பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு தொலை பேசியில் கொலைமிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை விருகம்பாக்கம், லோகையா காலனியில் வசித்துவருகிறார். அவர், நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார். கூட்டம்முடிந்து நேற்று முன்தினம் இரவு விமானம்மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் தொலைபேசியில் வந்த அழைப்பை அவரது கணவர் சவுந்தர் ராஜன் எடுத்து பேசினார். அதில் பேசிய மர்மநபர், 'அவங்க வீட்டில் இல்லையா?' என்று கேட்டுள்ளார். வீட்டில் இல்லை. மதுரையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார் என்று சவுந்தர் ராஜன் கூறினார்.

உடனே அந்த மர்மநபர், 'அவர்களுக்கு மட்டும்தான் ஆவேசமாக பேசதெரியுமா? எங்களுக்கும் பேசத்தெரியும், எங்களுக்கு துணிச்சல் அதிகம், பார்க்குறீயா விமானநிலையத்தில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவர்களை நாங்கள் எது வேண்டுமானாலும் செய்யமுடியும்' என்று மிரட்டும் வகையில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து தமிழிசை சவுந்தர் ராஜனை தொடர்புகொண்ட அவரது கணவர், வீட்டிற்கு வரும்வழியில் காரை எங்கும் நிறுத்தவேண்டாம் என்று கூறினார். இதுகுறித்து விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தனர்.

இதையடுத்து தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இது குறித்து தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது, நான் கட்சியின் கருத்துகளை பேசுகிறேன், இந்தமிரட்டல் மூலம் எனது கட்சிப்பணிகளை தடுத்துவிட முடியாது. நான் அரசியல் துறையை சார்ந்தவள் மட்டும் கிடையாது. மருத்துவ துறையிலும் பணியாற்றுகிறேன்.

எனவே எனக்கு மனிதாபிமானம் அதிகம். எனக்கு மறைமுக மிரட்டல் விடுத்த அந்த நபரையும் நான் மனிதாபிமான உள்ள மனிதராகவேதான் பார்கிறேன். இதுபோன்ற மிரட்டல்கள் என்பது எனக்கும், பா.ஜனதாவிற்கும் புதிதல்ல. மிரட்டல்கள் எவ்வளவு வந்தாலும் எனது அரசியல்பணி என்றுமே நிற்காது என்று அவர் கூறினார்.

பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ச்சியாக குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முன்னணி நிர்வாகிகள் பலருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அப்போது தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.