வேதம் வேதத்தை தமிழில் "எழுதாக் கிளவி" என்று அழைப்பார்கள் . அதாவது வேதத்தை எழுதி வைத்துப்படிக்க மாட்டார்கள். வேதத்தை பாராயணம் செய்வார்கள். சொல்லும்விதம், தொனி, உச்சரிப்பு உள்ளிட்டவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்க படும் ரிக்வேதத்தையே பாட்டாகப் பாடும் போது, இறைவனே நேரில்வருவான் என்பது வேதத்தின்சிறப்பு.

இறைவனை கவர்வது, வேதக்கருத்தாக இருப்பின், ரிக்வேதம் சொன்னால் கூட இறைவன் வரவேண்டும். ஆனால் அதை சாமகானமாக இசைக்கப்படும் போது, அந்த கானத்துக்குத்தான் இறைவன் கவரப்படுகிறார் என்றால், அங்கே பொருள்முக்கியமல்ல, ஓசைநயமே முக்கியம் என தெரிகிறது. அமிர்தவர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப்படும் போது, இயற்கையே கவரப்பட்டு, மழைபொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது ஒருவித அதிர் வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத்தருகிறது என்று தெரிகிறது.

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒருவிஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசைநயத்தில் இருப்பதால் தான் அதை வாய்மொழியாகச் சொல்லி தருகிறார்கள் . வேதம்சொல்வதை 'வேத கோஷம்' என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்லவேண்டும். வேதத்தின் ஓசைநயத்தால், பலன்கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தை பற்றிய விஞ்ஞானஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.
அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப் பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக ள் நடந்தன.
வேதமந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞான கூடத்தில் செய்யப் படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன்வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேதமந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதாரபயன்.

இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என பலபெயர்களும்  ரிக்வேதம் வரும். அர்த்தம் என பார்த்தால் பலஇடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத் துவம் இல்லை. ஓசைநயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறுஎதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்துமதத்தை வழி நடத்திச்சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும் வேதத்தை எழுதி, அதற்குப்பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்கவேண்டும்.

யாரும் வேதத்தை உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள் தான் அதைச்செய்த ஆசிரியர்கள் என சொல்லிக்கொள்ளவும் இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும்போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்டசொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும்போது, இயற்கை முதல் இறைவன்வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுயநலத்துக்ககச்க் செய்யப் படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம்ஓதப்பட்டது. அதன்பொருள் அறிந்து அதை ஆராய்ச்சிசெய்வது என்பது ஹிந்துமரபில் கிடையாது.

வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச்சென்று அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம்சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத்தான் அறியமுடியும். அப்படித் தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவிவழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என பெயர். இவற்றை எழுதிப்படிக்கவில்லை.

வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவவாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்மஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவைதேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒருபாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டியசேனாதிபதி ஒருவர் அதைப்பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியை பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒருபார்ப்பனர் வருகிறார். கையில் புரசமரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரதஉணவை உண்பவராகவும் அந்த பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒருவழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம்தோன்றுகிறது, இவரைக்கேட்டு என்ன பயன் என.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பனமகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத்துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.

ரிக்வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிட போராட்டத்தை நம்பும் நம் திராவிடத்தலைவர்கள், இந்தப்பாடலை மறந்தது ஏன்? வேதமே எழுதாக் கல்வி. அந்த கல்வியில் காதல், லௌகீகம் போன்றவற்றைப்பற்றி ஒன்றும் இல்லை. போரும், அதில் வெற்றியும்பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக்கேட்டு தெரிந்துகொள்ளாமல் இருந்திருப்பானா? அது ஆரிய – திராவிடக்கதை சொல்லியிருந்தால், அதை அன்றே தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்களா?

வேதம் என்பது படித்துப் பொருள்சொல்ல அல்ல. அது கதைப்புத்தகமும் அல்ல.அது சரித்திரப்புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தை தெரிந்துகொள்ள. தமிழ் வேதம் என போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன்படுவது என்பதற்கு சாட்சி. பொய்யாமொழி என திருக்குறளை போற்றும் சங்கப்புலவர் வெள்ளி வீதியார், அது செய்யாமொழிக்கு (யாராலும் இயற்றப்படாத வடமொழி வேதம் ) திருவள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யாமொழியும் சரி, பொய்யாமொழியும் சரி, ஆரிய- திராவிடப் போராட்டத்தை சொல்லவில்லை. திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச் சொல்லவில்லை. அது போல வேதமும் சரித்திரப்புத்தகம் அல்ல.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.