மிகக்குறைந்த எம்.பி.,க்களை கொண்டகட்சிகள், மத்தியில் ஆட்சி அமைத்து, ஒரு சில மாதங்களிலேயே கவிழ்ந்ததுதான் சரித்திரம் . எனவே, பெரும்பான்மை எம்பி.,க்களை கொண்ட கட்சியால்தான், நிலையான ஆட்சியைத் தரமுடியும்,” என்று , பா.ஜ.க, தேசிய துணைத்தலைவர், வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒவ்வொரு கட்சிக்கும், அந்த கட்சியின் தலைவர் ஒருவரை, பிரதமர்வேட்பாளராக அறிவிக்க, உரிமையுண்டு. அ.தி.மு.க., தரப்பில், ஜெயலலிதாவை, பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 எம்.பி.,க்களை மட்டுமேகொண்ட கட்சிகள், இதற்கு முன், மத்தியில் ஆட்சியமைத்து, அற்ப ஆயுளில், ஆட்சியை இழந்துள்ளன. விபி.சிங், சந்திர சேகர், தேவகவுடா, குஜ்ரால் போன்றோர் தலைமையில், அமைந்த ஆட்சிகளே, இதற்கு உதாரணம். லோக் சபாவில், பெரும்பான்மை எம்பி.,க்கள் ஆதரவுள்ள கட்சி, அமைக்கும் ஆட்சிதான் நிலையாக இருக்கும்.

1999ல், பாஜக., தலைமையில் அமைந்த ஆட்சியில், பாஜக.,வுக்கு, 184 எம்பி.,க்கள் ஆதரவு இருந்தது. இதனால்தான், ஐந்தாண்டுகள் நிலையான ஆட்சியை தர முடிந்தது. எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அடைந்த தோல்வியை விட நடந்துமுடிந்த, 4 மாநில தேர்தலில், படுதோல்வியை அடைந்துள்ளது. குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்களின் ஒட்டுக்களை இழந்து விட்டது. ராஜஸ்தானில். 12 மாவட்டங்களிலும், ம. பி., 15 மாவட்டங்களிலும், ஒருசட்டசபை தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.

“உணவு பாதுகாப்புசட்டம், உங்கள் கையில், உங்கள் பணம் திட்டம்’ போன்ற திட்டங்கள் அமல்செய்யப்பட்ட மாவட்டங்களில் கூட, காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரசை மக்கள் புறக்கணிக்க துவங்கிவிட்டனர். எனவே, தோழமைகட்சிகளும், காங்கிரசைவிட்டு, வெளியேற துவங்கிவிட்டன. “மத்தியில் நிலையான ஆட்சியை, மோடி தலைமையில்தான், அளிக்க முடியும்’ என, மக்களிடம் பரவலானகருத்து உருவாகியுள்ளது. “மோடி சிறந்தமனிதர்; நல்ல நிர்வாகி. அவரது, நிர்வாகத்திறனை பார்த்துதான், குஜராத் மக்கள், அவரை தொடர்ந்து முதல்வராக தேர்வுசெய்து வருகின்றனர்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருப்பது, வரவேற்கத் தக்கது. நாட்டின் மூத்த அரசியல்வாதியான அவர், மக்களின் நாடித்துடிப்பை அறிந்து, இதைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு, வெங்கையாநாயுடு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.