பாஜக மாநில பொது செயலாளர் , ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் சேலம் மரவனேரியில் இரவு 3 பேர்கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் நேற்று தகனம் செய்யப் பட்டது. அவரது உடலுக்கு பாஜக அகில இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேசியகுழு உறுப்பினர் இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த கொலையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்தக்கொலையில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. இந்தக்கொலை குறித்து முக்கிய தகவல் ஒன்றை பாஜக.,வின் தேசியகுழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டார்.

பாகிஸ்தான் ஆதரவுபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தக்கொலையில் ஈடுபட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவரதுகருத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்தக்கொலை குறித்து துப்பு துலக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் மகாலி 6 தனிப்படைகளை அமைத்துள்ளார். இந்த தனிப்படையில் துணைகமிஷனர் பாபு, அஸ்தம்பட்டி உதவிகமிஷனர் உதயகுமார். இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், கண்ணன், மணிமாறன், சூர்ய மூர்த்தி, ராஜா மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

தனி படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்டமாக போலீசார் கொலை நடந்த மரவனேரிபகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சுற்றிய ஆட்டோ டிரைவர்கள். கல்லூரி மாணவர்கள் சிலர் மற்றும் அந்த பகுதியில் டீக்கடை நடத்தியவர், ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், அவர்வசித்த வீட்டு வளாகத்தில் குடியிருந்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பலமுக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆடிட்டர் ரமேஷ் பழகுவதற்கு இனியவர் என்பதால் அவர் தனிப்பட்டவிரோதம் மற்றும் குடும்பம், தொழில் விரோதம் காரணமாகவும் அவர் கொலை செய்யப்பட வில்லை என்று தெரிய வந்துள்ளது.

அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து இயக்கத்தின் கொள்கைகளில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்து சிலவிவகாரங்களை தடுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் அவர் கொலைசெய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆடிட்டர் ரமேஷ் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றும் ஜெயராமன் 3 பேர் வந்ததாகவும், அதில் ஒருவன் தன்னை மிரட்டிதாகவும், 2 பேர் ஆடிட்டர் ரமேஷை கொன்றதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

இதனால் பல்வேறுகொலைகளில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்படும் 3 முக்கிய தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

இதனால் அவர்கள் புகைப்படத்தை தமிழ்நாடுமுழுவதும் போலீசார் வெளியிட்டு தேடிவருகிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் மதுரையைச்சேர்ந்த பிலால் மாலிக், பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன். நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில் என்ற இஸ்மாயில் ஆகிய 3பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு தக்கசன்மானம் வழங்கப்படும். இவர்களைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேலூரில் கடந்த 1–ந் தேதி இந்து முன்னணி மாநிலசெயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலையில் ஈடுபட்ட அதே 3 பேர் கும்பல்தான் இந்தக் கொலையிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெள்ளையப்பன் உடலில் 22 வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. ஆடிட்டர் ரமேஷ் உடலில் 24 வெட்டுக் காயங்கள் இருந்து உள்ளன. மேலும் வீச்சரிவாள் மற்றும் இரும்புராடு ஆகியவற்றை கொலையாளிகள் பயன்படுத்தி உள்ளனர். இந்த இரண்டு கொலைகளிலும் வீச்சரிவாள் மற்றும் இரும்பு ராடு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஆயுதங்களை தென்மாவட்ட கொலைக்கும்பல் தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.

போலீசாரால் தேடப்படும் இந்த 3 முக்கிய தீவிரவாதிகளும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களே இந்தக்கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.