“அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு சாத்தியமானதுதான்’

தனிநபர் வருமானத்தை உயர்த்துவது, உற்பத்தியை அதிகரிக்கச்செய்வது, வளங்களைப் பயன் படுத்துவது ஆகியவற்றின் மூலமாக, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதற்கான வழி முறைகள், மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட பட்டுள்ளன.

பல வளரும் நாடுகளில், தனிநபர் வருமானம் அதிவிரைவாக உயர்ந்ததால், அவை பாய்ச்சல் வேகத்தில் பொருளாதார வளர்ச்சிபெற்று, வளர்ந்த நாடுகள் என்ற அந்தஸ்தை பெற்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்துவது சிரமமானதல்ல. அந்த இலக்கு சாத்தியமானது தான். இந்திய அரசால் அந்த இலக்கை எட்டிவிட முடியும். ஆனால், அந்த இலக்கை எட்டவேண்டிய அவசியம் ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது, ஒரு கேக் தயாரிப்பதற்குச் சமமானது. பெரியஅளவிலான கேக் தயாரிக்கப்பட்டால், பெரிய அளவிலான பங்கு ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். ஆகவேதான், மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நமது இலக்கு குறித்து சந்தேகம் எழுப்புவோரை, கைதேர்ந்த அவநம்பிக்கையாளர் என்றே கூறலாம். அவர்கள், சாமானிய மக்களிடம் இருந்து விலகி யிருக்கிறார்கள். ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக நீங்கள் அவர்களிடம் சென்றால், அவர்கள் உங்களை சுழலில் சிக்கவைத்து விடுவார்கள்.

நாம் நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கை எட்டுவதற்கான வழி முறைகளை சாத்தியமாக்குவது எப்படி என்பது குறித்து ஆக்கப் பூர்வமாக விவாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அவநம்பிக்கையுடன் கேள்விகளை எழுப்புவது தவறானது. அவர்களிடம் மக்கள் எச்சரிக்கை யாகவே இருக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு, பெரியளவிலான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், நமதுபொருளாதார இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உணவு தானிய உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்தால், எஞ்சியுள்ள உணவுதானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதனால், விவசாயிகள் ஏற்றுமதியாளர்களாக மாறுவார்கள். இதேபோல், மீன்களும் ஏற்றுமதி செய்யப்படவேண்டும். நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். இதனால், பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லா விட்டால், பொருளாதாரம் வளராது. எனவே, கிராமங்களில் தானியக்கிடங்குகள் அமைப்பது முதல் நகரங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்துவது வரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப்போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து, இணையத்தொடர்பு, கிராமங்களிலும் அதிவேக இணையதள வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, இந்தியா ஆண்டுதோறும் ரூ.5 – 6 லட்சம் கோடி வரை செலவுசெய்கிறது. இறக்குமதி குறைந்தால், மிகப்பெரிய தொகை சேமிக்கப்படும். உணவு தானியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம். அடுத்ததாக, எண்ணெய் வித்துகள் இறக்குமதி செய்யப்படுவதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்தியபட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல்செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருப்பதை அறிவித்தார். இதையடுத்து, இந்த இலக்கு எவ்வாறு எட்டப்படும் என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

Tags:

Comments are closed.