கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி பலியானவர்களுக்கு தடையைமீறி அஞ்சலி செலுத்திய பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அத்வானி கோவைக்கு கடந்த 1998–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14–ந் தேதி வந்தார்.அப்போது ஆர்.எஸ்.புரம் பொதுக்கூட்டத்தில் பேச இருந்த அத்வானியை குறி வைத்து குண்டுகள் வைக்கப்பட்டன.மேலும் கோவையின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 58 பேர் பலியானார்கள்.200–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.அத்வானி வருவதற்கு முன்பே குண்டுகள் வெடித்ததால் அவர் அதிலிருந்து தப்பினார். எனவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14–ந் தேதியான கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி பாரதீய ஜனதா உள்பட இந்து அமைப்பினர் கோவை  ஆர்.எஸ்.புரத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதை போல இந்த ஆண்டும் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ்.புரத்தில் 16–வது ஆண்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன.இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, திருவேங்கிடசாமி ரோடு, தலைமை தபால் நிலைய சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மாலை 4 மணி முதல் ஒவ்வொரு இந்து அமைப்பினராக ஊர்வலமாக வந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் சந்திப்பில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் சித்திவிநாயகர் கோவிலிலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறிய ஆட்டோவில் பாரத மாதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அந்த படத்துக்கு கீழ் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலைய சந்திப்பை அடைந்ததும் சாலையில் அனைவரும் உட்கார்ந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டத்தினரிடையே பேசியதாவது:–

 பயங்கரவாதம் மிகப்பெரிய விரோதி.பயங்கரவாதம் எங்கு தலைதூக்கினாலும் மக்கள் அமைதியாக வாழ முடியாது.1998–ம்ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் முஸ்லிம்களும் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் அது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாம் உறுதி ஏற்போம்.எங்கள் நோக்கம் என்னவென்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து மதத்தினரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான்.அப்படி ஒன்று சேர்ந்தால் பயங்கரவாதம் உலகில் எங்கும் தலைதூக்காது.

இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.ஆனால் சோதனை நடைபெறாத ஒரே மாநிலம் எது என்றால் அது குஜராத் மாநிலம் தான்.குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி 120 கோடி மக்களின் தலைவர்.பயங்கரவாதத்தை வேரோடு மண்ணாக அழிக்க வேண்டும்.மதங்களை மறந்து மனங்களை ஒன்றிணைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய இளைஞர்அணி செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர் ஜி,கே.எஸ்.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ஈப்பன் ஜெயசீலன்,மாவட்ட தலைவர் நந்தகுமார்,மோகனவெங்கடாசலம்,செய்தி தொடர்பாளர் கோவை ஸ்ரீதர்,மண்டல தலைவர்

கார்த்தி,சுதாகர்,சரவணன்,ராமு,சண்முகசுந்தரம்,இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன்,பொதுச்செயலாளர் மூகாம்பிகை மணி,செய்தி தொடர்பாளர் சசிக்குமார், விஸ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர்ஆர்.எம்.எஸ்.கணேஷ்,சிவலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் சுமார் 2000 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.