சேது கால்வாய் திட்டம்: உண்மை என்ன? எனது , 35 ஆண்டு கடல்சார் பணிகளில்கிடைத்த அனுபவத்தை கொண்டு, சேதுகால்வாய் திட்டத்தின் லாப, நஷ்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிகநீளம் இல்லாத, சூயஸ்கால்வாயும், பனாமா கால்வாயும் இருகடலுக்கு இடையே உள்ள, நிலப்பரப்பில் தோண்டப்பட்டு, இருபுறமும் மதில் எழுப்பப்பட்டு, கடல்மண்ணால், கால்வாய் மேவாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

கால்வாயின் இரண்டுபுறம் உள்ள, கடல் பகுதியின் தரைமட்டம், கால்வாயின் தரைமட்டத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, இயற்கை சீற்றத்தாலும், ஆழ்கடல்மணல் அரிப்பாலும், ஆழ் கடல் நீரோட்டத்தாலும் கால்வாயின் ஆழத்துக்கு எந்தபாதிப்பும் இங்கு இல்லை. இதன் மராமத்துசெலவும் மிகக்குறைவு.

கப்பல் போக்குவரத்து மிக அதிகம். எனவே, வருமானம் அதிகம். சேதுசமுத்திர கால்வாய் திட்டம், இதற்கு எதிர்மாறாக உள்ளது. சேதுகால்வாய் திட்டம் என்பது, நடுக் கடலில் ஆழம்தோண்டி கால்வாய் அமைப்பது. இயற்கையை எதிர்த்து, நாம் போராடமுடியாது. உலகில் உள்ள, அனைத்து கடல்சார் அமைப்புகளுக்கும், பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை பற்றி நன்குதெரியும். உலகிலேயே, மிகஅதிகமான ஆழ்கடல் நீரோட்டம் உள்ளது இப்பகுதி. திசை மாறிமாறி வீசும் காற்றின் வேகமும், இந்தப்பகுதியில் தான் அதிகம்.

நாம் மணல் தோண்டிக்கொண்டே போனால், பின்னால், மணல் மேவிக்கொண்டே இருக்கும். இப்பகுதியில், கடலில், ஆறு மணிக்கு ஒருமுறை, நீர்மட்டம் ஏறும், இறங்கும். இந்தகால்வாயின் நீளம் அதிகமாக இருப்பதால், கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ள நேரத்திற்குள், கால்வாயை கடக்கமுடியாது. காற்றின் வேகம், அதிகப்பட்டால் கப்பல் நேர்கோட்டில் செல்லமுடியாது. எவ்வளவு திறமை வாய்ந்த கேப்டன்களாக இருந்தாலும், தவறு நடந்துவிடும். ஒருகப்பல் சுற்றிவந்தால் நேரமும், எரிபொருளும் கூடுதல்ஆகும் என்பது சரி. 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகப்பலை, இம்மாதிரி பயணித்துவிட்டு தரைதட்ட விடுவரா? சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள எந்த கால் வாயையும், கப்பல்கேப்டன்கள் புறக்கணித்து விடுவர். பின், நாம் கடையை திறந்து என்ன பிரயோஜனம்?

கல்லாபெட்டி நிறைய வேண்டுமல்லவா? முழுசுமையோடு வரும் கப்பல், தரையில் உட்கார்ந்துவிட்டால், பின் இந்த கால்வாயின் பூகோளமே மாறிவிடும். இந்தகால்வாய் மராமத்துக்கு பின் ஆழம் தோண்டிக்கொண்டே இருக்க வேண்டும். குறைந்தது, ஆழம்தோண்டும், 10, "டிரெட்ஜர்' கப்பல்களை வாடகைக்கு எடுக்கவேண்டும். நாம் செலவுசெய்யும் பணத்துக்கு, வட்டிகூட கட்டமுடியாது. பின் ஏது வருமானம்? இப்பிரச்னையை வைத்து, பலர், பாமரமக்களை திசைதிருப்பி அரசியல் செய்கின்றனர். இதுவரை, மக்கள் வரிப் பணத்தை, கடலில் கொட்டியதுபோதும். மக்கள் அறிவாளி ஆகிவிட்டனர். இனி, மக்களை ஏமாற்றமுடியாது. உண்மையிலேயே, தமிழ் மண்ணுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், தென்னக நதிகளை இணைக்க பாடுபடட்டும். மக்களுக்கு, ஓரளவுருசியான குடி தண்ணீராவது கிடைக்கும்.

நன்றி; ஊ.முருகையா, கடற்படை கமாண்டர் (பணி நிறைவு),

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.