இந்திய பொருளாதார மதிப்பை 5 லட்சம்கோடி டாலருக்கு உயர்த்தும் அரசின் இலக்கில் அனைத்து மாநிலங்களும் ஆதரவு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலா நகரத்தில் இரண்டுநாள் முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இன்று (நவம்பர் 7) இம்மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இம்மாநாட்டில் இந்தியப் பொருளாதாரவளர்ச்சி குறித்தும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்கள்குறித்தும் பேசினார்.

மோடி பேசுகையில், “இந்தியப் பொருளாதார மதிப்பை 2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம்கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் உதவ வேண்டும். நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் மாவட்டங்களும் வளர்ச்சிக்கான திறன்நிறையையே இருக்கிறது.

எனவே மாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்குள் ஆரோக்கியமான முறையில் போட்டி போட்டுக் கொண்டு வளரவேண்டும். முதலீட்டுக்கான சிறப்பான சூழலை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் தொழில் துறையை சர்வதேசளவுக்கு உயர்த்த முடியும்” என்றார்.

சமூகம், அரசாங்கம், தொழில்துறை, அறிவு ஆகிய நான்கும் தான் வளர்ச்சிக்கான நான்கு சக்கரங்கள் என மோடி கூறினார். எளிதாக தொழில்தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான சர்வதேச பட்டியலில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மோடி தொடங்கிவைத்த இந்த முதலீட்டு மாநாட்டில், சர்வதேச நாடுகளைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.