"மோடி எங்களுக்கு ஒரு சவால்" என்று எந்த வாய் கூறியது? 'மோடியின் பலம் தெரியாமல் அவரைப் பிரதமராக்குவது அழிவில் முடியும்' என்று அதே வாய்தான் கூறுகிறது. ஆம்! சாட்சாத் மவுனகுரு மன்மோகனேதான்! ராமன் இருக்கும்வரை எனது பெயர் இருக்கும், அது போதும் எனக்கு என்றான் ராவணன். ராமன் யார் என்பதில் யாருக்கும்

சந்தேகம் இல்லை. ராவணன் மன்மோகனா, ராகுலா என்பதில்தான் பலத்த போட்டி. மன்மோகன்சிங்கின் பலம், அப்படி ஒன்று இருந்தால், என்ன என்பது நாட்டிற்கே நன்கு தெரியும். இவர் பின்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையை இரு கை விரல்களில் அடக்கிவிடலாம். இவர்தான் பிரதமர் என்பது நமது ஜனநாயகத்தின் பலவீனம். இவரைப்போன்ற சிதம்பரம், கபில்சிபல், மணிசங்கரய்யர் போன்றவர்களின் பிடியில்தான் நமது நாடு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று மோடி போன்ற மக்கள் தலைவர்களைப்பற்றி இவர்கள் இதையும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்.

காங்கிரஸ் கைவசம் வைத்திருக்கும் முகமூடிகள் ஏராளம். பொருளாதாரத்திற்கு மன்மோகன், சிதம்பரம் என்று ஒரு பட்டாளம். இளைஞர்களைக்கவர வேண்டுமே, சச்சினுக்கு வலை விரித்திருக்கிறார்கள். கொள்கைகளைப்பரப்ப ஒரு குத்து ரம்யா. இவர்கள் விளம்புவதை விலாவரியாக அராய்ந்து எழுத இவர்களுக்கென்று சில பத்திரிகையாளர்கள். ஆண்டிகள்கூடி மடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள், இவர்கள் இருப்பதை இடிக்காமல் இருந்தாலே புண்ணியம்.

ஒரு காரியத்தை செய்யமுடியாததற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாம். ஆனால், ஆயிரம் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணத்தை உங்களால் கூற முடியும? நமது பிரதமரால் முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் மோடிதான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

ஏற்கனவே நாம் மீண்டும், மீண்டும் எழுதியதைப்போல தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரசின் திசைதிருப்பும் வேலைகள் அதிகரிக்கும். சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கமுடியுமா? கோத்ரா சம்பவம் ஏதோ நேற்று நடந்ததைப்போல நேர்முக வர்ணனை செய்வார்கள். இது அவர்களது ஐந்தாண்டுத்திட்டமல்ல, ஐம்பதாண்டுகளுக்கு மேலும் இதுதான் தொடரும்.

மவுனகுரு மன்மோகன் மோடியை அழிவு சக்தி என்று கீழ்த்தரமாகவும், நாகரீகமற்ற முறையிலும் விமரிசிப்பதன் நோக்கமே பிஜேபியை சீண்டவேண்டும், அவர்களை தேவையற்ற விவாதங்களுக்கு இழுக்க வேண்டும், தேவையான விவாதங்களை முடக்கவேண்டும் என்பதுதான். இப்போதுகூட நம்மை லாவணிபாட வைத்துவிட்டாரே! இவர் லேசுப்பட்ட மனிதர் அல்ல!

நன்றி தாமரை மலரட்டும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.