சுப்பாராவின் பொறுப்பில்லாத பேச்சு நாடு இப்போதுசெழிப்பாக இருக்கிறதாம். கிராமப்புற ஏழை மக்கள் தற்போது கறி, பால், முட்டை, காய் கறிகள் என்று சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட தொடங்கி விட்டர்களாம். கிராமப்புற ஏழைமக்களுக்கு வருமானம் பெருகிவிட்டதுதான் காரணமாம். இவர்களுக்கு அதிகமாக

வருமானம் போனதால் தடபுடலாக சாப்பிடுவதால் உணவு பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாம். இதனால் நாட்டில் உணவு பண வீக்கமும் அதிரித்துவருகிறதாம்.

இப்படியாக பொன் மொழியை உதிர்த்தவர் வேறுயாரும் இல்லை. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருக்கும் ''பொருளாதார மேதைகளான'' மன்மோகன்சிங், ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாக்களின் வரிசையில் வரக்கூடிய பாரத ரிசர்வ்வங்கியின் கவர்னராக பொறுப்பில் இருக்கும் சுப்பாராவின் பொறுப்பில்லாத பேச்சுதான் இது.

அதுவும் கர்நாடக மாநில வணிகர்களிடம் (பெடரேஷன் ஆப் கர்நாடகா சேம்பர்ஆப் காமர்ஸ்) பேசியிருக்கிறார். இதைகேட்கும் போது முன்பு ஒருமுறை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ், ''இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அதனால்தான் உலகளவில் உணவு பொருட்களின் விலை உயருகிறது'' என்று உளறியது நினைவுக்குவருகிறது.

கர்நாடக மாநிலத்தில் அடுத்தமாதம் மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்ற இந்தசூழ்நிலையில் சுப்பராவ் அங்கு சென்று இவ்வாறு பேசியதைபார்த்தால், ரிசர்வ் வங்கியின் கவர்னரே காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இன்னொன்று, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான உண்மை காரணமான ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முன்பேர வர்த்தகம் என்பதை மறைத்துவிட்டு, இதுபோல் பொறுப்பில்லாமல் பேசுவதால், ஏற்கனவே விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கபட்டுள்ள மக்களை கிராமப்புற மக்களுக்கு எதிராக திசைத் திருப்பி விடுகிறார் என்றுதான் பொருளாகும்.

இன்றைக்கு கிராமங்களில் வேலை வாய்ப்பும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் நகரத்தைநோக்கி படையெடுக்கும் கிராமப்புற மக்கள், நகரத்திலும் சரியான வருமாம்  இல்லாமல் கறியையும் , முட்டையையும் எங்கிருந்து வாங்குவார்கள். அவர்கள் சாதாரணமாக முன்பெல்லாம் ஒருரூபாய்க்கு வாங்கின முட்டையெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தால் இன்றைக்கு 5 ரூபாய்க்கு எப்படி வாங்கிசாப்பிடுவார்கள்.

கறி, பால், முட்டை, காய் கறிகள் போன்ற சத்தான உணவுப் பொருட்களை தடபுடலாக சாப்பிடும் இந்திய ஏழைமக்கள் என்று சுப்பாராவ் வகையறாக்கள், ஏழைமக்கள் என்று அம்பானி, டாட்டா, பிர்லா, நாராயணமூர்த்தி, கலாநிதி மாறன் போன்றவர்களா என்பதும் புரியவில்லை.

மொத்தத்தில் விலை வாசி உயர்வின் உண்மைகாரணத்தை மறைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்று கிறார்கள் என்பது மட்டும்புரிகிறது.

இவர்கள் நாட்டில் மழைபெய்ததா என்றுகூட தெரியாமல், அரண்மனையில் அமர்ந்து கொண்டு ''அமைச்சரே மாதம் மும்மாரிபொழிந்ததா'' என்று அமைச்சரை கேட்டு தெரிந்து கொள்ளும் அரண்மனை வாசிகள். இவர்களுக்கு நாட்டில் நடப்பது ஒன்றுமேதெரியாது. இவர்களை குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறையை விட்டு, காரைவிட்டு வெளியே இழுத்து வந்து இந்திய கிராமங்களில் விடுங்கள். நடந்தே அந்தகிராமங்களை சுற்றிப் பார்க்கட்டும். அப்போதுதான் கிராமப்புற ஏழைமக்கள் வகைவகையாய் சாப்பிடுகிறார்கள அல்லது செத்துமடிகிறார்களா… என்பது புரியும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.