கிழக்கு வாழ்கிறது, மேற்கு தேய்கிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை குறிப்பிடும் வகையில், அண்ணாதுரை சொன்ன வசனம் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" அது இன்றைய நிலமையில் தமிழகத்துக்கு உள்ளே நடந்து கொண்டிருப்பது கொடுமை.

2 மணி நேர மின்வெட்டு உள்ள சென்னை எங்கே ? 8 முதல் 14 மனி நேர மின்வெட்டு உள்ள கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் எங்கே ? தொழில் நகரங்களாகிய மேற்கு மாவட்டங்கள் கிட்டத்தட்ட இருண்ட மாவட்டங்களாக போய்விட்டதால் எத்தனை பேருக்கு எத்தனை இழப்பு ?

அரசாங்கத்தின் எந்தவிதமான உதவியும் இல்லாமல் சுய உழைப்பின் மூலமாக முன்னுக்கு வந்தது கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள். கோவை வாசிகளுக்கு உழைப்பே தாரக மந்திரம். புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்குவதில் தன்நிகரற்றவர்கள். இயந்திர பாகங்கள், பஞ்சாலைகள், பம்பு செட்டுகள், என்று இந்தியாவின் தலைசிறந்த தொழில் நகரமாக விளங்கி வந்தது கோவை. அதிலும் குறிப்பாக திருப்பூர் என்றாலே பின்னலாடைகளும், உலகப் புகழ் பெற்ற டீ-ஷர்டுகளும்தான் ஞாபகம் வரும். எறும்புகள் போல் சுறுசுறுப்பாய் இயங்கும் நகரம் திருப்பூர், அயராத உழைப்பு, கைநிறைய சம்பளம், வருபவருக்கு எல்லாம் வேலை என்று ஜொலித்துக் கொண்டிருந்த நகரம். ஆனால் இன்று ?

திருப்பூரில் பல கடைகளும், அலுவுலகங்களும் எடுக்க ஆள் இல்லாமல் இருக்கிறதாம். ஏற்கனவே கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுசூழல் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரம், மின்வெட்டினால் மிகப்பெரும் தேக்க நிலைக்கு வந்து விட்டது. வடமாநில பணியாளர்கள் பலர் திரும்பி சென்று விட்டனர். வாங்கிய கடனை கட்ட முடியாமல் பல சிறு மற்றும் மத்திய தொழில் அதிபர்கள் திணருகிறார்கள். சிலரோ, சாதுர்யமாக தங்கள் தொழிற்சாலைகளை குஜரத்திற்கு மாற்றிக் கொண்டு விட்டனர்.

திருப்பூரை சேர்ந்த "டைல்ஸ்" தொழில் செய்யும் இஸ்லாமிய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். குஜராத்தில் இருந்து டைல்ஸ்களை எடுத்து திருப்பூரில் விற்று வருபவர். அவரின் நண்பர்கள் பலர் குஜராத்துக்கு தொழிலை மாற்றிச் சென்றுவிட்டதை குறிப்பிட்டார். "அங்கு அரசாங்கமே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விடுகிறது, ஒரே வாரத்தில் உங்கள் தொழிற்சாலையிலேயே ஒரு ட்ரான்ஸ்பார்மரை நிறுவி விடுகிறார்கள். 24 மணி நேர மின் விநியோகம். இங்கே தமிழகத்தில் மின் சப்ளை கிடைப்பதற்கே ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகிறது, அதில் பலரை வேறு "கவனிக்க: வேறு வேண்டும். 80 சதவீதம் வரை லோன் உடனே கிடைக்கிறது. லஞ்சம் இல்லை. பின்னலாடைகளுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள்களும் வெகு விரைவில் கிடைக்கிறது" என்றார். மேலும் இதனால் குஜராத்தில் மூலப்பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கும், தங்கள் பொருட்களை உள்ளூரிலேயே விற்க முடிகிறது. இதனால் குஜராத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாகிறது என்றார்.

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது ? பாரபட்சமான‌ மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், சூழ்ச்சிக்கார எதிர்கட்சிக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தங்களில் எல்லாமே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் நிலமை கேள்விக்கு உரியதாகியுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் தெருவுக்கு வந்து ஒரு ரூபாய் இட்லிக்காக எதிர்ப்பார்க்கும் நேரம் வந்துவிடும் போல் உள்ளது

Thanks; Enlightened Master

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.