மற்ற நாடுகளின் 5 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி சரியான வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியாக செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்தும் விஷயத்தில், இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' புதியசாதனையை நிகழ்த்தி உள்ளது. 'பி.எஸ்.எல்.வி., சி — 28' ராக்கெட் மூலம், பிரிட்டன் செயற்கைக் கோள்கள் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

ஆன்டிரிக்ஸ்' நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இஸ்ரோ நிறுவனம், வர்த்தகரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது. இஸ்ரோ, கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஏவிய இந்த ராக்கெட், பிரிட்டன் நாட்டின், 'டிராஸ்டர் மேனேஜ்மென்ட் கன்சல்டேஷன்' என்ற, 1,440 கிலோ எடைகொண்ட, மூன்று செயற்கைக் கோள்கள்; அமெரிக்காவைச் சேர்ந்த, 'சரே' நிறுவனத்தின், 'மைக்ரோ, நானோ' என்ற, இரு செயற்கைக் கோள்களை, பூமியில் இருந்து, 654 கிலோ மீட்டர் உயரத்தில், சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட் காலம், 10 ஆண்டுகள். பூமியின், இயற்கை வளங்கள், மண் வளம், நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுப்பணிகளை, இந்த செயற்கைக் கோள்கள் மேற்கொள்ளும்.

இஸ்ரோ கடைசியாக, பிரான்சின் ஸ்பாட் – 7 (714 கிலோ), ஜெர்மனியின் ஐசாட் (14 கி), கனடாவின் என்.எல்.எஸ் 7.1 (15 கி), என்எல்எஸ் 7.2 (15 கி), சிங்கப்பூரின் வெலாக்ஸ் -1 (7 கி) உள்ளிட்ட 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி -சி23 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இதன் மொத்தஎடை 765 கிலோ ஆகும். இது தான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால், தற்போது அனுப்பியுள்ள 5 செயற்கை கோள்களின் மொத்த எடை 1440 கிலோ ஆகும். இது இஸ்ரோவின் புதியசாதனையாகும். மேலும் இந்த 5 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சேர்த்து, இஸ்ரோ இதுவரை 45 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply