மதுவிலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என தமிழக அரசுக்கு மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மது ஒழிப்பு போராட்டத்தின் போது உயிர்இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுவுக்கு எதிராகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் காந்தியவாதி சசி பெருமாள் பல ஆண்டுகள் போராடி சிறைவாசம் அனுபவித்தும், உண்ணா விரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார். பின்னர் அவர் கடைசிகட்ட போராட்டத்திற்காக தனது உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்.

எனவே தமிழகத்தில் பூரண மது விலக்கு கொள்கையை அறிவிக்க அரசு முன்வரவேண்டும். சசிபெருமாளின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்தபோது, கோவில், பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று வைத்த கோரிக்கையை கூட அரசு அதிகாரிகள் நிறைவேற்ற முன்வரவில்லை.

6 மாத காலத்திற்குள் தமிழக அரசு மதுகொள்கையை குறைக்கவோ அல்லது படிப்படியாக மதுக் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும். இந்த அறிவிப்பு சசிபெருமாளின் உடல் நல்லடக்கம் செய்ய உதவியாக இருக்கும். செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்கும் பணியின்போது அவர் உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் சசி பெருமாளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சசி பெருமாள் தனது கடைசி காலம்வரை போராடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply