இலங்கை கடற்ப்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுளையும் இம்மாத இறுதிக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களில் சிலர், தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்கள்.

மீனவர்களுடன், இலங்கையில் சிறை பிடிக்கப் பட்டுள்ள 62 தமிழக மீன் பிடி படகுகளின் உரிமையாளர்களும் ராமநாத புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 40 பேர் வந்திருந்தனர். இந்த சந்திப்பின் போது, பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜூலு, ஆகியோர் உடன் இருந்தனர்.

2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படை வீரர்களால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, மீனவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். அதன் பின்னர், வெளியே வந்த மீனவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பது குறித்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அவரும் வெளிநாடு சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து நேரில் சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 62 மீன் பிடி படகுகளையும் செப்டம்பர் 1ந் தேதிக்கு முன்னதாக மீட்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால், செப்டம்பர் மாதம் இலங்கை கடற் கரையோர பகுதியில் புயல் வீசக் கூடும். இதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைய வாய்ப்பு உள்ளது.

எனவே, அதற்கு முன்னதாக, சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை மீட்கவேண்டும் என்று தெரிவித்தோம். மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் இம்மாத இறுதிக்குள் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 62 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

Tags:

Leave a Reply