கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்தபோரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதில் முள்ளி வாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடப்பதுபோன்ற காட்சி, கை, கால்களை இழந்தவர்களின் காட்சி, ராணுவம் குண்டுவீசியது, முள்வேலி முகாமில் தமிழர்கள் அடைபட்டு கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மற்றொருபுறத்தில் இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு, லண்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் உயிர்த்தியாகம்செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேரின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் முன்பகுதியில் தமிழ்பெண்ணை குறிக்கும் வகையில் 80டன் கொண்ட ஒரேகல்லினால் ஆன சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழா 8ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்குழு தலைவர் அயனாபுரம் முருகேசன் வரவேற்றுப்பேசுகிறார். புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்குகிறார். இந்த நினைவுமுற்றத்தை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் திறந்துவைத்து பேசுகிறார். கவிஞர் காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் தா.வெள்ளையன் மற்றும் தஞ்சைராமமூர்த்தி, சுப.உதயகுமார், தமிழ்தேச பொதுவுடமை கட்சி நிறுவனர் மணியரசன், டாக்டர் தாயப்பன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். தொடர்ந்து 10-ந் தேதிவரை 3 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.