மக்களவைத் தலைவராக பாஜக.,வின் சுமித்ரா மகாஜன் இன்று காலை தேர்வு செய்யப் படவுள்ளார். அவரது பெயரை அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக முன்மொழிந்துள்ளன.

மகாராஷ்ட்ர மாநிலம் ரத்ன கிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் எனும் பகுதியில்1943-ம் ஆண்டு பிறந்தவர் சுமித்ரா. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரைச்சேர்ந்த ஜயந்த் மகாஜன் என்பவரை மணந்த இவர், அதன் பிறகு இந்தூர் பல்கலைக் கழகம் மூலம் எம்.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளை முடித்தார்.

திருமணத்திற்கு பிறகே அரசியலில் ஆர்வம்காட்டிய சுமித்ரா மகாஜன், பாஜக இணைந்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்ததேர்தலில் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ்சந்த் சேத்தியை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதில் இருந்து இந்தூர் தொகுதியின் அசைக்கமுடியாத சக்த்தியாக மாறினார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுமித்ரா மகாஜன், இதுவரை 8 முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஒரேதொகுதியில் 8 முறை தொடர்ந்து வெற்றிபெற்ற ஒரே பெண் தலைவர் இவர் மட்டுமே.

மென்மையான சுபாவம்கொண்டவராக கூறப்படும் சுமித்ரா மகாஜன், பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 லட்சத்து 54 ஆயிரம் வாக்குகள் பெற்ற சுமித்ரா மகாஜன், 4 லட்சத்து 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் மனிதவளத் துறை, தகவல் தொழில்நுட்பம், பெட்ரோலியம் துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றிய அனுபவம்கொண்டவர் சுமித்ரா மகாஜன். இவரது கணவர் ஜயந்த்மகாஜன் இறந்து விட்ட நிலையில், தனது இரு மகன்களுடன் இந்தூரில் வசித்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.