மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால், வருமானவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜக முன்னாள் தேசிய தலைவர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார் :

சண்டீகரில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகசங்க கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது;

வருமானவரி, வணிகவரி, சுங்கவரி, மாவட்ட நிர்வாகம் வசூலிக்கும் உள்ளுர்வரி ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.,விடம் கோரிக்கை வந்துள்ளது. அதற்கு பதிலாக, வர்த்தகப் பரிவர்த்தனைக்காக வரி விதிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவர் புதிதாக கார்வாங்கினாலோ, உணவுவிடுதிக்கு சென்றாலோ, அங்கு அவர்கள் செலவிடும் தொகையில், 2 சதவிதம்வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டால், நமதுநாட்டிற்கு 40 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது வரிகள் மூலம் தற்போது கிடைக்கும் 14 லட்சம்கோடி ரூபாயைவிட பலமடங்கு அதிக வருமானம் கிடைக்கும்.

இதன் மூலம் நாட்டில், கருப்புபணப் புழக்கம் தடைபடும். மேலும், வணிகர்களும் அரசு கண்காணிப்பில் இருந்து விடுபடமுடியும். மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்குவந்ததும், அது குறித்து பரிசீலனைசெய்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக பிளாஸ்டிக் அல்லது சணலால் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதுதொடர்பான திட்டமும் பா.ஜ.க.,விடம் உள்ளது .

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்னைகளை கையாள்வதில் ஐ.மு., கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது.

மத்தியில் அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலோ, அது 4.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று நிதின்கட்கரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.