மனிதன் தனது பசிக்காக உணவை மட்டுமே தேடித் திரிந்த காலம் -'கற்காலம்'. இன்று மனிதன் தனது வசதிகளுக்காகவே தேடி, வாழ்வின் உயிர் நாடியான – அன்பு, உறவுகள், பக்தி, பாசம், நேசம் இவைகளைத் தொலைக்கும் காலம் 'தற்காலம்'.

இன்று மனிதன் தேடுவது 'பணம்' மட்டுமே. அதனால் இழப்பது 'குணம்'. அன்று 'கெட்டும் பட்டணம் சேர்' என்றொரு பழமொழி கூறினர்.கிராமங்களில் மழை பொய்த்து உணவுப் பஞ்சம் ஏற்படுகின்ற சில காலங்களுக்காக ஏற்பட்ட பழமொழி.னால் இன்றோ, இளைஞர்கள் கிராமங்களையே, ஏன் அங்கு வசிப்பதையே விரும்புவதில்லை.பாரதி ராஜா போன்ற சிலர் சினிமா எடுப்பதற்காக மட்டும் கிராமங்களை நாடுகின்றனர்.கிராமத்து, இயற்கையான காற்றும், கம்பு, கேழ்வரகு, தினை போன்ற தானியங்களும், உடலுக்கு எவ்வளவு நன்மைகளைத் தருகின்றன என்பதை நகரங்களில் உணவுத் திருவிழாக்களும், பீச்சில் விற்கப்படும் 'கம்பங்கூழ்' போன்றவைகளும் மட்டுமே பறை சாற்றுகின்றன.

ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தில் உள்ள கடன்களை அடைக்க முடியும். 'குடும்பம்' என்பது – தற்போது தாய், தந்தை, தம்பி, தங்கைகளைக் கொண்டது  அல்ல.கணவன் – மனைவி – குழந்தை மட்டுமே. வீட்டுக் கடன் – வாகனக் கடன் – வங்கிக் கடன் – ஆடம்பரக்கடன் – குழந்தையை பெரிய பள்ளியில் – ஆரம்பக் கல்விக்காக அழ அழக் கொண்டு விடும் கடன் -எனப் பலவிதக் கடன்கள்.அன்று பணத்தை எண்ணிச் செலவு செய்து சேர்த்துப் பொருட்களை வாங்கினர். இன்று, எண்ணாமல் – ஒரு கார்டை (கிரடிட் கார்டு) பொருட்கள் வாங்குமிடத்தில் துணிக்கடை – மால்கள் ஏன் ஹோட்டல்களில் கூட கொடுத்து தேய்த்துக்கொள்கின்றனர் – தங்களது சம்பளத்தை!.

தாய் – தந்தையர்க்கு கூட ஒரு அன்பான கடிதத்துடன் – பணம் அனுப்புவதில்லை. மணி – டிரான்ஸ்பர் தான்.வீட்டில் கூட 'அடுப்பு'-பால் – காப்பி காய்ச்சுவதற்கு மட்டுமே. காலை டிபனிலிருந்து – இரவு டிபன் வரை 'காட்டரிங்'தான். மிக சௌகர்யம். வீடு, பாத்திரங்கள் சுத்தம் செய்ய வேலையாள்.பெண்களின் உடை கூட சுருங்கி சௌகர்யமாக 'நைட்டி'.

வெளியே சென்றால் – 'பீட்சா' 'பர்கர்' போன்றவை. விலை அதிகம் என்பதால் உடலுக்கு நல்லது என்ற எண்ணமும் – அதன், 'இரண்டுக்கு ஒன்று ப்ரீ' என்ற விளம்பரங்களும் – மக்களை ஈர்க்கின்றன. இவைகளுக்கு பெயரே 'பாஸ்ட் புட்'!.கூட்ட  நெரிசல்களும், மாசுபட்ட காற்றினாலும், சுகாதாரமற்ற சுற்றுப்புறங்களிலும் தயாரிக்கப்படும் உணவுகள், உடலுக்கு எவ்வளவு கேடுகளை விளைவிக்கின்றன என்பதை எண்ணியே பார்ப்பதில்லை. அதேபோல் பிஸ்கட்டுகளும், இனிப்புகளும், பாட்டில் திரவங்களும், ஐஸ்கிரீம்களும் மிகக் கெடுதலை ஏற்படுத்தும் குழந்தைகளுக்கு.மிகச் சூடான பண்டங்களும் மிகக் குளிர்ச்சியானவையும் நாவுக்கு ருசிதான்!.

ஆனால், – கான்சர், பிரஷர் – சுகர் என வியாதிகள் சர் – சர் என மிகக் குறைந்த வயதிலேயே வந்துவிடுகிறதே! குழந்தைகளும், இன்று பரவலாக எல்லா நட்டிலும் – டி.வி. வீடியோ கேம்ஸ் – இவைகளின் உபயத்தால் மூக்கு கண்ணாடி அணியும் அவலம்! மேலும் எதையோ – உட்கார்ந்த இடத்தில் கொரித்துக்கெண்டு நடைப்பயிற்சி இல்லாததால் – உடல் பருமன் கோளாறு வேறு! இவைகள் தேவைதானா…?சற்றே யோசியுங்களேன்.

குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் பல் விளக்கி -பால் குடித்து – படித்து தன் பள்ளிப் பையை தானே சரி பார்த்து எடுத்து வைத்து – குளித்து சாமி கும்பிட்டு – ஊட்டாமல் தானே உண்டு – பின் உடுத்து பள்ளிக்குப் போகவும் – அங்கு சக மாணவர்களுடன் அன்புடன் பழகவும் பெரியவர்களுக்கு மரியாதை தரவும் – அடக்கத்தையும் – பாடத்தை ஊன்றி கவனிக்கவும் – மதிய உணவை வீணாக்காமல் உண்ணவும், பள்ளியில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கவும் பள்ளி முடிந்தவுடன் வீடு வரவும், சிற்றுண்டி முடித்து வேறு உடுத்து விளையாடவும் அனுப்புங்கள். மாலை ஆறு அல்லது ஆறறைக்கு வீடு திரும்பி கைகால் கழுவி சாமி கும்பிட்டு படிக்கவும் பழக்குங்கள்.

வெற்றியைக் கொண்டாடவும், தோல்வியில் துவளக்கூடாதெனவும் கற்றுத்தாருங்கள். தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, அண்டை, அயலார் உறவு முறைகளிடம் அன்பாக பேசவும், பழகவும் அறிவுறுத்துங்கள். பின்பு பாருங்கள் அவனோ-அவளோ அவர்கள் தான் நம்பர் -1 பாரதக் குடிமக்கள்.

அன்பு- நிதானம் – இயற்கை சூழல் -அளவான இயற்கை உணவு – சரியான உணவுப் பழக்கம் – குழந்தைகளுக்கு மாலையில் விளையாட்டு – பெரியவர்களுக்கு நடைப்பயிற்சி என வாழ்க்கையை வகுத்துப் பாருங்களேன்.சந்தோஷமும் – சமாதானமும் மனதைத் தேடி ஓடிவரும்!.

நன்றி ; ரேவதி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.