''மாணவனுக்கு, அவன்பெற்ற பட்டங்கள் மீதும், மக்களுக்கு அரசுமீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கை இல்லை; இந்த நம்பிக்கை இன்மையை போக்க, அனைவரும் பாடுபடவேண்டும்'' என, மாணவர்களுக்கு, நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்ஆர்எம்., பல்கலையின், ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று, அந்த பல்கலையின் வேந்தர் பாரிவேந்தர், தலைமையில் நடந்தது.

குஜராத் முதல்வரும், பாஜக., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திரமோடி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 10,290 மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் என்னசெய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள். அதேநேரம், தாய்நாட்டின் வளர்ச்சிக்கு, உங்களால் முடிந்தளவு உதவுங்கள்.

ஐதராபாத்தை சேர்ந்த, சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட்டின், தலைமை அதிகாரியாக உள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், நான் கூறுவது, மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள், போன்ற நிறுவனங்களை, நீங்கள் இந்தியாவில் துவக்கி நிர்வகியுங்கள். உயர்கல்வி கிடைக்காமல், வெளியில் நிற்கும் பல இளைஞர்கள் வாழ்வுமுன்னேற, நீங்கள் உதவவேண்டும். நாளந்தா, தட்சசீலா, போன்ற, உலகப் புகழ்பெற்ற பல்கலைகள் இருந்த நாடு இந்தியா; இன்று, குறைந்தளவு மாணவர்களுக்குதான், கல்வி தரமுடிகிறது.மாணவர்கள், அறிவு, திறமை, ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவை யாரும் திருடமுடியாது. பங்கு போட முடியாது.கல்வி, அறிவு, திறமை, ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் மட்டுமில்லாமல், நாட்டினை அடுத்த கட்டத்திற்கு, கொண்டுசெல்ல உதவும்.இது அறிவுசார் உலகம். இதில் நாம் பீடுநடை போட, அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். எஸ்ஆர்எம்., போன்ற பல பல்கலைகள் உருவாகவேண்டும்.

நம்மிடையே அறிவு சார்ந்தோரும், நிதி உதவி அளிப்போரும் உள்ளனர்; இருந்தும், சிலபல்கலைகள் மட்டுமே, இந்தியாவில் உருவாகி உள்ளது. இந்நிலை மாற, தனியார்பங்களிப்பு முக்கியம். இந்தியாவில் உள்ள, எந்த பல்கலையும், உலகளவில், தர வரிசை பட்டியலில் வராதது வருந்தத்தக்கது. நாட்டில், 35 வயதிற்கு குறைவான இளைஞர்கள், 65 சதவீதம். அப்படி இருக்கும் போது, நாம் ஏன் முன்னேறக்கூடாது? நாம் முன்னேற, திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.என், 12 ஆண்டு கால ஆட்சி மற்றும் அனுபவத்தில், முடியும் என்பதை பார்த்துள்ளேன். என் அகராதியில், 'முடியாது' என்ற வார்த்தையே கிடையாது. உங்கள் அகராதியிலும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். உங்கள் மூளையில் உதிக்கக் கூடிய சிந்தனைகளை, பொருளாகமாற்ற, ஆய்வு செய்ய, குஜராத்தில், தனிபல்கலையை உருவாக்கி உள்ளேன்.

எதையும், சிறிதாக யோசிக்காதீர்; பெரிதாக யோசியுங்கள். ஜப்பான் புல்லட்ரயில் இயக்க யோசிக்கும்போது, நாம், ரயில் பெட்டிகளின் அளவை அதிகரிக்கிறோம். அறிவு, வேகம், திறமை, ஆகியமூன்றும் ஒன்றிணைந்தால், வளர்ச்சி அடைந்த இந்தியாவை, நாம் உருவாக்க முடியும்.மாணவனுக்கு, அவனுடைய பட்டங்கள்மீதும், மக்களுக்கு அரசு மீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கையில்லை. இதை போக்க, அனைவரும் பாடுபடவேண்டும். நாம் ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.