கறுப்புபணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ்வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 2005ம் ஆண்டுக்குபிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய்நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.

கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு இருக்காது.

இந்நிலையில், புழக்கத்தில் உள்ள, ஆண்டு எண் அச்சிடப்படாத அனைத்துவகை ரூபாய் நோட்டுகளையும் வாபஸ்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூ.500, ரூ.1,000 உள்பட அனைத்து ரூபாய்நோட்டுகளும், வருகிற மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு வாபஸ் பெறப்படுகின்றன. அதன்பிறகு அந்த நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் அவற்றை ஏப்ரல் 1–ந் தேதி முதல், வங்கிகளில்கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

எந்த வங்கியிலும் ரூபாய்நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

மேலும், வருகிற ஜூலை 1–ந் தேதிக்கு பிறகு, மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட 500 ரூபாய் நோட்டுகளையோ, பத்துக்கும்மேற்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளையோ மாற்றுவதற்கு புதிய நிபந்தனையை ரிசர்வ்வங்கி விதித்துள்ளது. அப்படி மாற்றவருபவர்கள், அவர்களின் அடையாளம், முகவரி ஆகியவற்றுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.