சுதந்திர இந்தியா வரலாற்றிலேயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சிதான் “மாபெரும் சீரழிவுக் காலம்’ என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரை அடுத்த கோபா என்ற கிராமத்தில் பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. “ஸ்ரீகமலம்’ என்ற பெயரிலான இந்த அலுவலகத்தை மோடி திங்கள் கிழமை திறந்து வைத்தார். இவ்விழாவில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தவறுகளால் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. சாமானியமனிதனின் பாதுகாப்பு இன்று கேள்விக் குறியாகி விட்டது. சிறியதோ, பெரியதோ ஒவ்வோர் அண்டைநாடும் இந்தியாவை மிரட்டுகிறது.

இவை அனைத்துக்கும் நாட்டின் தலைமையும், அரசும் தான் காரணம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலம் தான் மிகமோசமானது. 10 ஆண்டு காலச்சீரழிவு இது.

எதிர்வரும் மக்களவை தேர்தல் நாட்டின் எதிர் காலத்தை மட்டுமின்றி உலகவிவகாரத்தில் அதன் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கும். இது வெறும்தேர்தல் அல்ல. இது நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்க கூடியதாகும்.

காங்கிரஸ்கூட்டணி ஆட்சியில் வரிசையாக அணிவகுத்து வந்த ஊழல்கள் காரணமாக அரசுக் கருவூலத்துக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது.

பாஜக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராகவேண்டும். ஒவ்வொரு தொண்டனும் தங்கள் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெற்றிக்காக அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடவேண்டும்.

இந்த மக்களவை தேர்தல் பணவீக்கம், ஊழல், நல்லாட்சி ஆகிய மூன்று விவகாரங்களை அடிப்படையாக கொண்டேநடைபெறும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரும் இவைபற்றி பொதுக் கூட்டங்களில் பேசுவதில்லை. இவற்றை எழுப்ப காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால் தான் முக்கியமற்ற விஷயங்களை அக்கட்சியினர் எழுப்பிவருகின்றனர்.

காங்கிரஸ்கட்சி குஜராத்தில் தொடர்ந்து மூன்று பேரவை தேர்தல்களில் தோற்றுவந்துள்ளது. குஜராத் மாநில அரசின் நற்பெயரை குலைக்க பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால், தாமரை மேலும் பெரிதாக மலர்கிறது என்றார் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.