இந்து இயக்க நிர்வாகிகள் கொலைவழக்கு தொடர்பாக தேடப்படும் நான்கு பயங்கரவாதிகளை பற்றி தகவல் தந்தால் ரூ. 20 லட்சம் பரிசு தரப்படும் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று

எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்து இயக்க நிர்வாகிகள் கொலை வழக்குத்தொடர்பாக தேடிவருவதாக 4 பயங்கரவாதிகளின் புகைப் படங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

பாஜக மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் சேலத்தில் கடந்த 19-ம் தேதி இரவு கொலைசெய்யப்பட்டார். இந்தக்கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்குமாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.தற்போது சிபிசிஐடி. ஐ.ஜி.மஞ்சு நாதா தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரணைசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொலையை நேரில்பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கொலையாளியின் வரைப் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.இது தவிர, மதுரையில் அத்வானிசெல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35), பிலால்மாலிக் (25), திருநெல்வேலி மேலப் பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38), நாகூரைச் சேர்ந்த அபபுக்கர்சித்திக் (45) ஆகியோர் புகைப்படங்களை போலீஸார் சென்னையில் வெளியிட்டனர்.

இவர்கள் பயங்கரவாத அமைப்புகளில் தொடர் புடையவர்கள் என கூறப்படுவதால், இந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்து வருகின்றனர். மேலும் இவர்களிடம் விசாரித்தால் கொலைக்கான காரணமும், கொலையாளிகள்குறித்த தகவல்களும் வெளிவரும் என்று போலீஸார் கருதியதால், அவர்களை பற்றி தகவல்தெரிந்தால் போலீஸாருக்கு தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த 4 பேரையும் பற்றி தகவல்தெரிவித்தால், ரூ . 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், கொலைவழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு கிடைத்த தகவல்களை 044 -28447739, 97104 55000, 94445 85954 ஆகிய தொலைபேசி, செல்போன் எண்களுக்கு தெரிவிக்கலாம். தகவல்தெரிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் வெடிகுண்டுவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது தங்க இடம்கொடுப்பது ஆபத்தானது. மேலும் அடைக்கலம் கொடுப்பவர்கள் சட்டப்படி தண்டனைக் குரியவர்கள் என்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.