மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம், நாதரா கிராமத்தில், சாதாரண விவசாய குடும்பத்தில், 1949 டிசம்பர், 12ல் பிறந்தவர் கோபிநாத் முண்டே. அவரின் தந்தை பாண்டுரங் முண்டே, தாயார் லிம்பா பாய்.

 

புனே பல்கலையில் பி.காம்., படித்தார். கல்லூரியில் படிக்கும்போது, மறைந்த, பா.ஜ., மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் மூலம் அரசியலில் நுழைந்தார். இவர்கள் இருவரும், சிறந்த நண்பர்கள். பிரமோத் உடன் சேர்ந்து, அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் இணைந்தார்.அவசரநிலை பிரகடனத்தின் போது, நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1971ல் ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்து பல பொறுப்புகளை வகித்தார். ஜனதா கட்சி உடைந்து, பா.ஜ., உருவாகிய போது, அதில் இணைந்தார்.

மகாராஷ்டிரா பா.ஜ., இளைஞர் அணி தலைவராக பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து, கட்சியின் தேசிய பொதுச்செயலராகவும் பணியாற்றினார். கடந்த, 1980 85 மற்றும் 1990 முதல், 2009 வரை, ஐந்து முறை மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 1992 முதல், 1995 வரை மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 1995 முதல், 1999 வரை, சிவசேனா பா.ஜ., கூட்டணி ஆட்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்தார்.கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், எம்.பி.,யான இவர், 15வது லோக்சபாவில், எதிர்க் கட்சித் துணைத் தலைவராக பணியாற்றினார். இம்முறை, பீட் லோக் சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல் முறையாக மத்திய அமைச்சராக, கடந்த, 26ம்தேதி பதவியேற்றார்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, மகாராஷ்டிராவில், பிரபலமான தலைவராக இருந்த கோபி நாத் முண்டே, சமீபத்தில் நடந்த லோக் சபா தேர்தலின்போது, மகாராஷ்டிராவில், பாஜக., தலைமையில், பிரமாண்டமான கூட்டணி அமைய காரணமாக இருந்ததோடு, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள, 48 லோக் சபா தொகுதிகளில், 42ல் பா.ஜ., கூட்டணி வெற்றிபெற கடுமையாக பாடுபட்டார்.அத்துடன், இந்த ஆண்டு இறுதியில், மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலின் போது, இவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

நான் கிராமத்தில் இருந்துவந்தேன்

"நான் கிராமத்தில் இருந்துவந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, கிராமங்களுக்கு வளர்ச்சிப் பணிகளைசெய்யும் துறையை பிரதமர் மோடி ஒதுக்கி இருப்பது மிகுந்தமகிழ்ச்சி அளிக்கிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு ஐமு கூட்டணி அரசும் நல்ல சேவையை ஆற்றியுள்ளது'' -மத்திய அமைச்சராக கடந்தமாதம் 27ம் தேதி கோபிநாத் முண்டே தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட போது, அங்கு கூடியிருந்த அதிகாரிகள் இடையே பேசிய முதல்பேச்சு இதுதான். இந்த வெளிப்படையான பேச்சு, எல்லா ஊடகங்களிலும் வெளியானது.இதை பார்த்ததும் இத்துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நெகிழ்ச்சி அடைந்தார். உடனே, ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் அமைந்துள்ள கிரிஷி பவனுக்கு நேரில் சென்று, முண்டேவுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.

மேலும், பதவியேற்ற ஒரு வாரத்திலேயே தனது கனிவான அணுகு முறையால் அமைச்சக அதிகாரிகளிடம் முண்டே நல்லுறவை ஏற்படுத்தினார். இத்துறையின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி கூறுகையில், 'அமைச்சராக முதல் நாள் அலுவலகத்துக்கு வந்தபோது நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொண்டார். அதிகாரிகளிடம் சுமுக உறவை ஏற்படுத்தினார். ஊரகமேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம் ஆகிய 3 அமைச்சகங்களின் நல வாழ்வு திட்டங்களை ஒருங்கிணைத்து கிராமப்புற திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இதை நாட்டிலுள்ள பின்தங்கிய அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் விரும்பினார். கிராமங்களில் குடி நீர், மின்சாரம் மற்றும் பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்'' என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.