இந்தியாவின் 67–வது குடியரசுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியகொடி ஏற்றி வைத்தார்.

இந்த ஆண்டு குடியரசுதின விழாவில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங் கோயிஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஒருவர்கலந்து கொள்வது இது 5–வது தடவை ஆகும். விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராணுவத்தில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ‘அசோக சக்ரா’ விருதை ஜனாதிபதி வழங்கினார். மோகன்நாத் கோஸ்வாமிக்காக, அவரது மனைவி பாவ்னாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். (இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்புப்படையில் பணியாற்றி வந்த மோகன்நாத் கோஸ்வாமி, கடந்த வருடம் 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்தார்.) இதனைத் தொடர்ந்து டெல்லி ராஜ பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இதுவரை நமது நாட்டின் குடியரசுதின விழா அணிவகுப்பில் அன்னிய படையினர் யாரும் பங்கேற்ற சரித்திரம் கிடையாது. இப்போது முதன் முதலாக இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் படையினர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.


முன்னதாக டெல்லியில் அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். முப்படை ராணுவ அதிகாரிகளும் அஞ்சலிசெலுத்தினர்.

Leave a Reply