோதிடர்.அவரும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்.ஜோதிடருக்கு ஈசனாகிய ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் புரிந்துவிட்டது.அவர் அந்த விவசாயிக்கு மேற்கொண்டு கூற வேண்டிய பலன்களை கூறி அனுப்பினார்.

அந்த விவசாயி புறப்பட்டுச் சென்றதும்,தனது தெய்வத் தந்தையாகிய ஸ்ரீகாலபைரவரை நினைத்து தியானத்தில் அமர்ந்தார் அந்த ஜோதிடர்.அந்த ஜோதிடரின் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைத்தார் ஸ்ரீகால பைரவர். ‘ஒருவன் மானசீகமாக ஒரு காரியம் செய்வதாக ஸ்ரீகால பைரவர் நினைத்தாலே,அதை அவன் நிஜத்தில் செய்து முடித்ததாகவே அர்த்தம்;அந்த விவசாயியின் பிறந்த ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தில் இருந்த சனிபகவானே இந்த எண்ணங்களை உருவாக்கிடக் காரணமாக இருந்தார்’ என்பதை ஸ்ரீகால பைரவர் தெரிவித்தார்.மன திருப்தியோடு ஸ்ரீகால பைரவருக்கு நன்றிகளைத் தெரிவித்து விட்டு,ஜோதிடர் அன்றைய கடமைகளைச் செய்யத் துவங்கினார்.

நமது எண்ணங்கள் வலுவாகவும்,உயர்வாகவும் இருந்தால் நமது விதியையே மாற்றிவிட முடியும் என்பதை இந்த உண்மைச் சம்பவம் தெரிவிக்கிறது.

நன்றி ; ஜோதிட முனி  கை.வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.