வருமான வரி விதிப்பதை ரத்து செய்து விட்டு வேறுவழிகளில் அரசு வருவாய் ஈட்டுவது சாத்தியமானது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது என பாஜக தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள வரி விதிப்பு முறையிலும் சிலமாற்றங்களை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி ஆய்வுசெய்வதற்காக முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தலைமையில் 'விஷன் 2025 கமிட்டி' என்ற பெயரில் ஒருகுழுவை அமைத்து இருக்கிறது.

புனேயைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு வரி சீர்திருத்தங்கள் தொடர்பான சில யோசனைகளை நிதின்கட்காரி குழுவிடம் தெரிவித்துள்ளது. நேர்முக மற்றும் மறைமுக வரிகள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளும் வங்கிகணக்கு நடவடிக்கைகள் மீது குறைந்த அளவு வரிவிதிக்கலாம் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், வரி சீர்திருத்தங்கள் குறித்து தொழில் மற்றும் வர்த்தகதுறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சிலர் தங்கள் யோசனைகளை தெரிவித்து உள்ளனர். வருமானவரி விதிப்பதை ரத்துசெய்துவிட்டு பிற வழிகளில் அரசாங்கம் வருவாய் ஈட்டுவது சாத்தியமானது மட்டுமின்றி, விரும்பத்தக்கதும்கூட என்று சில நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள் நம் நாட்டுக்கு நிலையான, சமமான, வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வரிவிதிப்பு முறை தேவைப்படுவதாக இந்தியவர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சித்தார்த் பிர்லா கூறி உள்ளார். வரிவருவாயை அதிகரிக்கும் நோக்கில், வரிவிதிப்பு எல்லையையும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் வரிசெலுத்துவதில் ஒளிவு மறைவற்ற தன்மையை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மற்றொரு தொழில் அமைப்பின் தலைவரான சரத்ஜைபூரியா கூறுகையில்; தனிநபர் வருமானவரி விகிதத்தை குறைப்பதோ அல்லது ரத்துசெய்வதோ சாத்தியம் தான் என்றும், அப்படி செய்து விட்டு மாற்று வழிகளில் வருவாயை பெருக்குவது பற்றி ஆய்வுசெய்யலாம் என்றும் தெரிவித்தார். பிறவழிகளில் வருவாயை திரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், ஆனால் அந்தவழிகள் மூலம் வருவாய் ஈட்டுவது பற்றி இன்னும் முயற்சி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் கறுப்புபணத்தை ஒழிக்க முடியும் என்றும் சில நிதிநிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

தனி நபர்கள், நிறுவனங்களுக்கான வரிச்சுமையை குறைப்பதால் ஊழலை குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று கிரிஷ்வன்வாரி என்ற நிபுணர் கூறி உள்ளார். அப்படி வரிச் சுமை குறைக்கப்பட்டால் வரி ஏய்ப்புசெய்வது, வருமான வரிகணக்கு தாக்கலில் முறைகேடு செய்வது, சட்டவிரோத பணபரிவர்த்தனை போன்றவற்றில் வரி செலுத்துவோர் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.என்றாலும் வரி விதிப்பு முறையில் பெரியளவில் மாற்றங்களை செய்யும்முன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் விரிவாக ஆய்வுசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.