மேலப் பாளையத்தை சேர்ந்த 6 பேரிடம் சிறப்பு புலனாய்வுகுழு போலீசார் விசாரணை  சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் நெல்லை மேலப் பாளையத்தை சேர்ந்த 6 பேரிடம் சிறப்பு புலனாய்வுகுழு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களிடமிருந்து 18 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு உருவாகியுள்ளது .

வேலூரில் சென்ற 1ஆம் தேதி இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் வெள்ளையப்பனும், சேலத்தில் கடந்த 19ஆம் தேதி பாஜக . மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேசும் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். இந்தக்கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.இதை தொடர்ந்து , சி.பி.சி.ஐ.டி ஐஜி மஞ்சு நாதா, சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி மகேஷ் குமார் அகர்வால், எஸ்.பி அன்பு ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் இந்த இரண்டு கொலைவழக்குகள் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35), பிலால்மாலிக் (25), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பன்னா இஸ்மாயில்(38), நாகூரைசேர்ந்த அபுபக்கர் சித்திக் (45) உள்ளிட்ட 4 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்தனர்.இந்நிலையில் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ராமநாத புரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் ரகசியவிசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளுக்கு உதவிகள்செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த இருவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில்வைத்து விசாரணை நடத்தினர்.இவர்கள் கடந்த சிலமாதங்களாக யார், யாருடன் செல்போனில் பேசினர் என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் மேலப்பாளையத்தை சேர்ந்த 6 பேரை சிறப்பு புலனாய்வுகுழு போலீசார் நேற்று பிடித்து நெல்லையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு பெங்களூர் குண்டுவெடிப்பிலும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது.இவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகள், எலெக்ட்ரானிக்பொருட்கள் உள்ளிட்ட 18 கிலோ வெடிமருந்து பொருட்க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை போலீசார் தகுந்த பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இந்த வெடிபொருட்களை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருந்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply