ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமைந்ததா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்புக் குறித்த முழுமையான விபரங்களை

வெளியிடாமல், ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு மறைத்து விட்டதால் தான் இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போகிறது என்று தெரிந்ததுமே, நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு அவரை அணுக முயன்றிருந்தா தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன்றவர்களின் மூலம், நரேந்திர மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவர், பலமாதங்கள் முன்னதாகவே காய்களை நகர்த்தியிருந்தார்.

வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போதே, நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்து முதன் முதலாக வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவருடன் முதல் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். அந்த இணைப்பை எப்படி நெருக்கமாக்கிக் கொள்ளலாம் என்று அவர் காத்திருந்த போது, தான், பழம் நழுவில் பாலில் விழுந்தது போல, பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு கிடைத்தது. அந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்த முன்னரே, அவர் எப்படியும் புதுடெல்லி செல்வார் என்பது உறுதியாகிவிட்டது. ஏனென்றால், புதுடெல்லியின் கதவுகள் எப்போது திறக்கும் என்று காத்திருந்த நிலையில், அழைப்பு வந்தவுடன் அது ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கடந்த திங்கட்கிழமை புதுடெல்லி சென்றிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மறுநாள் செவ்வாய்க்கிழமை, ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்திருந்தார். அன்று காலை சுமார் 10.38 மணி தொடக்கம், சுமார் 11 மணி வரையான சுமார் 20 நிமிடங்கள் – ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்கள் வெறும் அறிமுகப்படுத்தலுக்கானதாக – மரியாதை நிமித்தமானதாக மட்டும் அமைந்திருக்கவில்லை. இலங்கை, பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்பான, இந்தியாவுக்கு சவாலான விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் பேசப்பட்டுள்ளன. வெறும் நலன் விசாரிப்பு, சம்பிரதாயமான உரையாடல்கள் என்று கழிந்து போகாமல், குறுகிய நேரச் சந்திப்புகளின் போதே முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டன் மூலம் நரேந்திர மோடி தனது இயல்பை- சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு உணர்த்தியுள்ளார் என்றே தெரிகிறது.

நரேந்திர மோடிக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடந்த சந்திப்பில், பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதுபோலவே, சார்க் நாடுகளின் தலைவர்களுடன் நரேந்திர மோடி என்ன பேசினார் என்ற விபரத்தை, புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்.

இந்த இரண்டு நாடுகளின் கூற்றுகளுக்கும் இடையில் சில விடயங்களில் பொருத்தமின்மை தெரிகிறது.

நல்லிணக்க முயற்சிகள், மீள்கட்டுமான நடிவடிக்கைகள், இருதரப்பு விவகாரங்கள், மற்றும் சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை வலுபடுத்திக் கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள் என்று கூறியது ஜனாதிபதி செயலக அறிக்கை.

ஆனால், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து, அதற்கு அப்பால் செல்ல வேண்டியது குறித்து, தமிழர்கள் சமத்துவமாக, நீதியாக, கௌரவமாக வாழத்தக்க நல்லிணக்க நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வது குறித்து, சம்பூர் அனல் மின் நிலையத்தை விரைவாக அமைப்பது குறித்து, மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து – என்று முக்கியமான பல விவகாரங்கள் பேசப்பட்டன என்பதை உறுதிப்படுத்தினார் சுஜாதா சிங்.

இவையெல்லாம், ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் மிகக் கவனமான முறையில் தவிர்க்கப்பட்டிருந்தன.

ஏனென்றால், இவையனைத்தும் இலங்கை அரசுக்கு நெருக்கடியை, சங்கடத்தை ஏற்படுத்தும் விடயங்கள்.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், அதற்கு அப்பால் செல்வது குறித்தும், நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பது அரசாங்கத்துக்கு சிக்கலான விடயம் தான். இதுபோன்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்படுவது இது தான் முதல்முறை என்றில்லை. மன்மோகன்சிங்கும் அவ்வப்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கும் போதெல்லாம் இதனை வலியுறுத்துவதுண்டு. ஆனால், அதனை ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டு விடுவதே இலங்கை அரசின் வழக்கம். எனினும், இப்போது நரேந்திர மோடி அரசாங்கம் இதனை வலியுறுத்தியுள்ள நிலையில், என்ன செய்வது என்ற குழப்பம் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், நரேந்திர மோடியின் அணுகுமுறை எவ்வாறாக இருக்கும் என்பதை உடனடியாக அனுமானிக்க முடியாது.

மன்மோகன்சிங்கைப் பற்றி ஏற்கனவே தெளிவாக எடை போட்டியிருந்ததால், அவர் என்ன செய்வார், எதைச் செய்யமாட்டார் என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே, அவருக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நரேந்திர மோடி அவ்வாறானவரில்லை என்பதுடன், அவர் தேசிய அரசியலுக்கே புதியவர். மாநில அரசியலில் இருந்த அவர், திடீரென தேசிய அரசியலுக்கு வந்து பிரதமரும் ஆகிவிட்ட நிலையில், அவரது முடிவுகள் வெட்டொன்று துண்டு இரண்டாக இருக்குமா அல்லது நெகழ்ந்து போகும் தன்மை கொண்டதாக இருக்குமா என்பதை, சிறிது காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. ஆனாலும், அவர் முதல் சந்திப்பிலேயே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அதற்கு அப்பால் செல்லவும், அழுத்திக் கூறியிருப்பதை அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஜனாதிபதி செயலகம் இதுபற்றி ஏதும் குறிப்பிடாததில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமன்றி, வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றுதல், படையினர் மேற்கொள்ளும் நில அபகரிப்பை நிறுத்துதல், பொலிஸ் நிர்வாகத்தை மாகாணசபையிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக சில தகவல்கள் கூறுகின்றன. இவையெல்லாம், இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திரா காந்தி காலத்துக்குப் பின்னர், இந்தியாவினது போக்கில் இறுக்கம் தென்படுவதாக சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நரேந்திர மோடி குறித்து எச்சரிக்கையுடன் இருந்த இலங்கை அரசாங்கம், பதவியேற்பு விழா அழைப்பினால் அகமகிழ்ந்து போனாலும், அது தொடர்ச்சியாக நிலைத்திருக்குமா என்ற கேள்வி உள்ளது. புதுடெல்லியில் இருந்து நாடு திரும்பிய மறுநாளே, சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரையும், மின்சக்தி அமைச்சின் செயலரையும் ஜனாதிபதி பணித்துள்ளார். இந்த திட்டம் இவ்வளவு காலமும் கிடப்பில் போடப்பட்டதற்குக் காரணம் இலங்கை அரசாங்கம் தான். இந்த திட்டம் 2016ம் ஆண்டு முடிவடையும் வகையில் ஆரம்பத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இப்போதைய நிலையில், இதற்கா பணிகள் தொடங்கப்பட்டால் கூட 2018ம் ஆண்டில் கூட அது நிறைவு பெறுமா என்பது சந்தேகம் தான்.

சம்பூர் அனல் மின் திட்டத்தை அமைப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

இதுவரை இழுத்தடித்து வந்த இலங்கை இப்போது அதனை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றால், புதுடெல்லியில் தொனியை – போக்கையிட்டு இலங்கை அரசாங்கம் உசாரடைந்துள்ளது என்று தான் அர்த்தம். இதன் மூலம் புதுடெல்லியின் அழுத்தங்களைத் தவிர்க்க அரசாங்கம் முனைகிறதா அல்லது மற்ற விவகாரங்களில் புதுடெல்லியின் தீவிரத்தன்மையைத் தணிக்க முனைகிறதா என்று பார்க்க வேண்டும். அதேவேளை, நரேந்திர மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையானது, அயல்நாடுகளுடனான சிறந்த உறவுகளைப் பேணுவதாக மட்டும் இருக்காமல், பிராந்திய வல்லரசு என்பதையும் இந்தியா நிலைநாட்ட வேண்டும் என்ற கருத்து புதுடெல்லியில் வலுவடைந்துள்ளது,

இது, இலங்கைக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இதுவரை புதுடெல்லியின் கருத்துகளை செவிமடுக்காத இலங்கை அரசாங்கத்தை, இனிமேலும் அவ்வாறு இழுத்தடிக்க நரேந்திர மோடி அரசு அனுமதிக்காது. ஏனென்றால், அது இந்தியாவின் பிராந்திய முதன்மை நிலைக்கு சவாலாக அமையும். அது இலங்கை அரசுக்கு பாதகமான விடயமாகவே இருக்கும். எனவே இந்தியா பிராந்தியத்தில் தனது முதன்மை நிலைக்கு சவாலான – அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எதையும் செய்ய இலஙகையை அனுமதிக்காது. இந்த வகையில் பார்த்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் நரேந்திர மோடியுடன் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதே தவிர, அதற்கப்பால் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கான பெரும் பாய்ச்சல் என்று கூறமுடியாது.

அதேவேளை, இந்திரா காந்தியின் பாணியில், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து நரேந்திர மோடி ஆலாசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அத்தகையதொரு தூதுவர் நியமிக்கப்படுவாரேயோனால், அது இலங்கைக்காக நெருக்குவாரங்களையே அதிகப்படுத்தும். அத்தகைய முடிவை நரேந்திர மோடி எடுத்தால், அது நிச்சயம் இலங்கைக்கான தோல்வியாக இருக்குமே தவிர, இந்தியாவுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியின் வெற்றியாக அமையாது.

நன்றி; தொல்காப்பியன் ..தாய்நாடு .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.