மத்தியில் காங்கிரஸை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றவேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக்கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,

வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளோடு, பாஜக.,வுடன் செய்துகொள்ளும் தொகுதி உடன்பாடு அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காகக்கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

‘இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்; அந்த வாக்கெடுப்பில், ஈழத்தில் உள்ள தமிழர்களும், தமிழ்நாட்டின் சிறப்பு முகாம்களில்வசிக்கும் ஈழத்தமிழர்களும் உலகின் பலநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்; அதற்கு ஐ.நா. மன்றம் முயற்சி எடுக்கவேண்டும்’ என்ற இலட்சிய நோக்கத்தை நிறைவேற்ற, மறுமலர்ச்சி திமுக. பொதுக்குழு உறுதி மேற்கொள்கிறது.

காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்திட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்கு முறை குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்தவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வளம்கொழிக்கும் காவிரி பாசன பகுதிகளில் சுற்றுச் சூழலை நாசப்படுத்தி, நிலத்தடி நீரை முற்றாக வெளியேற்றி, கடல் நீரும் உள்ளே நுழைந்து, சுமார் ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 210 ஏக்கர் விளை நிலங்களைப் பாழாக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்த முனைப்புக்காட்டி வருவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

உடனடியாக இத்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை தூரிதப்படுத்தி, காவிரிபாசனப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விவசாய நிலங்களில் குழாய்பதிக்க விவசாயிகளின் கடும் எதிர்ப்பை அலட்சியம் செய்து விட்டு, எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய அரசுக்கு இப்பொதுக் குழு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை கைவிட்டு, தேசியநெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது. என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.