அடியார்களுக்கு ஓர் ஆயுதம் மஹாவிஷ்ணுவின் ஆயுதங்கள் ஐந்து. சுதர்சனம் என்ற சக்கரம், பாஞ்ஜ ஜன்யம் என்ற சங்கு, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீம் என்ற கதை, நந்தகம் என்ற வாள் ஆகிய ஐந்தையும் "பஞ்சாயுதங்கள்' எனப் புகழ்கின்றன வைணவ புராணங்கள்.

இவை உணர்வற்ற வெறும் "படைகள்' அல்ல; ஜீவன் உள்ளவை. இந்த ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரிபவர்கள் வைகுண்ட உலகிலிருக்கும் "நித்ய சூரிகள்' என்ற தேவர்கள்.

இந்த ஐந்து ஆயுதங்களில் முதன்மையானவர் சுதர்சனர். இவருக்கும், திருமாலுக்கும் எள்ளளவும் பேதமில்லை. "சுடராழியான சுதர்சனனே இடர் களையும் மாலவனாகவும் விளங்குகிறான்' என்பது அடியார்களின் கருத்து.

காத்தல் தொழிலைக் கொண்டு தீயவர்களை அழிக்கின்ற கடமையும், பொறுப்பும் விஷ்ணுவுக்கு உண்டு. அந்தப் பணியைச் செய்ய திருமாலுக்குத் துணையாக நிற்கிறது சுதர்சனம் என்ற தெய்வீகச் சக்கரம். துஷ்டர்களிடம் மிகுந்த கோபமுள்ள இவரை சக்கரத்தாழ்வார் என்றும், திருவாழியாழ்வான், ஹேதிராஜன் என்றும் அழைப்பதுண்டு.

திருமாலின் மற்ற ஆயுதங்கள் போன்றதன்று சுதர்சனம். இதை நாம் கூறவில்லை; வைணவ குலத் திலகமான ஸ்வாமி தேசிகனே சொல்கிறார்.

தன்னுடைய ஷோடசாயுத ஸ்தோத்திரத்தில், ""சக்ர ரூபஸ்ய சக்ரிண'' என்கிறார் தேசிகர். அதாவது, "சக்கரத்தாழ்வான் உருக்கொண்ட சக்ரபாணி' என்று பொருள்.

பாஞ்சராத்ர ஆகமத்திலொன்றான, "அஹிர்புக்த்ய ஸம்ஹிதை'யில் பரம்பொருளான நாராயணனே, மேலும் "நானே சுதர்சன உருவெடுத்து அரக்கர்களை அழிக்கிறேன்' என்று  அருளிச்செய்கிறார்.

இந்தக் காரணங்களால்தான், "சுதர்சனத்தை வழிபடுவது மிக அற்புதமான பலன்களை வாரி வழங்கும்' என்று மஹான்கள் ஒரே குரலில் கூறுகின்றனர்.

பெரியாழ்வார், தன் பாசுரத்தில், ""வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு'' என்று போற்றுகிறார். இறைவனை வாழ்த்தும்போது அவன் சுமக்கும் "ஆழி'யையும் "வாழி' என்று வாழ்த்துவதில் ஆழ்வாருக்கு அத்தனை ஆனந்தம்.

சுதர்சன சக்கரம் ""சுடராழி வெண்சங்கேந்தி வாராய்'' என்று பாடி, "நீ வரும்போதே சுதர்சனம் என்ற ஆழியோடும், வெண்சங்கோடும் வர வேண்டும்' என்று திருமாலுக்கு வேண்டுகோள் வைக்கின்றார் நம்மாழ்வார்.

புராணங்களில் பல இடங்களில் சுதர்சன சக்கரத்தின் பெருமை பேசப்படுகிறது. திருமால் நரசிம்மனாக அவதரித்தபோது அவருடைய விரல் நகங்களில் புகுந்து ஹிரண்ய கசிபுவை கிழித்தெறிய உதவியது சுதர்சன சக்கரம்தான்.

தன்னுடைய சீடனான மஹாபலி சக்ரவர்த்தி, வாமனனுக்கு தானம் அளிக்க முன் வந்ததில் சுக்கிரனுக்கு உடன்பாடில்லை. அவர் அதைத் தடுக்க நினைத்தார். அதற்காக வண்டு வடிவம் கொண்டார். தானத்துக்கு நீர் வார்க்க உதவும் கமண்டலத்தின் துவாரத்தில் போய் அதை அடைத்துக் கொண்டார். உடனே பவித்ர தர்ப்பைப் புல்லின் முனையில் போய் உட்கார்ந்தார் சுதர்சனர். அந்தப் புல்லைக் கொண்டு கமண்டலத்தின் துளையை வாமனராக வந்து திருமால் குத்தவே, சுக்கிரன் கண்ணை இழந்தார்.

தொடர்ந்து வசை பாடிய சிசுபாலனை சக்ராயுதத்தால்தான் கண்ண பரமாத்மா அழித்தார்.

கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வி இழுத்தது. அப்போது, "ஆதிமூலமே' என்று அந்தக் களிறு அலறியது. அப்போது அதன் காலைக் கவ்வியிருந்த முதலையை சக்ராயுதத்தால்தான் விஷ்ணு கொன்றார்.

ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று காலையில் உணவு உண்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார் அம்பரீஷன் என்ற மன்னன். அந்த அரசனை சபித்த துர்வாஸ முனிவரை மூவுலகங்களுக்கும் துரத்தியடித்தது சுதர்சன சக்கரம். கடைசியில் வேறு வழியின்றி அம்பரீஷ மஹாராஜாவையே சரணடைந்தார் துர்வாஸர். அதற்குப் பின்னரே சக்கரமும் அவரை துன்புறுத்தாமல் விலகியது.

இந்த நிகழ்ச்சியில் வேறு ஒரு உண்மையும் புதைந்திருக்கிறது. முக்காலமும் உணர்ந்த துர்வாஸருக்கு அம்பரீஷனை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. "தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; அம்பரீஷனின் பெருமையை உலகம் அறிய வேண்டும்' என்று ஆசைப்பட்டார் அந்த மாமுனிவர். அதன் வெளிப்பாடுதான் இந்த விளையாட்டு.

பௌண்டரிக வாஷுதேவன் மற்றும் சீமாலி போன்ற அரக்கர்களின் கர்வத்தை சக்ராயுதம் மூலம்தான் கண்ணபிரான் அடக்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இப்படி ஏராளமான மகிமைகளை உடைய சுதர்சன வழிபாட்டின் பெருமையை நாடறியச் செய்தவர் என்று ஸ்வாமி தேசிகனை குறிப்பிடலாம். இவர் அருளியுள்ள ஷுதர்சனாஷ்டகம், ஷோடசாயுத ஸ்தோத்திரம் ஆகியன சக்கரத்தண்ணலின் பெருமையையும் அருளையும் விரிவாகப் பேசுகின்றன.

உலக வாழ்வில் ஈடுபடுகின்ற யாருக்குமே நேரடி, மறைமுக எதிரிகள் உருவாவது இயல்புதான். பெரும்பாலான எதிர்ப்புகளுக்குக் காரணம் காழ்ப்புணர்ச்சியே. இப்படிப்பட்ட "விரோதி பயத்திலிருந்து' விடுவிக்க வல்லவர் சக்கரத்தாழ்வார். இந்த ஆயுதம் திருமால் ஏவினால் மட்டுமே செல்லும் என்பதில்லை; திருமால் அடியார்களுக்காகவும் சுயமாகவே புறப்படும். அடியார்களின் எதிரிகளைத் தொலைத்துக் கட்டும்.

ஆக இது ஆண்டவனுக்கு மட்டுமல்ல, அடியார்களுக்கும் ஆயுதம்தான். ஆண்டவன் சுதர்சனத்தைத் தாங்குகிறான்; சுதர்சனமோ அடியார்களையே தாங்குகிறது! ஜய ஜய ஸ்ரீ ஷுதர்ஸன! ஜய ஜய ஸ்ரீ ஷுதர்ஸன!

நன்றி ;எம்.என் ஸ்ரீநிவாசன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.